2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அவர்களது சில கருத்துக்களை பார்ப்போம்.
தமிழக அரசியலில் எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஒரு புதிய வரவாக வந்து, மக்களிடையே இவ்வளவு பெரிய வரவேற்பை பெற்றிருப்பவர் நடிகர் விஜய் மட்டுமே. தற்போதைய கள நிலவரப்படி, அரசியலுக்கு வந்த மற்ற நடிகர்களை விட விஜய்க்கு தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, அவர் தனது திரைத்துறையின் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலில் குதித்திருப்பது இளைஞர்கள் மத்தியில் ஒரு பெரிய ‘வெறியை’ உண்டாக்கியுள்ளது. 30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள பெண்கள் விஜய்க்கு வாக்களிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விஜய்யின் தற்போதைய வாக்கு சதவீதம் சுமார் 20 முதல் 28 சதவீதம் வரை இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. இதில் 10 முதல் 12 சதவீதம் வரை அவரது தீவிரமான ரசிகர்களின் வாக்குகள் இருக்கும். மீதமுள்ள வாக்குகள் மாற்றத்தை விரும்பும் பொதுமக்களுடையது. தமிழகத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க 37 முதல் 40 சதவீத வாக்குகள் தேவைப்படும் நிலையில், விஜய் இந்த இலக்கை அடைய இன்னும் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. முதியவர்கள் மத்தியில் அவர் இன்னும் ஒரு சினிமா நடிகராகவே பார்க்கப்படுவது அவருக்கு ஒரு சவாலாக உள்ளது.
விஜய் தேர்தலில் தனித்து போட்டியிடும் பட்சத்தில், ஒரு சில தொகுதிகளில் 30 முதல் 40 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற வாய்ப்புள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களிலும், சென்னை போன்ற பெருநகரங்களிலும் உள்ள சில தொகுதிகளில் அவர் வெற்றி பெற்று, சட்டசபைக்குள் நுழையக்கூடும். ஒருவேளை காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால், இந்த எண்ணிக்கை இரட்டை இலக்கமாக மாறவும் வாய்ப்புண்டு.
விஜய் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளோ அல்லது வருமான வரித்துறை தொடர்பான செய்திகளோ பொதுமக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. “இரண்டு கழகங்களும் மாறி மாறி ஆட்சி செய்துவிட்டன, ஒரு மாற்றம் இருக்கட்டுமே” என்ற மனோபாவமே மக்களிடம் மேலோங்கி இருக்கிறது. ஆனால், விஜய் வெறும் Gen-Z அரசியலை மட்டும் செய்யாமல், பழைய காலத்து அரசியலை போல மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்க வேண்டும். ட்விட்டர் அறிக்கைகளை தாண்டி, பொது பிரச்சனைகளில் தனது கருத்துக்களை துணிச்சலாக முன்வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் வருகை பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது. திமுகவின் வாக்கு வங்கியில் இருந்து ஒரு 7 சதவீத வாக்குகள் விஜய்க்கு சென்றாலும், திமுக 40 சதவீத வாக்குகளுடன் மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. அப்படி ஒரு சூழல் அமைந்தால், எதிர்க்கட்சி வாக்குகளை பிரித்து திமுக மீண்டும் வெற்றி பெற காரணமாக இருந்த ‘கிங் மேக்கர்’ என்று விஜய் அழைக்கப்படுவார். ஆனால், அவர் ‘கிங்’ ஆக மாற வேண்டுமானால் கிராமப்புற வாக்குகளையும், முதியவர்களின் நம்பிக்கையையும் பெற வேண்டியது அவசியம்.
விஜய் இன்னும் தீவிரமான களப்பணியில் இறங்க வேண்டும் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. பட்ஜெட் போன்ற தேசிய பிரச்சனைகள் முதல் உள்ளூர் சமூக பிரச்சனைகள் வரை அனைத்திற்கும் அவர் குரல் கொடுக்க வேண்டும். இளைஞர்கள் காட்டும் ஆர்ப்பரிப்பு தேர்தலின் போது வாக்குகளாக மாற வேண்டுமானால், விஜய் ஒரு முழுநேர அரசியல்வாதியாக தன்னை மக்களிடம் நிலைநிறுத்தி கொள்ள வேண்டும். 2026 தேர்தல் களம் விஜய்க்கு ஒரு மிகப்பெரிய அக்னிப்பரிட்சையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
