நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சி தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே, கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட துயர சம்பவம் மூலம் அவர் ஒரு பெரும் அரசியல் சோதனையை சந்தித்துள்ளார். “அரசியல் ஒன்றும் சாதாரணம் இல்லை; இது ரணகளத்தில் நடமாடும் களம்” என்பதை உணர்த்தும் வகையிலான இத்தகைய அழுத்தங்கள், விஜய்யின் அரசியல் பயணத்தின் ஆரம்ப அத்தியாயமாகவே பார்க்கப்படுகின்றன. இந்த இக்கட்டான சூழல், விஜய்யை எப்படிப்பட்ட அரசியல்வாதியாக மாற்ற போகிறது? அவருக்கு இருக்கும் சவால்கள் என்ன? தொண்டர்களின் வலிமை எந்த அளவுக்கு உதவும்? என்பதை பொருத்து தான் விஜய்யின் அரசியல் எதிர்காலம் உள்ளது.
கரூர், வேலுச்சாமிபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது, விஜய்க்கும் அவரது புதிய கட்சிக்கும் எதிர்பாராத ஒரு பேரிழப்பு. இந்த சம்பவம், கட்சியின் அடித்தள நிர்வாக செயல்பாடுகள் மற்றும் கூட்டத்தை கையாளும் திறன் மீது கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
மாநில ஆளுங்கட்சியான திமுக, இந்த சம்பவத்தைக் காவல்துறை மற்றும் சட்ட ரீதியாக கடுமையாக கையாண்டு வருகிறது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்படுவது, த.வெ.க. தொண்டர்கள் மத்தியில் அச்சத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் என்பது திரைப்பட மேடை அல்ல; அங்குள்ள விதிகளும் நிர்வாக சிக்கல்களும் மிகவும் சிக்கலானவை. ஒரு புதிய தலைவராக, இதுபோன்ற நிர்வாக தவறுகள் மற்றும் மனித உயிரிழப்புகள் மீதான விமர்சனங்களை விஜய் சந்திக்க வேண்டியுள்ளது. இது அவருக்கு ஒரு கடுமையான அரசியல் நிர்வாக பாடமாக அமைந்துள்ளது.
அரசியலில் நிரந்தரமாக நிலைக்க வேண்டுமானால், விஜய் இதுபோன்ற பல பெரிய சோதனைகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக, தமிழக அரசியல் களம் உணர்ச்சிகரமானதுடன், பலமான போட்டி மனப்பான்மை கொண்டது.
கரூரில் ஏற்பட்ட இழப்புகளுக்கு ஈடுசெய்வது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது மற்றும் கட்சியின் நிர்வாகிகளை சட்ட சிக்கல்களில் இருந்து மீட்பது என்பது விஜய்க்கு ஒரு பெரிய நிதி சவாலையும் சட்டரீதியான சுமையையும் ஏற்படுத்தும். ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் விஜய்யின் பிம்பத்தின் மீது அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தலாம். அவரது பழைய திரைப்பட வசனங்கள், அரசியல் நிலைப்பாடு, பொது வாழ்வின் நடத்தைகள் என அனைத்தும் தீவிர ஆய்வுக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகும்.
த.வெ.க.வின் ஒவ்வொரு சிறு அசைவும், ஒவ்வொரு கூட்டமும், அதன் நிர்வாக தவறுகளும் அரசியல் போட்டியாளர்களால் மிக தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு விமர்சிக்கப்படும். சின்னஞ்சிறு தவறுகளும் ஊதி பெரிதாக்கப்படும். வெறுமனே நடிகராக இருப்பதை விட, ஒரு கட்சியின் தலைவராக விஜய், இன்னும் தெளிவான மற்றும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டியது கட்டாயமாகும்.
இந்த சோதனை காலத்தில், விஜய்க்கு இருக்கும் ஒரே நம்பிக்கை அவரது தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் அவருக்கு உள்ள ஈர்ப்பு மட்டுமே. “ஏறு ஏறு ஏறு, நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு!” என்ற உற்சாகத்தை அவருக்கு கொடுப்பவர்கள் அவரது தொண்டர்கள்தான்.
விஜய்யின் ரசிகர்கள் அவர் மீதான நம்பிக்கையை எந்த நெருக்கடியிலும் தளரவிட மாட்டார்கள். இந்த கைதுகள் மற்றும் சட்ட நெருக்கடிகள், தொண்டர்கள் மத்தியில் இன்னும் அதிக உணர்ச்சிபூர்வ ஆதரவையும் விசுவாசத்தையும் உருவாக்கலாம். தொண்டர்களின் பார்வையில், “விஜய் பழிவாங்கப்படுகிறார்” என்ற பிம்பம் வலுப்பெற்றால், அதுவே ஒரு பெரிய அரசியல் எழுச்சியாக மாறும். எதிர்ப்புகளால் விஜய் பலவீனப்படாமல், மேலும் வலிமை கொண்டு எழுவதற்கு அவரது விசுவாசமான தொண்டர் படை உதவக்கூடும்.
சினிமா செல்வாக்கு ஒரு தொடக்கம்தான்; ஆனால், அரசியலில் வெற்றி பெற, தொண்டர்கள் களத்தில் இறங்கி, வீடு வீடாக சென்று கொள்கைகளை பேச வேண்டும். இந்த சவாலான காலகட்டத்தில், த.வெ.க.வின் தொண்டர்கள் அதிக அர்ப்பணிப்புடன் உழைத்தால் மட்டுமே, இந்த கட்சி அரசியல் களத்தில் வேரூன்றி நிற்க முடியும்.
மொத்தத்தில், கரூர் சம்பவம் என்பது விஜய்யின் அரசியல் வாழ்வின் முதல் பெரிய சோதனை மட்டுமே. “ரணகளம்” என்று அழைக்கப்படும் அரசியல் களத்தில் நிலைக்க வேண்டுமானால், அவர் உணர்ச்சிவசப்படாமல், நிதானத்துடன், நிர்வாக திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
விஜய்க்கு இருக்கும் மாபெரும் ரசிகர் பட்டாளம் ஒரு பலம் என்றாலும், அந்த கூட்டத்தை கட்டுக்கோப்புடன் அரசியல் சக்தியாக மாற்றுவது அதைவிட மிகப்பெரிய சவாலானது. “இதோ வந்துவிட்டேன், வாங்க பார்த்துக் கொள்ளலாம்” என்ற அரசியல் உறுதியை விஜய் தனது செயல்கள் மூலம் நிரூபிக்க வேண்டிய காலம் இது. தொண்டர்களும் ‘வாங்க விஜய் பாத்துக்கிடலாம்’ என அவருக்கு துணை நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.
சவால்களை சந்தித்து, அதிலிருந்து மீண்டு எழுபவரே உண்மையான தலைவர்!
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
