கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த கணிசப்பாக்கம் பகுதியில் ஜிபிஎஸ் கருவியுடன் உலா வந்த கழுகு குறித்து அறிந்து பொதுமக்கள் ஆச்சர்யம் அடைந்தனர். உளவு பார்க்க அனுப்பி வைக்கப்பட்டதா என்று கேள்விகள் எழுந்துள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த கணிசப்பாக்கம் ஊராட்சி, சித்திரைசாவடி கிராமத்தில் நேற்று காலை வட்டமடித்த கழுகு ஒன்று அப்பகுதியில் உள்ள வீட்டின் அருகே உள்ள கல்லின் மேல் அமர்ந்தது. இது அழிந்து வரும் அரிய வகையான பாரு இனத்தை சேர்ந்த கழுகு என்பது தெரியவந்தது.
மேலும் அந்த கழுகின் காலில் பிளாஸ்டிக்கால் ஆன பட்டையும், முதுகுமேல் சிப் ஒன்றும் பொருத்தப்பட்டிருந்தது. கழுகின் மேல் ஜி.பி.எஸ். கருவியை பொருத்தி கண்காணிப்பதாக அப்பகுதியில் வதந்தி பரவியது. உடனே சில இளைஞர்கள் அந்த கழுகை பிடிக்க சென்றபோது அது அங்கிருந்து வேறு இடத்துக்கு தாவிச் சென்றது.
பின்னர் இது குறித்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டத. ஆனால் வனத்துறையினர் யாரும் வராததால் பிற்பகல் 2 மணியளவில் கழுகு அங்கிருந்து பறந்து சென்றது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர் கூறுகையில், கழுகுக்கு உடல்நிலை சரியில்லாததால் இப்பகுதியில் வந்து உட்கார்ந்துள்ளது. அது மிகவும் சோர்வுடன் காணப்பட்டது. மேலும் கழுகை கண்காணிப்பதற்காக அதன் உடலில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளதா? அல்லது வெளிநாட்டினர் உளவு பார்ப்பதற்காக அனுப்பி இருக்கிறார்களோ? என்ற சந்தேகம் உள்ளதாக தெரிவித்தார்.
பின்னர் இதுபற்றி வனத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, வெளிநாட்டில்தான் இதுபோன்று கழுகுகளின் நடமாட்டத்தை அறிவதற்காக அதன் கால் மற்றும் முதுகில் ஜி.பி.எஸ். கருவியை பொருத்தி கண்காணிப்பார்கள். எனவே இந்த கழுகு ஏதாவது வெளி நாட்டில் இருந்து தப்பி வந்து இருக்கலாம் என்றார்.
இது குறித்து வனத்துறை மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜி.பி.எஸ். கருவியுடன் உலா வந்த கழுகால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.