இந்தியாவை பார்த்து அமெரிக்கா ஏன் இவ்வளவு அச்சப்படுகிறது. இது 2000க்கு முன் இருந்த இந்தியா அல்ல.. தொழில்நுட்ப மேதைகள், அரசியல் ராஜதந்திரிகள் உள்ள நாடு.. இந்திய இளைஞர்கள் இல்லையெனில் அமெரிக்கா இல்லை.. வாலாட்டினால் ஒட்ட நறுக்கப்படும்..!

உலகின் மிகப்பெரிய வல்லரசான, செல்வமும் செல்வாக்கும் கொண்ட அமெரிக்கா, சில ஆண்டுகளுக்கு முன்பு ஏழை, வளரும் நாடு என்று ஒதுக்கப்பட்ட இந்தியாவை கண்டு ஏன் பயப்படுகிறது? முக்கிய காரணங்களில் ஒன்றூ அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு…

modi trump

உலகின் மிகப்பெரிய வல்லரசான, செல்வமும் செல்வாக்கும் கொண்ட அமெரிக்கா, சில ஆண்டுகளுக்கு முன்பு ஏழை, வளரும் நாடு என்று ஒதுக்கப்பட்ட இந்தியாவை கண்டு ஏன் பயப்படுகிறது? முக்கிய காரணங்களில் ஒன்றூ அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு இந்திய பொறியாளர்களால் நிரம்பி வழிகிறது என்பது தான்.

1960 அல்லது 70-களில் வெளிநாட்டு உதவிக்காக காத்திருந்த இந்தியா இன்று இல்லை. 140 கோடி மக்கள் தொகையை கொண்ட இந்தியா, இளம், நன்கு படித்த, தொழில்நுட்பத் திறன் வாய்ந்த பணியாளர்களை கொண்டது. நவீன உலகில் ஒரு நாட்டின் பலம் என்பது ராணுவத்தால் மட்டுமல்ல, சந்தைகள், வளங்கள் மற்றும் மனித உழைப்பு ஆகியவற்றின் கட்டுப்பாட்டாலும் அளவிடப்படுகிறது. அமெரிக்காவின் அச்சம் இங்குதான் தொடங்குகிறது. இந்தியா ஒரு பெரிய சந்தையாகவும், அதே சமயம் ஒரு தீவிரமான போட்டியாளராகவும் வளர்ந்துள்ளது.

தொழில்நுட்ப துறையை எடுத்து கொண்டால் கூகுள் முதல் மைக்ரோசாப்ட் வரை, சக்திவாய்ந்த அமெரிக்க நிறுவனங்கள் இன்று இந்திய வம்சாவளியினரால் வழிநடத்தப்படுகின்றன. இது, தலைமை, கண்டுபிடிப்பு மற்றும் கட்டுப்பாடு ஆகியவை அமெரிக்கர்களிடமே இருக்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பை அச்சுறுத்துகிறது. இந்தியாவின் பணியாளர்கள் குறைந்த ஊதியத்திற்கு மட்டும் வேலை செய்யும் கால் சென்டர் ஊழியர்கள் அல்ல. அவர்கள் செயற்கை நுண்ணறிவு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விண்வெளி ஆய்வு போன்ற நவீன துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள். இந்தியாவின் இந்த மாபெரும் மனிதவளமே அமெரிக்காவை அச்சப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் உலகளாவிய பலத்திற்கு அடித்தளமாக இருந்து வரும் டாலரின் ஆதிக்கம், இப்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் கூட்டமைப்பான BRICS, IMF மற்றும் உலக வங்கி போன்ற அமெரிக்க ஆதிக்கம் கொண்ட நிதி நிறுவனங்களுக்கு சவால் விடுகிறது. சர்வதேச வர்த்தகத்தில் மாற்று நாணயங்களை பயன்படுத்த நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. இதில் இந்தியா ஒரு முக்கிய காரணமாக உள்ளது. டாலருக்கு பதில் தங்கத்தில் வர்த்தகம் செய்யலாம் என்ற ஐடியாவை கொடுத்ததே இந்தியா தான்.

உக்ரைன் போருக்கு பிறகு, ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்தது. டாலருக்கு பதிலாக, பிற நாணயங்களில் வர்த்தகம் செய்வதன் மூலம், அமெரிக்காவின் நிதி அமைப்பை மீறி இந்தியா செயல்படுகிறது. இது, அமெரிக்காவின் பொருளாதார தடைகள் இனி முழுமையாக பலனளிக்காது என்ற செய்தியை உலகுக்கு உணர்த்துகிறது. இந்தியாவை போன்ற ஒரு பெரிய பொருளாதார நாடு டாலர் அல்லாத ஒரு பல்முனை நாணய உலகத்தை நோக்கி நகர்வது, அமெரிக்க ஸ்தாபனத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகும்.

அமெரிக்காவின் விருப்பங்களுக்கு ஏற்ப செயல்படாத ஒரு நாடாக இந்தியா தன்னை நிலைநிறுத்தியுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது, சர்வதேச மோதல்களில் அதன் நடுநிலையான நிலைப்பாடு, மற்றும் அமெரிக்க அழுத்தத்திற்கு அடிபணியாமல் “இல்லை” என்று சொல்லும் இந்தியாவின் திறன் – இவை அனைத்தும் இந்தியா தனக்கென ஒரு தனிப் பாதையை வகுத்துக்கொள்வதை காட்டுகிறது. ஒரு பேரரசு, தனது கூட்டாளிகள் தனது விருப்பத்திற்கு இணங்க செயல்பட வேண்டும் என்று விரும்புகிறது. ஆனால் இந்தியா ஒரு துணை கூட்டாளியாக இருக்க மறுக்கிறது.

சீனாவுடனான அதன் உறவிலும், இந்தியா அமெரிக்காவின் விருப்பத்திற்கு இணங்க, சீனாவின் ஆதிக்கத்தை எதிர்க்கும் ஒரு கருவியாக மாற மறுக்கிறது. இந்தியா, குவாட் போன்ற மேற்கு நாடுகளின் கூட்டமைப்புகளில் பங்கேற்றாலும், அதே சமயம் BRICS மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு போன்ற சீனாவும் இடம்பெறும் தளங்களிலும் உறவை பேணுகிறது. இந்த ராஜதந்திர சமநிலை, இந்தியாவிற்கு அதிக பலத்தை கொடுக்கிறது, அதே நேரத்தில் அமெரிக்காவிற்கு ஒருவித பதற்றத்தை ஏற்படுத்துகிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உலகில், அமெரிக்காவின் ராணுவ, பொருளாதார மற்றும் நிதி ஆதிக்கத்தால் ஒரு ஒற்றை துருவ அமைப்பு நடைமுறையில் இருந்தது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக, அந்த ஆதிக்கத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவை பின்பற்றி பல நாடுகள் தற்போது அமெரிக்காவுக்கு அடிபணியாமல் துணிந்து பதிலடி கொடுத்து வருகின்றன.

இந்தியா தனக்கு மட்டும் ஆதரவாக இல்லாமல், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள பல வளரும் நாடுகளின் குரலாகவும் செயல்படுகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம், வர்த்தக பேச்சுவார்த்தைகளில் சமத்துவம், மற்றும் பருவநிலை மாற்றத்தில் வளர்ந்த நாடுகளின் வரலாற்று பொறுப்பு ஆகியவற்றை வலியுறுத்துவதன் மூலம், உலக அமைப்பு இனி ஒரு நாட்டின் விருப்பத்திற்கு மட்டும் சேவை செய்யாது என்பதை இந்தியா உறுதி செய்கிறது.

மொத்தத்தில் இந்தியாவின் அபரீதமான வளர்ச்சி, வளர்ந்து பொருளாதாரம், மனித வளம், இந்தியர்களின் புத்திசாலித்தனம், இந்திய ஆட்சியாளர்களின் ராஜதந்திரம் ஆகியவை காரணமாக இந்தியாவை பார்த்தாலே தற்போது அமெரிக்காவுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது,