தமிழக அரசியல் களம் தற்போது ஈரோட்டை நோக்கியும், அதனை தொடர்ந்து திருப்பூரை நோக்கியும் நகர தொடங்கியுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், டிசம்பர் 18-ஆம் தேதி அதாவது இன்று ஈரோட்டில் நடத்தவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டம், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான கே.ஏ. செங்கோட்டையனுக்கு ஒரு அக்னி பரீட்சையாகவே பார்க்கப்படுகிறது. கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் அசம்பாவிதங்களை தொடர்ந்து, இந்த ஈரோடு மெகா மீட்டிங்கில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளில் எவ்வித பிசிறும் இல்லாமல் நடத்தி காட்ட வேண்டும் என்ற சவாலை விஜய் வழங்கியுள்ளார்.
40 கண்காணிப்பு கேமராக்கள், 70 மருத்துவர்கள், 120 செவிலியர்கள் என ஒரு மினி மருத்துவமனையையே அந்த மைதானத்தில் செங்கோட்டையன் தயார் செய்துள்ள விதம், விஜய்யின் நம்பிக்கையை பெறுவதற்கான முயற்சியாகவே தொண்டர்களால் பேசப்படுகிறது.
இந்த ஈரோடு கூட்டத்தின் பின்னணியில் மற்றொரு முக்கிய திட்டமும் ஒளிந்துள்ளது. தமிழகத்தில் இளம் வாக்காளர்கள் மற்றும் பெண்களின் ஆதரவு விஜய்க்கு பெருகி வரும் நிலையில், முதியவர்களின் வாக்குகளை கவர்வது தவெக-வின் முக்கிய இலக்காக உள்ளது. எம்.ஜி.ஆர் அவர்களுடன் தனது அரசியல் பயணத்தை தொடங்கி, பின் ஜெயலலிதாவிடம் தளபதியாக செயல்பட்ட செங்கோட்டையன், தற்போது அதே எம்.ஜி.ஆர் பார்முலாவை பயன்படுத்தி அதிமுக-வின் கோட்டையாக விளங்கும் முதியவர் வாக்குகளை தன் பக்கம் இழுக்கும் ‘அசைன்மென்ட்டை’ கையில் எடுத்துள்ளார். பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் ஒரு முழுமையான அரசியல் சக்தியாக தவெக-வை நிலைநிறுத்துவதே இந்த ஈரோடு சந்திப்பின் அடிப்படை நோக்கமாக இருக்கிறது.
எம்ஜிஆர் பெயரையும் ஜெயலலிதா பெயரையும் பயன்படுத்தி 50 வயதுக்கு மேல் உள்ளவர்களையும் தவெக பக்கம் இழுத்துவிட்டால் முதல்முறை வாக்காளர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதியோர் என ஒட்டுமொத்த வாக்கு வங்கியும் தவெகவுக்கு வந்துவிடும் என செங்கோட்டையன் கணக்கு போடுகிறார். இன்றைய பொதுக்கூட்டத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவை பற்றி விஜய் பேசுவதை விட செங்கோட்டையன் அதிகம் பேசுவார் என்றும், இருவருக்கும் தளபதி போல் இருந்த அவருக்கு பேச உரிமை உள்ளது என்றும் மக்கள் நினைக்கும் அளவுக்கு அவர் உணர்ச்சி பொங்க பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் திமுக வாக்கு வங்கியை ஏற்கனவே கைவைத்துவிட்ட தவெக, அதிமுகவின் முக்கிய வாக்குவங்கியையும் கவர்ந்துவிட்டால் வெற்றி உறுதி என்ற கோணத்தில் நகர்ந்து வருவதாக அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
