அரசியல் களத்தில் விஜய் எடுக்கும் ஒவ்வொரு அடியும் தமிழக அரசியலின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சமீபத்திய கசப்பான அனுபவங்களுக்கு பிறகு, அவர் தனது அரசியல் பயணத்தின் அடுத்த கட்டம் குறித்து அதிரடியான முடிவுகளை எடுத்துள்ளதாகவும், முக்கிய நிர்வாகிகளை மாற்றியமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இனி, அரசியல் அரங்கில் வேற ஒரு விஜய்யை பார்க்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நடந்த நிகழ்வுகள், விஜய்யின் தவெக எதிர்கொள்ளும் அடிப்படை சிக்கல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளன. விஜய்யின் அரசியல் ஆலோசகர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மீது அவருக்கு இருந்த நம்பிக்கை சுத்தமாக குறைந்து விட்டதாகவும், நிர்வாக அமைப்பையே அவர் கேள்விக்குள்ளாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக, இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான புஸ்ஸி ஆனந்த், நெருக்கடியான காலகட்டத்தில் தலைமறைவானது விஜய்க்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற செயல்கள், ஒரு கட்சியின் தலைமை பண்புக்கு முற்றிலும் எதிரானது என அரசியல் விமர்சகர்கள் கடுமையாக சாடினர். புஸ்ஸி ஆனந்த்தை நம்பி ஒரு ஆணியும் புடுங்க முடியாது, என்ற கடுமையான விமர்சனத்தை விஜய் வெளிப்படுத்தியதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இதன் காரணமாக, விஜய்யின் தவெகவின் நிர்வாகத்திலும், செயல்முறைகளிலும் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளன. புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள் அல்லது அவர்களின் பொறுப்புகள் கணிசமாக குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனிமேல், விஜய் நேரடியாக அரசியல் முடிவுகளை எடுப்பார் என்றும், புதிய மற்றும் இளைஞர்களை உள்ளடக்கிய ஒரு குழு நிர்வாக பொறுப்புகளை ஏற்கும் என்றும் கூறப்படுகிறது.
அரசியலில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு பிறகு, விஜய் தனது அரசியல் எதிர்காலம் குறித்து மிகவும் நிதானமான, ஆனால் துணிச்சலான ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. அவர் முன் தற்போது இரண்டு முக்கிய முடிவுகள் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன:
கூட்டணி அரசியல் குறித்த பேச்சுகள் எழுந்தபோதிலும், தனித்து போட்டியிடுவது அல்லது தனது தலைமையிலான ஒரு அணியை உருவாக்கி, தான் தனது தனித்துவமான அரசியல் பாதை என்ற முடிவில் விஜய் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. மற்ற அரசியல் கட்சிகளுடன் உடனடியாக கூட்டணி வைத்தால், அது தனது ரசிகர் பலத்தை குறைக்கும் என்றும், எதிர்காலத்தில் ஒரு பெரிய அரசியல் சக்தியாக உருவெடுக்கும் வாய்ப்பை கெடுக்கும் என்றும் அவர் நம்புகிறார். எனவே, வரும் தேர்தலில், விஜய்யின் தவெக தனித்துப் போட்டியிடும் என்ற அறிவிப்பை வெளியிட அவர் தயாராக உள்ளதாக தெரிகிறது.
இந்த தனித்து போட்டியின்போது, மக்கள் அளிக்கும் ஆதரவை வைத்தே தனது அரசியல் பயணத்தை தொடர விஜய் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. போதுமான மக்கள் ஆதரவு கிடைத்தால் மட்டுமே தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்றும், எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை என்றால், “இருக்கவே இருக்கிறது சினிமா,” என்ற முடிவை எடுத்து, மீண்டும் தனது திரைத்துறைப் பணிகளில் முழுமையாக கவனம் செலுத்த அவர் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தவெக இதுவரை ஒரு ‘ரசிகர் மன்றம்’ போல் செயல்பட்டது போதும் என்றும், இனிமேல் அது ஒரு அரசியல் கட்சிக்கான கட்டமைப்பை பெற வேண்டும் என்றும் விஜய் தெளிவாக உணர்ந்துள்ளார். இனி அரசியல் நடவடிக்கைகளில் விஜய்யே நேரடியாக செயலாற்றுவார். வெறும் அறிக்கை அரசியல் இல்லாமல், களத்தில் இறங்கி மக்கள் இயக்கத்தை வலுப்படுத்துவார்.
தற்போதுள்ள நிர்வாகிகள் மீது ஏற்பட்ட விமர்சனங்கள், பொதுவெளியில் விஜய்யின் இமேஜுக்கும் பாதிப்பை ஏற்படுத்தின. இனிமேல், இத்தகைய நிர்வாக சீர்கேடுகள் இல்லாமல், வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தை நிலைநிறுத்த அவர் திட்டமிட்டுள்ளார்.
மொத்தத்தில், விஜய்யின் இந்த அதிரடி முடிவுகள், அவரது அரசியல் பிரவேசத்துக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனித்து போட்டியின் மூலம் மக்கள் தங்களுக்கு ஆதரவு அளிக்கிறார்களா என்பதை பார்த்துவிட்டு, அவர் தனது பயணத்தை தொடரலாம் அல்லது முற்றுப்புள்ளி வைக்கலாம். அவரது அடுத்தகட்ட நகர்வு, தமிழ்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
