நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், பல்வேறு வங்கிகளுக்கு ரூ.57,000 கோடிக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்திய கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விஜய் மல்லையா, ஃபயர்ஸ்டார் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் நீரவ் மோடி, ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தின் நிதின் சந்தேசரா உள்ளிட்ட 15 பேர் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி இந்த தகவலை மக்களவையில் அளித்தார். 2018-ஆம் ஆண்டு தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட இந்த 15 பேர், அக்டோபர் 31, 2025 வரை வங்கிகளுக்கு ஏற்பட்ட அசல் தொகையாக ரூ.26,645 கோடி இழப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
வாராக்கடனாக அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து அக்டோபர் 31 வரையிலான வட்டி உட்பட மொத்தம் ரூ.31,437 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், வங்கிகளுக்கு இந்த 15 குற்றவாளிகளால் ஏற்பட்ட மொத்த நிதி இழப்பு ரூ.57,082 கோடியாக உள்ளது. இந்த குற்றவாளிகளிடமிருந்து அக்டோபர் 31 வரை ரூ.19,817 கோடி மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த 15 பேர் பட்டியலில், ஜைலோக் சிஸ்டம்ஸ் நிறுவனத்தை சேர்ந்த சுதர்ஷன் வெங்கடராமன், ராமானுஜம் சேஷரத்தினம், ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தை சேர்ந்த சேத்தன் சந்தேசரா, புஷ்பேஷ் குமார் பெய்ட் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
