வங்கியின் முக்கிய பணிகளை AI டெக்னாலஜி மூலம் பார்க்கப்படுவதால், வங்கியில் வேலை செய்பவர்கள் இனி வாரத்திற்கு மூன்று நாட்கள் பணி செய்தால் போதும் என அமெரிக்காவின் ஜே.பி. மோர்கன் வங்கியின் சிஇஓ தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
AI டெக்னாலஜியால் வேலையிழப்பு ஏற்படும் என்று கூறப்படும் நிலையில், நிறுவனங்களின் நடவடிக்கைகளை மேம்படுத்த AI உதவுகிறது என்றும், அதே நேரத்தில் பணி செய்யும் ஊழியர்களை ஓய்வு எடுக்க ஏதுவாக இருக்கும் என்றும் ஜே.பி. மோர்கன் வங்கியின் சிஇஓ தெரிவித்தார்.
வங்கியில் பணி செய்பவர்கள் இனி மன அழுத்தம் இல்லாமல் நிம்மதியாக 100 வயது வரை வாழ்வார்கள் என்றும், அவர்கள் வாரத்திற்கு மூன்று அல்லது மூன்றரை நாட்கள் வேலை செய்தால் போதும் என்றும், மீதி நாட்களில் தங்கள் குடும்பத்துடன் செலவழித்து நிம்மதியாக இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தங்கள் வங்கியை பொருத்தவரை தவறுகளை கண்டறிதல், டிரேடிங், ஆய்வு உள்பட அனைத்து துறைகளிலும் AI பயன்படுத்தப்படுவதால், வங்கி ஊழியர்களின் பணிகள் மிகவும் குறைவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். AI இன்னும் பல மடங்கு வளர்ச்சி அடையும் என்றும் கூறிய அவர், டெக்னாலஜி காரணமாக 60 முதல் 70% வேலைப்பளு குறைக்கப்படும் என்றாலும், அதே நேரத்தில் வேலை இழப்பது பெரிய அச்சுறுத்தல் இல்லை என்றும், எப்போதும் டெக்னாலஜிக்கு ஏற்றபடி சமூகம் தன்னை மாற்றி வடிவமைத்து கொள்ளும் என்றும் அவர் பதில் அளித்தார்.