தமிழக அரசியல் களத்தில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ள தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விவாதங்கள், திட்டமிட்டு ஏவப்பட்ட ஒரு அரசியல் சூழ்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் வேளையில், விஜய்யின் அரசியல் எழுச்சியை கண்டு அஞ்சும் எதிர்த்தரப்பினர், கொள்கை ரீதியாக அவரை எதிர்கொள்ள முடியாமல் இத்தகைய அவதூறுகளை பரப்பி வருகின்றனர். விவாகரத்து தொடர்பான சட்டப்பூர்வ நடைமுறைகளை ஒரு பொது விவாதமாக மாற்றி, அதன் மூலம் ஒரு தலைவரின் பிம்பத்தை சிதைக்க முயல்வது தரம் தாழ்ந்த அரசியலின் உச்சமாகும். ஆனால், விஜய் இவற்றை முன்கூட்டியே கணித்திருப்பார் என்பதில் ஐயமில்லை; திமுக போன்ற கட்சிகள் பணபலத்தையும், சமூக ஊடக பொய் பிரச்சாரங்களையும் ஆயுதமாக ஏந்தும் என்பதை அவர் தனது மாநாட்டிலேயே ‘அல்லு சில்லு’ அரசியல் என தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது பெண்ணுரிமை போராளிகள் என்ற போர்வையில் விஜய்க்கு எதிராக குரல் கொடுப்பவர்கள், கடந்த காலங்களில் நடந்த நிஜமான அநீதிகளின் போது எங்கு சென்றார்கள் என்ற கேள்வி எழுகிறது. சிவகங்கை மாவட்டம் அஜித்குமார் என்ற இளைஞர் போலீஸ் கஸ்டடியில் கொல்லப்பட்ட போதோ, அல்லது அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட போதோ இந்த திடீர் போராளிகள் யாரும் வீதிக்கு வந்து போராடவில்லை. தனிமனித ஒழுக்கம் பற்றி பேசும் பல அரசியல்வாதிகளின் பின்னணி லாவகமாக மறைக்கப்படும் நிலையில், விஜய்யின் குடும்ப விஷயத்தை மட்டும் பூதக்கண்ணாடி வைத்து பார்ப்பது அவர்களின் அரசியல் உள்நோக்கத்தையே காட்டுகிறது. குறிப்பாக, நாம் தமிழர் கட்சி மற்றும் திமுக ஆகிய இரு துருவங்களும் ஒரே புள்ளியில் இணைந்து விஜய்யை தாக்குவது விந்தையான முரண்பாடாக உள்ளது.
அரசியல் என்பது கொள்கை போராக இருக்க வேண்டுமே தவிர, ஒருவரின் அந்தரங்கத்தை சிதைப்பதாக இருக்கக் கூடாது. விஜய்யின் விவாகரத்து விவகாரம் என்பது இரு தனிநபர்கள் சம்பந்தப்பட்ட சட்டப்பூர்வமான விஷயம்; அதை அரசியலாக்குவது வாக்காளர்கள் மத்தியில் எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தும். ஒருவரை எல்லை மீறி தாக்கும்போது, பொதுமக்களின் அனுதாபம் இயல்பாகவே பாதிக்கப்பட்டவர் பக்கமே திரும்பும். “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பதற்கு ஏற்ப, விஜய்க்கு எதிராக செய்யப்படும் இந்த அதீத பிரச்சாரங்கள், அவருக்கு ‘அமிர்தமாக’ மாறி மக்களின் ஆதரவை இன்னும் அதிகரிக்க செய்யும். ஒரு தனிமனிதனை இத்தனை பேர் சேர்ந்து கொண்டு வளைத்து தாக்குகிறார்களே என்ற எண்ணம் நடுநிலை மக்களிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தற்போது நிலைகுலைந்து போயிருப்பதற்கு முக்கிய காரணம், விஜய்க்கு இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெருகி வரும் செல்வாக்குதான். அதிமுகவின் உட்கட்சி பூசல்களும், ஓபிஎஸ் – சசிகலா போன்றவர்களின் நிலையற்ற அரசியல் நிலைப்பாடுகளும் எதிர்க்கட்சி வரிசையில் ஒரு பெரும் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளன. இந்த வெற்றிடத்தை விஜய் மிக சரியாக நிரப்பி வருகிறார். விக்கிரவாண்டி போன்ற நிகழ்வுகளின் போது விஜய்யின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்பது நிரூபணமான நிலையில், இப்போது குடும்ப விஷயத்தைக் கையில் எடுத்திருப்பது அவர்களின் கையறு நிலையையே காட்டுகிறது.
தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இத்தகைய அவதூறுகளை கண்டு சோர்வடைய தேவையில்லை. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் வரையிலான காலம் மிகவும் பொன்னானது; அந்த நேரத்தில் இத்தகைய வீண் விவாதங்களுக்கு பதில் சொல்லிக் கொண்டு நேரத்தை வீணடிக்கக் கூடாது. விஜய் தற்போது மிகவும் முதிர்ச்சியடைந்த அரசியல்வாதியாக தெரிகிறார். எதிரிகளின் அடியில் சிக்கி அவர் இப்போது பக்குவப்பட்ட ஒரு தலைவராக உருவெடுத்துள்ளார். வரும் மார்ச் 4-ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற உள்ள சந்திப்பு போன்றவை, அவர் தனது இலக்கை நோக்கித் தடம் மாறாமல் பயணிப்பதைக் காட்டுகின்றன.
இறுதியாக, தமிழக மக்கள் இப்போது மிகவும் புத்திசாலித்தனமாக சிந்திப்பவர்கள். பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் என ஒவ்வொன்றிற்கும் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் பகுப்பாய்வு திறன் அவர்களிடம் உள்ளது. விஜய்யின் அரசியல் வருகை ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என மக்கள் முடிவு செய்துவிட்டதால், இத்தகைய சிறுபிள்ளைத்தனமான ட்ரோல்களும், அவதூறுகளும் தவுடுபொடியாகும். இணையதள காலத்தில் உண்மையை மறைக்க முடியாது என்பதால், பொய் பிரச்சாரங்கள் செய்பவர்கள் தங்கள் கையை தாங்களே குத்தி கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். விஜய்யின் வெற்றி வாய்ப்பு என்பது இத்தகைய சலசலப்புகளுக்கு அப்பாற்பட்டது என்பது திண்ணம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
