கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க நான் உதவுகிறேன், அதேபோல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள் என நேரடியாகவே விஜய் தரப்பில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு மெசேஜ் போயிருப்பதாகவும், அதற்கு காங்கிரஸ் கட்சியும் ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், ஆரம்பத்தில் இருந்தே அ.தி.மு.க.வை எப்படி விமர்சனம் செய்யவில்லையோ, அதேபோல் காங்கிரஸ் கட்சியையும் விமர்சனம் செய்யவில்லை. பா.ஜ.க.வை தனது கொள்கை எதிரி என்று குறிப்பிட்ட விஜய், தி.மு.க.வை தனது அரசியல் எதிரி என்றும் குறிப்பிட்டார். ஆனால், அதே நேரத்தில், தமிழகத்தில் இதற்கு முன்பு ஆட்சி செய்த அ.தி.மு.க.வையும், மத்தியில் இதற்கு முன்பு ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியையும் அவர் எந்தவிதமான விமர்சனமும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அவர் இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், அ.தி.மு.க, பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்துவிட்டதால், அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக காங்கிரஸ் கட்சிதான் விஜய்யின் ஆப்ஷனாக உள்ளது.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, தி.மு.க. கூட்டணியில் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காது என்பது இப்போதே தெரிந்துவிட்டது. பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. உள்ளே வந்தால், காங்கிரஸுக்கு கொடுக்கும் தொகுதிகளைத்தான் மு.க. ஸ்டாலின் கை வைப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது.
ஆனால், அதே நேரத்தில், விஜய் கூட்டணிக்கு சென்றால் 50 முதல் 60 தொகுதிகள் கிடைக்கும், ஆட்சியிலும் பங்கு பெறலாம் என்ற எண்ணம் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுவிட்டது. அதுமட்டுமின்றி, காங்கிரஸ் தலைமைக்கு கேரளாவில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. கேரளாவில் விஜய்க்கு என ஏராளமான ரசிகர்கள் இருப்பதால், விஜய் ஒரே ஒரு நாள் பிரச்சாரம் செய்தால் போதும், ஒட்டுமொத்த ரசிகர்களும் காங்கிரஸ் கட்சிக்குத்தான் ஆதரவு தெரிவிப்பார்கள். அந்த வகையில், காங்கிரஸ் கட்சி கேரளாவில் மிக எளிதாக ஆட்சியை பிடித்துவிடும். இதையெல்லாம் கணக்கு வைத்து பார்த்துதான் காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
“காங்கிரஸ் கேரளாவில் ஆட்சி அமைக்க நான் உதவி செய்கிறேன், தமிழகத்தில் நான் ஆட்சி அமைக்க நீங்கள் உதவி செய்யுங்கள்” என்ற நிபந்தனையுடன் விஜய் தரப்பு பேச்சு வார்த்தையை தொடங்கி இருப்பதாகவும், அதற்கு கிட்டத்தட்ட காங்கிரஸ் கட்சி ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.
தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற தற்போது காமராஜர் பிரச்சனை அந்த கட்சிக்குக் கை கொடுக்கிறது. “கருணாநிதியின் கையை பிடித்துக் கொண்டு காமராஜர் கெஞ்சினார்” என்று திருச்சி சிவா பேசியது அவரது தனிப்பட்ட செயலா அல்லது தி.மு.க. தலைமையின் சம்மதத்துடன் தான் பேசினாரா என்ற எண்ணமும் தற்போது காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே திருச்சி வேலுச்சாமி, மாணிக் தாக்கூர், ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் பிரபலங்கள் திருச்சி சிவாவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். தி.மு.க. தலைமையையும் விமர்சனம் செய்ய தயங்காது என்றுதான் கூறப்பட்டு வருகிறது.
மொத்தத்தில், தி.மு.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுவிட்டதாகவும், அந்த விரிசல் அந்த கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும், தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தால், அந்த கூட்டணி மிகப்பெரிய அளவில் மக்கள் செல்வாக்கை பெரும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
