தமிழ் சினிமாவில் கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகராக உச்சபட்ச நடிகராக இருந்து வருகிறார் விஜய். தற்போது ஏராளமான ரசிகர் பட்டாளங்களை கொண்ட விஜய் சினிமாவின் உச்சத்தில் இருந்த போதிலும் மக்களுக்கு பணியாற்ற விரும்பி சினிமாவிலிருந்து ஓய்வெடுப்பதாகவும் அரசியலில் களமிறங்க போவதாகவும் அறிவித்திருந்தார். அதன்படி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை நிறுவியுள்ளார் விஜய். அதன் ஆரம்ப கட்டமாக கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி வந்தார் விஜய்.
ஏற்கனவே கமிட்டான படங்களில் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியலில் இறங்க திட்டமிட்டு இருக்கும் விஜய் தற்போது கட்சி பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளார். அதன் முதல் கட்டமாக இன்று தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடியை அறிமுகம் செய்துள்ளார் விஜய்.
சென்னை பனையூரில் இருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் தலைமைச் செயலகத்தில் கட்சி கொடியை அறிமுகம் செய்து அதை ஏற்றி வைத்துள்ளார் விஜய். த .வெ. க கட்சி கொடியானது 3 பாகங்களாக பிரிக்கப்பட்டு சிவப்பு மஞ்சள் சிவப்பு என்ற நிறத்தில் இருக்கிறது. நடுவில் மஞ்சள் நிற இடைவேளையில் இரண்டு யானைகள் எதிரெதிராக நிற்பது போன்றும் இரண்டு யானைகளுக்கு நடுவே வாகை மலர் இருப்பது போன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகை மலரானது வெற்றி பெற்றோர்களுக்கு சூடும் மலராகும். அந்த காலத்தில் மன்னர்கள் போருக்கு போய்விட்டு வெற்றியோடு திரும்பி வரும்போது வாகை மலர் சூடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் கட்சி கொடி அறிமுகம் செய்யும்போது கட்சியை சேர்ந்தவர்கள் ஆரவாரத்துடன் கையேசைத்து மகிழ்ந்தனர். கட்சிக்கொடி ஏற்றி முடித்தபின் கட்சியின் உறுதி மொழியையும் ஏற்றுக்கொண்டார் நடிகர் விஜய். அந்த உறுதி மொழியில் சாதி மதம் இனம் பாலினம் சொந்த ஊர் போன்ற வேறுபாட்டை கலைந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவருக்கும் சம வாய்ப்பு சம உரிமை கிடைக்க பாடுபடுவேன் என்று த. வெ. க கட்சியின் தலைவர் விஜய் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டார்.
இது மட்டுமல்லாது த. வெ. க கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்பட்ட இந்த நாளில் கட்சி பாடலையும் வெளியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த த. வெ. க கட்சியின் பாடல் வரிகளை பாடல் ஆசிரியர் விவேக் எழுதி இசையமைப்பாளர் தமன் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.