தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஈரோடு உள்ளிட்ட தனது சமீபத்திய அரசியல் மேடைகளில் “களத்திலேயே இல்லாதவர்களை பற்றி எதற்காக பேச வேண்டும்?” என்று குறிப்பிட்டது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாத பொருளாக மாறியுள்ளது. அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்பதில் மிகப்பெரிய மர்மம் நீடிக்கிறது.
ஒரு தரப்பினர் இது பாஜகவை தான் குறிக்கிறது என்கிறார்கள், ஏனெனில் தவெகவின் வருகை பாஜகவின் ‘மாற்று அரசியல்’ என்ற இடத்தை பிடித்துவிடும் என்ற அச்சத்தில் அக்கட்சி உள்ளது. மற்றொரு தரப்பினரோ, இது அதிமுகவைத்தான் மறைமுகமாக சாடுகிறது என்கிறார்கள்; பிரதான எதிர்க்கட்சியாக இருந்தும் மக்கள் பிரச்சினைகளில் அதிமுகவின் வேகம் குறைந்துள்ளதை கிண்டல் செய்யும் விதமாக விஜய் இப்படிப் பேசியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதேசமயம், தம்பிகள் என்று பாசத்தோடு அழைத்தாலும் சீமானின் நாம் தமிழர் கட்சி களத்தில் தனியாக போராடுவதை விஜய் ஒரு பொருட்டாக மதிக்கவில்லையா என்ற கேள்வியும் எழுகிறது.
அடிச்சு கேட்டாலும் விஜய் அந்த ‘சஸ்பென்ஸை’ உடைக்க போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். தனது அரசியல் எதிரிகள் யார் என்பதை வெளிப்படையாக பட்டியலிடுவதன் மூலம் தேவையற்ற வாக்குவாதங்களில் சிக்கிக்கொள்ள அவர் விரும்பவில்லை. ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக, எதிரிகள் தங்களுக்குள் சண்டையிட்டு கொள்ளட்டும், நாம் யாரை வீழ்த்த வேண்டுமோ அவரை மட்டும் குறிவைப்போம் என்ற பாணியை அவர் கையாண்டு வருகிறார்.
பாஜகவோ, அதிமுகவோ அல்லது சீமானோ விஜய்யை நோக்கி எவ்வளவு விமர்சனங்களை முன்வைத்தாலும், அவர்களுக்கு பதிலடி தந்து அவர்களின் அரசியல் முக்கியத்துவத்தை உயர்த்த விஜய் தயாராக இல்லை. இந்த மௌனம் மற்ற கட்சிகளை மிகுந்த எரிச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது, ஏனெனில் விஜய்யின் இந்த கண்டுகொள்ளாத போக்கு அவர்களை களத்தில் இல்லாதவர்களாகவே சித்தரிக்கிறது.
விஜய்யின் தற்போதைய முழு நேர குறி திமுக மட்டும்தான் என்பதில் துளிகூட சந்தேகமில்லை. தனது உரையின் ஒவ்வொரு வரியிலும் ஆளுங்கட்சியான திமுகவின் நிர்வாக சீர்கேடுகள், தேர்தல் வாக்குறுதி மீறல்கள் மற்றும் குடும்ப அரசியல் குறித்து மட்டுமே அவர் மிக கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார். குறிப்பாக, முதல்வர் ஸ்டாலினை நேரடியாக இலக்கு வைத்து தாக்குவது விஜய்யின் திட்டமிட்ட வியூகமாக கருதப்படுகிறது.
ஆட்சியில் இருப்பவரை வீழ்த்தினால் மட்டுமே அரியணை ஏற முடியும் என்ற தெளிவான புரிதல் அவரிடம் உள்ளது. திமுகவின் ‘விடியல்’ முழக்கத்தை தனது வார்த்தை ஜாலங்களால் உடைத்து எறியும் விஜய், திராவிட மாடல் அரசியலுக்கு மாற்றாக தனது தவெகவின் கொள்கைகளை முன்வைக்க போராடுகிறார்.
இங்கு கவனிக்கத்தக்க மற்றொரு விஷயம் என்னவென்றால், விஜய் முதல்வர் ஸ்டாலினை தாக்கும் அதே வேளையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினையோ அல்லது மற்ற மூத்த அமைச்சர்களையோ பெரிய அளவில் கண்டுகொள்வதில்லை. வழக்கமாக அரசியல் கட்சிகள் அமைச்சர்களின் ஊழல் புகார்களை பட்டியலிட்டு போராடும், ஆனால் விஜய் அந்த வட்டாரங்களுக்குள் செல்லாமல் ஒட்டுமொத்த அரசாங்கத்தின் தலைமையை பிடித்து ஆட்டுகிறார்.
உதயநிதியுடன் தனிப்பட்ட நட்பு இருந்தாலோ அல்லது அவரை ஒரு அரசியல் போட்டியாளராக கூட கருதவில்லையோ என்ற பிம்பத்தை இது உருவாக்குகிறது. அமைச்சர்களை விமர்சிப்பதன் மூலம் தனது பேச்சின் வீரியம் குறைந்துவிடக்கூடாது என்பதற்காக, தலைமையைத் தாக்கினால் உடல் தானாக சாயும் என்ற உத்தியை அவர் பின்பற்றுகிறார்.
இது ஒரு புதுமாதிரியான அரசியலாக பார்க்கப்படுகிறது. வழக்கமான அரசியல் மேடைகளில் எதிரே இருப்பவர்களை பெயர் சொல்லித் திட்டுவது, உருவ கேலி செய்வது போன்ற செயல்களில் ஈடுபடாமல், மிக நிதானமாக அதே சமயம் ஆழமான கருத்துகளுடன் விஜய் களம் காண்கிறார். “தீய சக்தி” என்று அவர் பயன்படுத்திய வார்த்தை கூட ஒரு வரலாற்று தொடர்ச்சிதான் என்றாலும், அதை அவர் கையாண்ட விதம் நவீனமாக இருந்தது. மற்ற கட்சிகள் தங்களை பற்றி விஜய் பேசமாட்டார் என்ற விரக்தியில் இருக்கும்போது, அவர் திமுகவின் அஸ்திவாரத்தை நோக்கியே தனது அரசியல் அம்புகளை எய்து வருகிறார். இந்த “ஒரே குறி” அரசியல், தொண்டர்கள் மத்தியில் ஒரு தெளிவான இலக்கை உருவாக்குகிறது, இது மற்ற சிதறிய வாக்குகள் தன் பக்கம் வரும் என விஜய் நம்புகிறார்.
இறுதிவரை இந்த ரகசியத்தைத் தவெக தலைவர் உடைக்கப்போவதில்லை. 2026 தேர்தல் களம் நெருங்கும்போது, கூட்டணி குறித்த பேச்சுகள் வரும்போது மட்டுமே அவர் மற்ற கட்சிகளை பற்றி வாய் திறக்க வாய்ப்புள்ளது. அதுவரை திமுகவை மட்டுமே எதிர்த்துப் பேசி, தான் மட்டுமே உண்மையான மாற்று என்ற பிம்பத்தை கட்டமைக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
களத்தில் இல்லாதவர்கள் என்று அவர் யாரை சொன்னாரோ, அவர்கள் தங்களை நிரூபிக்க போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விஜய்யின் இந்த சாமர்த்தியமான அரசியல் சதுரங்கம் தமிழகத்தில் ஒரு புதிய நேரேட்டிவை உருவாக்கியுள்ளது. இது அவருக்கு வெற்றியை தருமா அல்லது மற்ற கட்சிகளை ஒன்றிணைத்து அவருக்கு எதிராகத் திருப்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
