கரூர் சம்பவத்திற்கு பின் விஜய் வாக்கு சதவீதம் குறையவில்லையா? பாஜகவை நோக்கி விஜய் நகர்ந்தாலும் மக்கள் ஏற்று கொள்வார்களா? பாஜகவை எதிர்ப்பை விட திமுக எதிர்ப்புக்கு விஜய் முக்கியத்துவம் கொடுப்பாரா? தமிழக அரசியலில் இனி என்ன நடக்கும்?

விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தொடங்கியுள்ள அரசியல் பயணம், தமிழக அரசியல் கட்சிகளிடையே பெரும் புயலை கிளப்பியுள்ளது. குறிப்பாக, சமீபத்தில் நடந்த கரூர் சம்பவம் மற்றும் அதன் பின்னணியில் மத்திய ஆளும் பாஜக, மாநிலத்தில்…

vijay amitshah

விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தொடங்கியுள்ள அரசியல் பயணம், தமிழக அரசியல் கட்சிகளிடையே பெரும் புயலை கிளப்பியுள்ளது. குறிப்பாக, சமீபத்தில் நடந்த கரூர் சம்பவம் மற்றும் அதன் பின்னணியில் மத்திய ஆளும் பாஜக, மாநிலத்தில் ஆளும் திமுக, மற்றும் பிரதான எதிர்க் கட்சியான அதிமுக, இன்னொரு தேசிய கட்சியான காங்கிரஸ் ஆகியவை விஜய்யை எதிர்கொள்ளும் விதம், தமிழக அரசியல் சதுரங்க பலகையைத் தலைகீழாக மாற்றியுள்ளது.

கரூர் விவகாரம் விஜய்யின் அரசியலை ஒரு சதவீதம் கூட பாதிக்கவில்லையா, அவர் பாஜகவை நோக்கி நகர்ந்தால் மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா, மற்றும் அவரது பிரதான இலக்கு திமுகவாக இருக்குமா என்பன போன்ற முக்கிய கேள்விகள் குறித்து விரிவாக அலசுவோம்.

கரூர் விவகாரத்தில், விஜய் தான் குற்றவாளி என சமூக வலைத்தளங்களில் நேரடியாக இழுக்கப்பட்டது. இந்த சூழ்நிலை, ஒரு புதிய கட்சித் தலைவரின் செல்வாக்கை குறைக்கும் என்று பொதுவாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரசியல் விமர்சகர்கள் மற்றும் கள ஆய்வுகளின்படி, விஜய்யின் வாக்கு சதவீதம் ஒரு சதவீதம் கூட குறையவில்லை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கரூர் விவகாரம் விஜய்யின் வளர்ச்சியை தடுக்காமல், மாறாக, திமுகவுக்கு எதிரான சக்தியாக அவரை மக்கள் அங்கீகரிக்க உதவியுள்ளது என்றே கூறப்படுகிறது.

தமிழகத்தில் பாஜகவுக்கு எதிரான திராவிட உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. பாஜக வந்துவிடும் என்ற பயமுறுத்தல் தற்போது செல்லுபடியாகாது. அண்ணாமலையின் அரசியல் வருகைக்கு பின் பாஜக வந்தால் வரட்டும், திராவிட கட்சிகளை விட மோசமாக இருக்காது என்று மக்கள் வெளிப்படையாக பேச ஆரம்பித்துவிட்டனர். இந்தச் சூழலில், விஜய் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது பெரிய நெகட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே கூறப்படுகிறது.

விஜய்யின் பிரதான ஆதரவு சக்தி, இரு திராவிடக் கட்சிகள் மீதும் உள்ள அதிருப்தியில் இருந்து வந்த இளைஞர் கூட்டம் ஆகும். தமிழக பாஜக மீது தான் இளைஞர்களுக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் இல்லையே தவிர, இந்திய அளவில் மோடியின் செயல் இளைஞர்களை ஈர்த்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஆபரேஷன் சிந்தூர், அமெரிக்கா வரிவிதிப்பை கையாண்ட விதம், மேக் இன் இந்தியா திட்டம் ஆகியவை பிரதமர் மோடி மீது இளைஞர்களுக்கு ஒரு நல்ல எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே விஜய், பாஜக கூட்டணியில் சேர்ந்தாலும் பெரிய அளவில் இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பு இருக்காது.

ஆனால் அதே நேரத்தில் விஜய், பாஜகவின் தேசியவாத சித்தாந்தத்தை நேரடியாக தழுவினால், திராவிட மற்றும் சிறுபான்மை சமூகங்களின் வாக்குகளை இழக்கும் அபாயம் உள்ளது. இது அவரது அரசியல் ஸ்திரத்தன்மைக்கு ஒரு மிகப்பெரிய சவாலாகும். அதனால் விஜய் நேரடியாக பாஜக கூட்டணியில் நேரடியாக சேராமல், ‘மாற்று அணி’ என்ற அடையாளத்துடன் பாஜகவுடன் மறைமுகமான நல்லுறவை பேணலாம்.

மொத்தத்தில் விஜய் பாஜகவை நோக்கி நகர்வதை அவரது ரசிகர்கள் ஏற்றாலும், தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்கள் குறிப்பாக நடுநிலை வாக்காளர்கள், அதை முழுமையாக ஏற்க வேண்டுமானால், விஜய் மாநில நலன் மற்றும் சமூக நீதியை விட்டுக்கொடுக்காத ஒரு ‘மாற்றுத் தலைவராக’ தன்னை நிலைநிறுத்த வேண்டும்.

பெரும்பாலான இளைஞர்கள், ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேட்டைக் களைந்து, ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க ஒரு மாற்று தலைவரைத் தேடுகிறார்கள். தமிழ்நாட்டில் பாஜகவின் மதவாத அரசியல் எடுபடாது என்பதால், பாஜகவுடன் விஜய் சேர்ந்தாலும், பாஜக ஆட்டுவிக்கும் ஒரு பொம்மையாக இருக்க மாட்டார் என நம்புகிறார்கள்.

எனவே, குறுகிய கால அரசியல் வியூகத்தின் அடிப்படையில், விஜய்யின் பிரதான எதிரி மற்றும் இலக்கு திமுகவாகவே இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அவர் பாஜக எதிர்ப்பை, தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்துவார் என்றே கணிக்கப்படுகிறது.

பாஜக இந்த விவகாரத்தில் புகுந்து விளையாடி வரும் நிலையில் வழக்கம்போல் காங்கிரஸ் சொதப்பி வருகிறது. திமுகவின் கூட்டணியில் தொடர்வதா, அல்லது விஜய்யை ஒரு புதிய வாய்ப்பாக பயன்படுத்துவதா என்ற தெளிவான முடிவை காங்கிரஸ் எடுக்கத் தயங்கி வருகிறது. காங்கிரஸ் முழுமையாக நம்பிக்கையுடன் விஜய்க்கு கை கொடுத்தால், விஜய் பாஜகவை நோக்கி நகர்வதை நிறுத்திவிடுவார், அது ராகுல் காந்தி கையில் தான் உள்ளது.