பொதுவாக, மனிதர்களாக இருந்தாலும் சரி, கிருஷ்ண ஜெயந்தி, ராம ஜெயந்தி என கடவுளாக இருந்தாலும் சரி, ஒரு வருடத்திற்கு ஒரு நாளே பிறந்த நாளாகக் கொண்டாடப்படும் வழக்கம் உள்ளது. ஆனால், ராமரின் பக்தரான அனுமன் மட்டும் வருடத்தில் இரண்டு முறை பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறார். இது அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். இதற்கான புராண காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.
புராணக் கதைகள் படி, அனுமன் கார்த்திகை மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்ததாகக் கூறப்படுவதால், அந்த நாளே அவரது பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. ஆனால், சித்திரை மாத பௌர்ணமி தினத்திலும் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுவதற்கான ஒரு புராணக் கதை உள்ளது.
அனுமன் சிறு வயதில் மிகுந்த அதிசய சக்திகள் கொண்டவராக இருந்தபோது, அவர் சூரியனைப் பார்த்து அதை ஒரு பழம் என்று நினைத்து விழுங்க முயன்றார். அப்போது பூமி இருள் அடைந்தது. இதை பார்த்த இந்திரன், தனது வஜ்ராயுதத்தால் அனுமனை தாக்கினார். இதனால் அனுமன் மயக்கம் அடைந்தார்.
இதைக் கண்ட அவருடைய தந்தையான காற்று தேவன் கோபமடைந்து, உலகெங்கும் காற்று ஓடுவதை நிறுத்தினார். இதனால் பூமியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் பிரம்மா சமாதானம் செய்து, அனுமனுக்கு மீண்டும் உயிர் அளிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. எனவே, அன்றைய தினம் அனுமன் மீண்டும் உயிர் பெற்றதற்காக, சித்திரை பௌர்ணமி தினத்தில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு, ஏப்ரல் 12ஆம் தேதி சித்திரை பௌர்ணமி தினத்தில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமன் பிறந்த நாள் என்பது முழுக்க முழுக்க புராணக் கதைகளின் அடிப்படையில் ஒரு நம்பிக்கையாகவே கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.