தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கிய நகர்வுகள் தற்போதே அனல் பறக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக, நடிகர் விஜய் தனது ‘தமிழக வெற்றிக் கழகம்’ மாநாட்டில் “ஆட்சியில் பங்கு” என்ற அஸ்திரத்தை வீசியது, திராவிட கட்சிகளின் கோட்டையை உலுக்கியுள்ளது. முதல் தேர்தலிலேயே எந்தவொரு பெரிய கட்சியும் தன்னிடம் கூட்டணிக்கு வராது என்பது விஜய்க்கு நன்றாக தெரிந்திருந்தாலும், அவர் வீசிய இந்த ஒரு வார்த்தை திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு அணிகளிலும் உள்ள சிறிய கட்சிகளை யோசிக்க வைத்துள்ளது. ஒரு புதிய கட்சி ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளத் தயார் என அறிவிப்பது, தங்களை வெறும் ‘சீட்’ வாங்கும் கட்சிகளாக மட்டுமே நடத்தும் திராவிட பேரியக்கங்களின் கீழ் இருக்கும் கூட்டணி கட்சிகளின் மனநிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் இந்த அறிவிப்பு அவர் எதிர்பார்த்தது போலவே திமுக தலைமையிலான கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக திமுகவுடன் பயணிக்கும் விசிக மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகள், தங்களுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை மறைமுகமாகவும் நேரடியாகவும் எழுப்ப தொடங்கியுள்ளன. “கூட்டணி வேறு, ஆட்சி வேறு” என்ற திமுகவின் பாரம்பரிய நிலைப்பாட்டிற்கு இது பெரும் சவாலாக மாறியுள்ளது. விஜய்யின் இந்த தந்திரத்தால், திமுக தனது கூட்டணி கட்சிகளை திருப்திப்படுத்த வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. இதுவே விஜய்யின் முதல் ராஜதந்திர வெற்றியாக அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.
மறுபுறம், அதிமுகவிலும் இந்த ‘ஆட்சியில் பங்கு’ விவகாரம் சலனத்தை ஏற்படுத்த தவறவில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பாஜக உள்ளிட்ட கட்சிகள், விஜய்யின் இந்த தாராள மனப்பான்மையை முன்வைத்து அதிமுகவிடமும் அதிக இடங்களையும், அதிகார பகிர்வையும் எதிர்பார்க்க தொடங்கியுள்ளன. இதுவரை ‘பெரியண்ணன்’ மனப்பான்மையுடன் கையாண்டு வந்த அதிமுக, இப்போது தனது கூட்டணி கதவுகளை இன்னும் அகல திறக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனவே தேர்தலுக்கு முன்போ அல்லது தேர்தலுக்கு பின்னரோ ஆட்சியில் பங்கு என்ற கருத்துக்கு உடன்பட்டு ஆக வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது.
விஜய்யின் இந்த வியூகம் என்பது திராவிட கட்சிகளை தனிமைப்படுத்துவது மட்டுமல்லாமல், வலுவான ஒரு ‘மூன்றாவது அணி’ அமைப்பதற்கான அடித்தளமாகும். ஒரு புதிய கட்சி தனது கொள்கைகளை விட, அதிகாரத்தை பகிர்ந்து கொள்வோம் என்று சொல்லும் போது, அது சிறிய கட்சிகளுக்கு ஒரு மிகப்பெரிய கவர்ச்சிகரமான வாய்ப்பாக தெரிகிறது. கூட்டணியை உறுதி செய்வதற்கு முன்பே இத்தகைய ஒரு ‘ஆஃபரை’ முன்வைத்ததன் மூலம், தேர்தல் வரை திமுக மற்றும் அதிமுக அணிகளில் ஒரு நிலையற்ற தன்மையை நீடிக்க செய்வதே விஜய்யின் திட்டம். இந்த திட்டம் தற்போது சக்சஸ் ஆகிவிட்டது.
குறிப்பாக திமுக கூட்டணியில் தற்போது விழுந்துள்ள விரிசல் விஜய்க்கு சாதகமான ஒன்றாகவே முடிகிறது. காங்கிரஸ் மற்றும் விசிக போன்ற கட்சிகள் சீட் ஒதுக்கீட்டில் அதிருப்தி அடைந்தால், அவர்களுக்கு ‘ஆட்சியில் பங்கு’ என்ற பிளான்-பி விஜய்யிடம் தயாராக உள்ளது. இது திமுகவின் தேர்தல் வியூகத்தை மொத்தமாக குலைக்கும் சக்தி கொண்டது. விஜய்யின் இந்த ஒரு அஸ்திரத்தால், தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருந்து வந்த ‘ஒற்றைக்கட்சி ஆட்சி’ என்ற முறைக்கு ஒரு கேள்விக்குறி எழுந்துள்ளது. கூட்டணி தர்மத்தை விட, அதிகார பகிர்வு என்ற கோஷம் 2026 தேர்தலின் மையப்பொருளாக மாறியுள்ளது.
இறுதியாக, விஜய் அரசியலுக்கு வந்த வேகத்தை விட, அவர் காட்டும் விவேகம் திராவிட கட்சிகளை நிலைகுலைய செய்துள்ளது. எடப்பாடியும் ஸ்டாலினும் தொகுதி பங்கீட்டில் கவனம் செலுத்தும் போது, விஜய் மொத்த அரசியல் கலாச்சாரத்தையே மாற்ற துணிகிறார். “ஆட்சியில் பங்கு” என்பது வெறும் தேர்தல் வாக்குறுதி அல்ல, அது பலவீனமாக இருக்கும் மற்ற கட்சிகளுக்கு அவர் வீசியுள்ள ஒரு தூண்டில். அந்த தூண்டிலில் யார் சிக்குகிறார்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும், அது ஏற்கனவே இருக்கும் மெகா கூட்டணிகளின் அஸ்திவாரத்தை ஆட்டி பார்க்க தொடங்கிவிட்டது என்பதே உண்மை. 2026 தேர்தல் களம் விஜய்யின் இந்த ராஜதந்திரத்தால் இன்னும் பல திருப்பங்களை காணப்போகிறது என அரசியல் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
