பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, தமிழக அரசியல் களம் அடுத்தகட்ட கூட்டணி பேச்சுவார்த்தைகள் மற்றும் நகர்வுகள் குறித்து சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசியலில் ஒரு புதிய துருவமாக எழுந்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி விஜய்யுடன் கைகோர்க்கும் என்ற யூகங்கள் வலுவடைந்து வந்தன.
விஜய் இன்னும் அரசியல் ரீதியாக நிரூபிக்கப்படாதவர் என்பதால், அவரை நம்பி, தமிழகத்தில் 40/40 வெற்றியை உறுதிப்படுத்தும் வலிமையான திமுக கூட்டணியை ராகுல் காந்தி அல்லது சோனியா காந்தி அவ்வளவு எளிதாக முறித்து கொள்ள விரும்பவில்லை என லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யின் வாக்கு வங்கி எவ்வளவு என்பது இன்னமும் தெளிவில்லை. சிலர் அவர் 20% வாக்குகளைப் பெறுவார் என்றும், சிலர் விஜயகாந்தின் உச்சபட்ச வாக்குகளான 10% வரை மட்டுமே பெறுவார் என்றும் கணிக்கின்றனர். விஜய் ஆரம்பத்திலேயே ‘நான்தான் முதலமைச்சர் வேட்பாளர், தனித்துதான் போட்டியிடுவோம்’ என்று அறிவித்து, பின்னர் துணை முதல்வர் பதவியை ஏற்க சம்மதித்து அதிமுக – பாஜக கூட்டணிக்கு சென்றால் அது அவரது கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படும்.
எனவே, இந்தத் தேர்தலில் அவர் தனித்து நின்று, தனது பலம் என்ன என்பதை பரிசோதித்து, நிரூபிப்பது அவசியம்.
தற்போது விஜய்யுடன் கூட்டணி அமைக்க சிறிய கட்சிகள் ஆர்வம் காட்டினாலும், முறையான அழைப்பு இல்லாததாலும், விஜய் தொடர்ந்து கட்சியை நடத்துவாரா என்ற நம்பகத்தன்மை இல்லாததாலும் அவர்களும் தயங்குகிறார்கள்.
கரூர் சம்பவம் போன்ற சம்பவங்களுக்குப் பிறகு, விஜய் உடனடியாக வந்து தெளிவுபடுத்தாதது, கட்சி நிகழ்ச்சிகளைப் போதுமான அளவு நடத்தாமல் காலதாமதம் செய்வது போன்றவை அவரது அரசியல் இமேஜை பலவீனப்படுத்தலாம். அவர் விரைவில் தன்னை வெளிப்படுத்தி கொள்ள வேண்டும்.
கேரளாவில் சினிமா மோகம் குறைவாக உள்ளது. அங்கு விஜய்க்காக படம் ஓடினாலும், மக்கள் சினிமாவையும் அரசியலையும் பிரித்துப் பார்க்கும் திறன் கொண்டவர்கள். எனவே, விஜய் கூட்டணி வைத்தால், கேரளா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற அவர் பெரிய அளவில் கைகொடுப்பார் என்று நம்புவது சாத்தியமில்லை.
விஜய்யின் அரசியல் பிரவேசம் தமிழகத்தில் ஒரு நான்கு முனைப் போட்டிக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் பிரிக்கும் வாக்கு சதவீதம் திமுகவுக்கோ அல்லது அதிமுகவுக்கோ சாதகமாக சென்றால் அவரால் தொடர்ந்து அரசியல் செய்ய முடியாது. மக்கள் அவரை ஒரு ஸ்பாயிலர் என்று தான் நினைப்பார்கள். மாறாக அவர் பிரிக்கும் வாக்குகளால் தொங்கு சட்டசபை ஏற்பட்டு, மீண்டும் தேர்தல் வந்தால் கண்டிப்பாக ஆட்சியை பிடித்துவிடுவார் என்று கூறப்பட்டு வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
