நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் அரசியல் களத்தில் இறங்கியது முதல், அதன் ‘விஜய் வாரியர்ஸ்’ எனப்படும் தொண்டர் படை தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் தவெக நிர்வாகிகள் விடுத்த கடுமையான எச்சரிக்கைகள் மூலம், இந்த வாரியர்ஸ் குழுவின் வீரியமும், அதன் பரந்து விரிந்த கட்டமைப்பும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
விஜய் வாரியர்ஸ் என்பது, விஜய் மற்றும் அவர் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் தீவிர ஆதரவாளர்கள் மற்றும் சமூக ஊடக செயல்பாட்டாளர்களை குறிக்கும் பெயராகும். இக்குழுவினர் வெறும் ரசிகர் மன்ற தொண்டர்களாக இல்லாமல், கட்சியின் அரசியல் செய்திகளை மக்களிடம் கொண்டு செல்லும் இணைய போர்வீரர்களாக செயல்படுகின்றனர்.
ட்விட்டர் (X), ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடக தளங்களில் தளபதி விஜய் மற்றும் தவெகவின் கொள்கைகள், அறிவிப்புகள் ஆகியவற்றை தீவிரமாக பரப்புகின்றனர். குறுகிய நேரத்தில் ஒரு குறிப்பிட்ட செய்தியை பொதுவெளிக்கு கொண்டு செல்வதிலும், டிரெண்டாக்குவதிலும் இவர்கள் வல்லவர்கள்.
தவெக அல்லது விஜய்யை நோக்கி அரசியல் எதிரிகள், விமர்சகர்கள் வைக்கும் கடுமையான குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்களுக்கு வாரியர்ஸ் குழுவினர் உடனடியாக கடுமையான மற்றும் ஆக்ரோஷமான எதிர்வினைகளை வீடியோக்கள் மற்றும் மீம்கள் மூலம் கொடுக்கின்றனர்.
கட்சி நிகழ்ச்சிகள், பொதுக்குழு கூட்டங்கள் மற்றும் பொதுநிகழ்வுகளின் செய்திகளை உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் இவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
இணையப் பரப்புரை மூலம் புதிய வாக்காளர்களைக் கவர்வது, கட்சியின் நிலைப்பாடுகளை தெளிவுபடுத்துவது போன்ற தேர்தல் பணிகளிலும் இக்குழுவினர் மறைமுகமாக ஈடுபடுகின்றனர்.
சமீபத்திய அரசியல் மோதல்களுக்கு பிறகு தவெக நிர்வாகிகள் தங்கள் பொதுவெளியில் ஆற்றிய உரைகளில், வாரியர்ஸ் படையின் பலம் குறித்து கடுமையான எச்சரிக்கைகளை விடுத்தனர். தமிழகத்திற்குள் மட்டுமே சுமார் 2 லட்சம் விஜய் வாரியர்ஸ் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் இந்த குழுக்கள் பரவலாக செயல்படுகின்றன. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் எத்தனை லட்சம் பேர் இருக்கிறார்கள் என்பதை கணக்கிடவே முடியாது” என்று நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
லோக்கலில் உட்கார்ந்து விமர்சிப்பவர்கள் மீது வழக்கு போடுவது, கைது செய்வது, மிரட்டுவது போன்ற செயல்கள் வாரியர்ஸ் விஷயத்தில் பலிக்காது” என்றும், “எங்கிருந்தோ செயல்படும் இவர்களால் நீங்கள் தாங்க மாட்டீர்கள்” என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“நீங்கள் தளபதியை சாஃப்டாக ஹேண்டில் செய்யும் வரை, அவரும் உங்களை சாஃப்டாகவே ஹேண்டில் செய்வார். ஆனால், விஜய்யை மோசமான முறையில் சித்தரிக்க முயன்றால், வாரியர்ஸ் தங்கள் பலத்தை களத்தில் இறக்குவார்கள்” என்று பேசியது, தவெகவின் அரசியல் அணுகுமுறை இனி மென்மையாக இருக்காது என்பதற்கான சமிக்கையாக பார்க்கப்படுகிறது.
அரசியல் விமர்சகர்கள் பலர், தவெகவின் இந்த ‘வாரியர்ஸ்’ அணுகுமுறையை, பாரம்பரிய அரசியல் கட்சிகள் கையாளும் பழிக்கு பழி வாங்கும் பாணியிலிருந்து மாறுபட்டது என்று கருதுகின்றனர். ஒரு ரசிகர் மன்றமாக இருந்தபோது இருந்த சகிப்புத்தன்மை, இப்போது ஒரு அரசியல் கட்சியாக மாறிய பின் இருக்க முடியாது. களத்தில் நிற்கும் தலைவனை தாக்கினால், அதை சகித்துக் கொண்டால் அது பலவீனமாக பார்க்கப்படும் என்ற முடிவுக்குத் தவெக தலைமை வந்துள்ளதை இது காட்டுகிறது.
இணைய வெளி என்பது இன்றைய அரசியலில் அதிகாரம் செலுத்தும் களமாக இருப்பதால், இந்த வாரியர்ஸ் படையின் ஆக்ரோஷமான செயல்பாடு, அரசியல் எதிரிகளுக்கு நேரடி மிரட்டலைவிடச் சமூக ஊடகங்களில் அதிக நெருக்கடியை ஏற்படுத்தும்.
மொத்தத்தில், விஜய் வாரியர்ஸ் என்ற தொண்டர் படை, தவெகவின் அரசியல் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய சக்தியாகவும், விஜய்யின் அரசியல் நகர்வுகளை பரப்புவதில் ஒரு பிரதான தளமாகவும் எழுச்சி பெற்றுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
