பொதுவாக கடன் வாங்குவதை பாசிட்டிவ் கடன்கள் மற்றும் நெகட்டிவ் கடன்கள் என இரண்டு வகையாக பொருளாதார வல்லுநர்கள் பிரிக்கின்றனர். பாசிட்டிவ் கடன் என்பது நாம் கடன் வாங்கும் ஒரு பொருளின் மதிப்பு அடுத்தடுத்து உயரும் என்றும் குறிப்பாக ரியல் எஸ்டேட், நகை ஆகியவற்றை கடனுக்கு வாங்கினால் அந்த பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதை பாசிட்டிவ் கடன் என்று கூறுகின்றனர்.
நெகட்டிவ் கடன் என்பது பைக் கார் போன்ற வாகனங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதை குறிப்பிடுகின்றனர். இந்த பொருட்கள் நாட்கள் ஆக ஆக விலை குறையும் என்பதால் இவை நெகட்டிவ் கடன் என்று கூறப்படுகிறது.
பொதுவாக இஎம்ஐ முறையில் பொருள் வாங்குவது தற்போது அதிகரித்து வரும் நிலையில் நமக்கு தேவையான ஒரு பொருளை இஎம்ஐ முறையில் வாங்குவது தவறில்லை, ஆனால் அதே நேரத்தில் மற்ற பொருட்களை காசு சேர்த்து வைத்து தான் வாங்க வேண்டும். அது மட்டும் இன்றி இஎம்ஐ மூலம் ஒரு பொருள் வாங்குவதற்கு முன் 20 முதல் 30 சதவீத பணத்தை முன்கூட்டியே கொடுத்துவிட வேண்டும், நம்முடைய சம்பள பணத்தில் அதிகபட்சமாக 40% இஎம்ஐ தொகை தாண்ட கூடாது, அதேபோல் கடன் வாங்குவதற்கு முன் எந்த நிறுவனத்தில் வட்டி குறைவாக இருக்கிறது என்பதை விசாரித்து வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
வாங்கிய கடனை சரியாக செலுத்தும் திறன் இருந்தால் மட்டுமே கடன் வாங்க வேண்டும், கிரெடிட் ஸ்கோர் உயர கடன் உபயோகமாக இருந்தாலும், கடனை சரியாக கட்டி வந்தால் மட்டுமே கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருக்கும். எனவே கடன் வாங்குவதை விட கடனை திருப்பிக் கொடுப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மேலும் கடனாக ஒரு பொருளை வாங்குவதை விட ரொக்கமாக கொடுத்து வாங்கினால் சில சலுகைகள் கிடைக்கும் என்பது மட்டும் இன்றி பேரம் பேசி வாங்கவும் முடியும். எனவே முடிந்த அளவு தேவையான பொருளை கடனாக வாங்காமல் ரொக்கமாக கொடுத்து வாங்க முடியுமா என்பதை யோசிக்க வேண்டும்.
கடன் கிடைக்கிறது என்பதற்காகவும் கிரெடிட் கார்டில் ஸ்வைப் பண்ணி விடலாம் என்பதற்காகவும் தேவையில்லாத பொருட்களை வாங்கி திண்டாட வேண்டாம். ஒவ்வொருவரும் தங்களுடைய வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் முதலில் சேமிப்புக்காக தான் செலவு செய்ய வேண்டும். அதன் பிறகு தான் இஎம்ஐ உள்ளிட்ட செலவுகளுக்கு பணத்தை எடுத்து வைக்க வேண்டும்.
அது மட்டும் இன்றி கடன் வாங்கி இருந்தால் முடிந்த அளவு முன்கூட்டியே அடைக்க வாய்ப்பு இருந்தால் அதை உடனே அடைத்து விட வேண்டும். எப்போதும் கிரெடிட் ஸ்கோர் பாதிக்காத வகையில் நம்முடைய பண பரிவர்த்தனை இருக்க வேண்டும் என்று பொருளாதார ஆலோசகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
