கடந்த ஜுலை மாதம் 30-ம் தேதி விடியல் இப்படி ஒரு கோரமாக இருக்கும் என கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள் வயநாடு மக்கள். பலத்த மழை காரணமாக கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூர்ல்மலை, முண்டக்கை ஆகிய இரண்டு ஊர்களையும் அடியோடு விழுங்கியது நிலச்சரிவு. திரும்பிய பக்கமெல்லாம் மரண ஓலம் கேட்க, அடுத்த சில மணி நேரங்களில் ஒட்டு மொத்த ஊரே காலியானது. கிட்டத்தட்ட 300-க்கும் அதிகமானோரை பலிகொண்ட இந்த இயற்கைப் பேரிடர்களில் பல ஆயிரம் கோடியில் பொருளாதார இழப்பும் ஏற்பட்டது.
மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, உறவுகளை இழந்து தவித்தனர். இப்படி கோர தாண்டவம் ஆடிய நிலச்சரிவில் சிக்கி மீண்டவர்தான் இளம்பெண் ஸ்ருதி. இவரது குடும்பத்தில் உள்ள 9 பேரையும் நிலச்சரிவு பலி வாங்கி மண்ணில் புதைய வைக்க, ஸ்ருதி மட்டும் தப்பித்துள்ளார். ஒரே நாளில் இவரது கனவும் மொத்தமும் சிதைந்தது. புதிதாகக் கட்டிய வீடு, திருமணத்திற்குச் சேர்த்து வைத்த நகை, 4 லட்சம் பணம் என உறவுகள், சொத்துக்களை இழந்து வாடியவருக்கு ஒரே ஆறுதலாக இருந்தவர் இவருக்காக நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை மட்டுமே.
ஆனால் அதிலும ஒரு துயரம் நேர்ந்தது. தனது வருங்காலக் கணவருடன் சோகத்தினை மறந்து மெல்ல மெல்ல மீண்டவருக்கு அடுத்த அடியாக வருங்காலக் கணவர் ஜென்சன் சாலை விபத்தில் உயிரிழக்க ஒட்டுமொத்தமாய் உருக்குலைந்தார் ஸ்ருதி. தன்னம்பிக்கை இழந்து கட்டுப்படுத்த முடியாத சோகத்தில் இருந்தவரைக் கரைசேர்த்தது கேரள அரசு.
மிஸ்டு கால் கொடுத்தால் போதும்.. தேடி வந்து பர்சனல் லோன் வழங்கும் எஸ்.பி.ஐ..!
இவரின் நிலை அறிந்த முதல்வர் பினராயி விஜயன் இனி அவரின் வருங்காலம் சிறக்க அரசு வேலை கிடைக்க வழிவகை செய்யப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் முதல்வரின் இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு கருணை அடிப்படையில் கேரள மாநில வருவாய்த்துறையில் அவருக்கு இளநிலை உதவியாளர் பணி வழங்கி ஆணை வழங்கப்பட்டது.
நேற்று முதல் அவர் பணியில் சேர்ந்தார். பணிக்குச் சேர்ந்தது குறித்து ஸ்ருதி கூறுகையில், நிர்கதியாய் நின்ற எனக்கு அரசு வேலை வழங்கியிருப்பது எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்காக உழைத்த ஒவ்வொருவருக்கும் நன்றி. சாலை விபத்தில் ஜென்சனுடன் பயணித்த இவருக்கும் விபத்தில் உடல் நிலை பாதிப்படைந்த நிலையில் தற்போது கோலூன்றி நடக்கிறார் ஸ்ருதி.