நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தனது அரசியல் பயணத்தை அறிவித்த பிறகு, தமிழக அரசியல் களம் கூட்டணி சமன்பாடுகள் குறித்து தீவிர விவாதங்களில் ஈடுபட்டுள்ளது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் பலத்தை அறிந்த அரசியல் விமர்சகர்கள் மற்றும் கள ஆய்வாளர்கள் மத்தியில், விஜய்யால் தனித்து நின்று வெற்றி பெறுவது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒரு கனவு என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது. விஜய்யின் அரசியல் எதிர்காலமும், தமிழகத்தின் அடுத்த ஆட்சியும் அவர் எடுக்கும் கூட்டணி முடிவிலேயே தீர்மானிக்கப்படும் என்ற பரபரப்பு நிலவுகிறது.
தமிழகத்தில் 75 ஆண்டுகளுக்கும் மேலாக ஆழமாக வேரூன்றியுள்ள திராவிட கட்சிகளின் வரலாற்றை பார்த்தால், எந்த பெரிய கட்சியும் முழுமையாக தனித்து நின்று ஆட்சியை பிடிக்கவில்லை என்பது தெளிவாகிறது.
75 ஆண்டு கால தி.மு.க.வே இன்னும் ஒருமுறை கூட கூட்டணி இல்லாமல் போட்டியிட்டது இல்லை.” தேர்தல் காலங்களில் சிறிய கட்சிகள் முதல் தேசிய கட்சிகள் வரை பலதரப்பட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே தி.மு.க. தனது வெற்றியை உறுதி செய்துள்ளது. தி.மு.க. போன்ற பாரம்பரியமும், நிரந்தரமான வாக்கு வங்கியும் கொண்ட கட்சிக்கே இந்த கூட்டணி தேவை என்றால், ‘விஜய்யெல்லாம் எம்மாத்திரம்?’ என்ற கேள்வி எழுவது நியாயமே.
தமிழக வெற்றிக் கழகம், விஜய்யின் ரசிகர் மன்ற பலத்தை மட்டுமே நம்பியுள்ளது. இது குறிப்பிட்ட சில பகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றாலும், மாநிலம் தழுவிய அளவில், குறிப்பாக கிராமப்புறங்களில் பரந்து விரிந்து கிடக்கும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் பலமான கட்டமைப்புக்கு ஈடாகாது.
அரசியல் வல்லுநர்களின் கூற்றுப்படி, நடிகர் விஜய் தனது ஆரம்ப கால வீராப்பை காட்டி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால், அது தி.மு.க.வுக்கே மிக எளிதான வெற்றியை உறுதி செய்யும்.
தி.மு.க. எதிர்ப்பு கொள்கையுடையவர்களின் வாக்குகள் அ.தி.மு.க., ,தவெக மற்றும் சீமான் கட்சி என்று மூன்று பிரிவாக சிதறும். குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்களின் ஒரு பகுதியை கவர்ந்திழுக்கும் விஜய், அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணிக்கு செல்லக்கூடிய வாக்குகளைப் பிரித்து, தி.மு.க.வின் வெற்றியை மேலும் எளிதாக்கி விடுவார்.
ஒரு புதிய கட்சி தனது முதல் தேர்தலிலேயே பெரும் தோல்வியை சந்தித்தால், அதன் வளர்ச்சி பாதை முடக்கப்படும் அபாயம் உள்ளது. விஜய் தனித்து போட்டியிட்டால் தி.மு.க. ஆட்சி மீண்டும் நிச்சயம் என்ற யதார்த்த நிலை அவருக்கு சுட்டி காட்டப்படுகிறது. தனித்து போட்டியிட்ட விஜயகாந்த், கமல்ஹாசனுக்கு தோல்விகள் தான் கிடைத்தது. சீமான் கட்சி தனித்து போட்ட்யிட்டு டெபாசிட் கூட பெற முடியவில்லை. இதையெல்லாம் விஜய் மனதில் வைத்து கொள்ள வேண்டும்.
தி.மு.க.வின் பலத்தை எதிர்த்து நின்று ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால், அ.தி.மு.க. அணியும் விஜய்யின் அணியும் நிச்சயம் கைகோர்க்க வேண்டியது அவசியம் என்று நம்பப்படுகிறது. அ.தி.மு.க.வின் பாரம்பரியமான ‘நிரந்தர வாக்கு வங்கி’ மற்றும் விஜய்யின் ‘மாறிவரும் நடுநிலை வாக்கு வங்கி’ ஆகிய இரண்டும் இணையும்போது, அது தி.மு.க.வின் மொத்த வாக்குகளை விட வலுவான சக்தியாக உருவெடுக்கும்.
அ.தி.மு.க.வின் நிறுவன கட்டமைப்பும், விஜய்யின் புதிய தலைமை கவர்ச்சியும் இணையும்போதுதான், அவர்களால் தி.மு.க.வுக்கு ஒரு கடுமையான சவாலை உருவாக்க முடியும். அ.தி.மு.க. – விஜய் கூட்டணி என்றால் மட்டுமே தி.மு.க.வை வீழ்த்த முடியும் என்பதே கள நிலவரமாக உள்ளது.
விஜய்யின் அரசியல் பயணத்தின் முதல் கட்டமே, ஓர் அரசியல் யதார்த்தத்தை தீர்மானிக்கும் முடிவாக அமையும். வெறும் வீராப்பான தனித்து போட்டியிடும் முடிவை விட, நடைமுறை வெற்றியை உறுதி செய்யும் ஒரு கூட்டணியே அவரது அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
