விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகேகூட்டேரிப்பட்டில் டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கூட்டேரிப்பட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இதில் மேற்பார்வையாளராக சங்கர், விற்பனையாளர்களாக திருவேங்கடம், ராமமூர்த்தி ஆகியோர் வேலை செய்கின்றனர். நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் விற்பனை முடிந்ததும் டாஸ்மாக் கடையை பூட்டிவிட்டு 3 பேரும் விற்பனை பணத்தை எடுத்துச் சென்றுள்ளார்கள். இந்த நிலையில் செப்டம்பர் 24ம் தேதி காலையில் காலி மதுபாட்டில்கள் எடுப்பதற்காக சிலர், டாஸ்மாக் கடைக்கு வந்தனர். அப்போது அங்கு டாஸ்மாக் கடையையொட்டி உள்ள பார் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து டாஸ்மாக் கடை ஊழியர்கள் , உடனடியாக கடையின் மேற்பார்வையாளர் சங்கர் மற்றும் மயிலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்து பாரை பார்வையிட்டனர். அப்போது அங்கு டாஸ்மாக் கடையின் சுவரில் ஒருவர் செல்லும் அளவிற்கு துளை இடப்பட்டு இருந்தது. டாஸ்மாக் கடையிலும் மதுபாட்டில்கள் மற்றும் அட்டை பெட்டிகள் சிதறிக்கிடந்தன.
மேலும் கூட்ரிப்பட்டு டாஸ்மாக் கடை மற்றும் அந்த பகுதியை சுற்றிலும் ஏதேனும் தடயம் இருக்கிறதா? என்று பார்த்தனர். அப்போது டாஸ்மாக் கடையில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் ஒரு கடப்பாரை கம்பி, 2 கட்டைப்பையில் 96 மதுபாட்டில்களும் கிடந்துள்ளது. நள்ளிரவில் யாரோ சில மர்மநபர்கள் பார் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு, அந்த வழியாக உள்ளே சென்று கல்லா பெட்டியை திறந்து பார்த்துள்ளனர். அதில் பணம் எதுவும் இல்லாததால், அங்கேயே மதுபாட்டில்களை எடுத்து குடித்துள்ளனர். மேலும் 2 கட்டைப்பையில் 96 மதுபாட்டில்களை கொள்ளையடித்துச்சென்றிருப்பதை கண்டனர்.
மேலும் செல்லும் வழியில் ரோந்து போலீஸ் வாகனத்தின் சத்தத்தை கேட்டு மதுபாட்டில்கள் அடங்கிய 2 பைகளையும், கடப்பாரை கம்பியையும் மர்மநபர்கள் வீசிச்சென்றிருக்கலாம் என தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதோடு மர்மநபர்களை மயிலம் போலீசார் தேடி வருகின்றனர்.