தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய கட்சி உதயமானாலே, அந்த தலைமைக்கு எதிராக கடுமையான விமர்சன கணைகள் பாய்வது வழக்கம். ஆனால், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் விஷயத்தில் இந்த விமர்சனங்கள் அவருக்கு எதிராக வேலை செய்வதற்கு பதிலாக, அவருக்கான வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் ஊக்கியாக மாறி வருகின்றன. அரசியல் விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் நெறியாளர்கள் என்ற போர்வையில் சிலர் திட்டமிட்டு விஜய்யை குறிவைத்து தாக்குவது, நடுநிலை வாக்காளர்கள் மத்தியில் அவர் மீதான அனுதாபத்தையும் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது. விஜய்யை விமர்சிப்பவர்கள் மீது கோபமும் வருகின்றது.
சமூக வலைதளங்களிலும் ஊடக விவாதங்களிலும் ‘காசு வாங்கிவிட்டுப் பேசுகிறார்கள்’ என்ற பொதுவான ஒரு பிம்பம் சில விமர்சகர்கள் மீது விழுந்துவிட்டது. இவர்கள் ஒவ்வொரு முறையும் விஜய்யின் பேச்சையோ அல்லது அவரது அரசியல் நிலைப்பாட்டையோ கிண்டல் செய்யும்போது, அது அடிமட்ட தொண்டர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஒரு போராட்ட உணர்வை உருவாக்குகிறது. “ஒரு மனிதனை ஏன் இத்தனை பேர் சேர்ந்து எதிர்க்கிறார்கள்?” என்ற கேள்வி எழும்போது, அந்த நபர் ஒரு வலிமையான மாற்றாக தெரிய தொடங்குகிறார். இதன் விளைவாக, விஜய்யை விமர்சிக்க விமர்சிக்க அவர் மீதான பொதுமக்களின் கவனம் குறைவதற்கு பதிலாக பன்மடங்கு அதிகரிக்கிறது.
விஜய்யை தனிப்பட்ட முறையில் தாக்கும்போது அவர் பயந்து அரசியலை விட்டு விலகிவிடுவார் என்று எதிர்தரப்பினர் போடும் கணக்கு தவறாக முடிந்து வருகிறது. அவர் திரைத்துறையில் ரஜினிகாந்த் போன்ற ஒரு பிம்பமாக இருக்கலாம், ஆனால் அரசியல் ரீதியாக அவர் எடுத்துள்ள முடிவு மிக உறுதியானது என்பதை அவரது சமீபத்திய உரைகள் உணர்த்துகின்றன. ரஜினி தனது அரசியல் அறிவிப்பிலிருந்து பின்வாங்கியது போல விஜய் ஓடவும் மாட்டார், ஒளியவும் மாட்டார் என்பதை அவரது ஒவ்வொரு நகர்வும் நிரூபித்து வருகிறது. எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு களத்தில் நிற்பதுதான் அவரது தற்போதைய வியூகமாக உள்ளது.
ஆளும் கட்சியான திமுகவை ஆதரிக்கிறோம் என்ற வேகத்தில், அக்கட்சியின் ஆதரவு பேச்சாளர்கள் விஜய்யை கடுமையாக சாடுவது உண்மையில் திமுகவிற்கே வினையாக முடிந்து வருகிறது. தங்களின் எதிரியை தாக்கி அழிப்பதாக நினைத்து கொண்டு, உண்மையில் அவரை ஒரு பெரிய ‘ஹீரோ’வாக மக்கள் மத்தியில் அவர்கள் வளர்த்து விடுகிறார்கள். ஒரு புதிய கட்சியை தொடக்கத்திலேயே கண்டுகொள்ளாமல் விட்டால் அது தானாகவே மறைந்து போக வாய்ப்புண்டு, ஆனால் தொடர்ந்து ஒருவரை வில்லனாக சித்தரிப்பது மக்களிடையே அவருக்கான அரசியல் நியாயத்தை வலுப்படுத்துகிறது.
விஜய்யின் பலம் என்பது அவரது ரசிகர்கள் மட்டுமல்ல, திராவிட கட்சிகளின் மீது சலிப்படைந்த ஒரு பெரும் நடுநிலை வாக்கு வங்கிதான். இந்த மக்கள் தங்களின் மனக்குறைகளை தீர்க்க ஒரு புதிய முகம் தேடுகிறார்கள். அந்த தேடலில் இருக்கும்போது, விஜய் மீது வைக்கப்படும் தரமற்ற விமர்சனங்கள் அவரை ஒரு ‘பாதிக்கப்பட்ட போராளியாக’ முன்னிறுத்துகின்றன. இதுதான் விஜய்யின் வாக்கு சதவீதம் நாளுக்கு நாள் ஏறுமுகத்தில் இருப்பதற்கு காரணமாக உள்ளது. விமர்சனங்களே அவருக்கான விளம்பரமாக மாறிவிட்டன.
இறுதியாக, 2026 தேர்தலை நோக்கி நகரும் போது, இந்த விமர்சன போர் இன்னும் தீவிரமடையும். ஆனால், ஆளும் தரப்பும் மற்ற எதிர்ப்பாளர்களும் விஜய்யின் கொள்கைகளை விமர்சிப்பதை விடுத்து, அவரது ஆளுமையையும் தனிப்பட்ட குணங்களையும் சிதைக்க நினைப்பது அவர்களுக்கே பின்னடைவை தரும். தமிழக அரசியல் வரலாறு என்பது எப்போதுமே அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை கையில் ஏந்தியுள்ளது. அந்த வகையில், விஜய்யை நோக்கி வீசப்படும் ஒவ்வொரு கல்லும் அவர் ஏறி நிற்கும் ஏணியின் படிகளாகவே மாறி வருகின்றன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
