தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஈரோடு மாநாட்டில் ஆவேசமாக பேசியதும், திமுகவை கடுமையாக விமர்சித்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“நான் பேசுவதை தவறாகப் புரிந்துகொண்டு என்னை அசிங்க அசிங்கமாக திட்டுகிறார்கள். எனக்கு அந்த அரசியல் தெரியாது என்று கூறுகிறார்கள்; எனக்கு தெரியும், ஆனால் அந்த அரசியல் வேண்டாம் என்றுதான் விட்டு வைத்திருக்கிறேன். நான் பேசினால் நீங்கள் தாங்க மாட்டீர்கள்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், “விஜய் அரசியல் பேசமாட்டேன் என்கிறார், பத்து நிமிஷம்தான் பேசுகிறார், ஒன்பது நிமிஷம்தான் பேசுகிறார் என்று கூறுகிறார்கள். நான் எத்தனை நிமிஷம் பேசினால் உங்களுக்கு என்ன சார்? என்ன பேசுகிறேன் என்பதை மட்டும் பாருங்கள்” என ஆவேசமாக தெரிவித்தார்.
அதேபோல், காஞ்சிபுரத்தில் தான் பேசியதை தப்புத் தப்பாக பரப்பி வருகிறார்கள் என்றும், மக்கள் நலத்திட்டங்களுக்கு நான் என்றுமே எதிரானவன் கிடையாது என்றும் விஜய் குறிப்பிட்டார். “மக்கள் காசில் மக்களுக்கு கொடுப்பது எப்படி இலவசம் ஆகும்?” என்று கேள்வி எழுப்பிய அவர், “நீங்கள் செய்யும் தப்பை எல்லாம் தட்டிக் கேட்க ஆள் இல்லை என்று நினைத்தீர்களா? மக்களுக்கு ஒன்று என்றால் நான் வருவேன், இந்த விஜய் வருவான்” என்று முழங்கினார்.
“சொன்னதை செய்தார்களா?” என்று கேள்வி எழுப்பிய விஜய், ஆற்று மணலை கொள்ளையடிக்கும் வேலையை மட்டும் சரியாக செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார். “ஓசி ஓசி என மக்களை அசிங்கப்படுத்துகிறார்கள். நாங்கள் என்ன வாயிலேயே வடை சுட திமுக-வா? டிவிகேடா” என்று காட்டமாகப் பேசினார்.
மேல்லும் திமுகவும் பிரச்சனையும் ஃபெவிக்கால் போட்டு ஒட்டியது போன்றது என்றும், ஒன்றையொன்று பிரிக்க முடியாது என்றும் கூறினார். மேலும், திமுக ஆட்சியில்தான் குழந்தைகள் பள்ளியில் இருந்து அதிகமாக விலகி செல்கிறார்கள் என்றும், பல அரசுப் பள்ளிகளை மூடியது இந்த ஆட்சிதான் என்றும் தெரிவித்தார். இதைவிட்டுவிட்டு “கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று டிராமா போடுகிறார்கள்” என விமர்சித்த விஜய், காஞ்சிபுரம் மைதானத்தில் தான் பேசிய திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
“அனைவருக்கும் சொந்த வீடு, குடும்பத்தில் ஒருவருக்கு நல்ல வேலை மற்றும் ஒரு வாகனம் என்று நான் பேசியதை கிண்டல் செய்கிறார்கள். உங்கள் ஆட்சியில் இதெல்லாம் நடத்த முடிந்ததா? காலி பணியிடங்களை நிரப்புவோம் என்று கூறித்தானே ஆட்சிக்கு வந்தீர்கள்? எந்த காலி பணியிடத்தையாவது நிரப்பினீர்களா? இதையெல்லாம் சொல்லிவிட்டு மக்களை ஏமாற்றுவது யார்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
