போலே பாபா காலடி மண் எடுப்பதில் பக்தர்கள் போட்டி.. 116 பேர் பலியானதற்கு இதுதான் காரணமா?

By Bala Siva

Published:

உத்தரப்பிரதேச மாநிலத்தில் போலே பாபா என்பவரின் ஆன்மீக சொற்பொழிவை கேட்பதற்காக வந்த பக்தர்கள், கூட்ட நெரிசலில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியாகிய நிலையில் இந்த சம்பவத்துக்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்த ஆன்மீக நிகழ்ச்சிக்கு 80 ஆயிரம் பேர் வரை வருவார்கள் என்று அரசு அதிகாரிகளிடம் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் கூறியுள்ளனர். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு அதைவிட இரு மடங்கு அதிகமாக பொதுமக்கள் கலந்து கொண்டிருப்பதாகவும் அதுதான் இந்த கூட்ட நெரிசலுக்கு காரணமாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஆன்மீக சொற்பொழிவு முடிந்த பிறகு போலே பாபா என்பவர் தனது காரை நோக்கி செல்லும் போது அவருடைய காலடி மண்ணை எடுப்பதற்காக பக்தர்கள் போட்டி போட்டதாகவும் அப்போது ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு விழுந்ததில் ஏற்பட்ட நெரிசல் தான் மிகப்பெரிய அளவில் ஒரு விபத்தை ஏற்படுத்தி விட்டது என்றும் இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

மேலும் பக்தர்கள் நெரிசலில் சிக்கிய போது போலே பாபா மற்றும் அவருடன் வந்தவர்கள் நிற்காமல் சென்றதாகவும் மேலும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களிடமிருந்து இதுவரை இந்த விபத்து குறித்து எந்த அறிக்கையும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

80 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சியில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும் பக்தர்கள் வருவதற்கும் திரும்பி செல்வதற்கும் சரியான ஏற்பாடுகள் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இங்கு கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்ததாகவும் விபத்து நடந்த பிறகு அவசர அவசரமாக அந்த கூடாரங்கள் அகற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த கிராமத்தில் உள்ள மக்கள் பாபாவின் படத்தை வழிபடும் அளவுக்கு அவர் மீது பக்தி கொண்டவர்கள் என்றும் அவரை வழிபட்டால் தங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் தீரும் என்ற நம்பிக்கை இருப்பதால் தான் அவருடைய இந்த ஆன்மீக நிகழ்ச்சிக்கு ஏராளமான பொதுமக்கள் வருகை தந்ததாகவும் கூறப்படுகிறது.

முதலில் பத்து முதல் 15 பேர் காயமடைந்ததாக மட்டும் தான் தகவல் வெளியான நிலையில் அதன் பிறகு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது என்றும் தற்போது வந்துள்ள தகவலின் படி இதுவரை 116 பேர் பலியாகி உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

மேலும் பாபாவின் வழிபாட்டு நிகழ்ச்சியில் ஊடகங்கள் நுழைய அனுமதி இல்லை என்று கூறப்பட்டிருந்ததாகவும் வீடியோ எடுப்பதும் தடை செய்யப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் இந்த விபத்து நடப்பதற்கு முதல் காரணம் பாபாவின் காலடி மண்ணை எடுப்பதற்கு பக்தர்கள் போட்டி போட்டதுதான் என்று கூறவும் தெரிய வந்துள்ளது.