“தமிழக வெற்றிக் கழகம் எனும் புதிய கட்சியை தொடங்கி, தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சலசலப்பை விஜய் ஏற்படுத்தியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள விஜய்யின் வியூகங்கள், தமிழக அரசியல் கட்சிகளிடையே பெரும் விவாத பொருளாக மாறியுள்ளன.
கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் அரசியல் செய்வதே பெரிய விஷயமாக உள்ளது. இப்போதைக்கு அரசியல் செய்ய களத்தில் இருக்க வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி அதிமுக – பாஜக கூட்டணி தான்” என்ற ஒரு முடிவில் அவர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு, சாத்தியமான கூட்டணி வியூகங்கள் மற்றும் அவரது நீண்ட கால இலக்குகள் குறித்து விரிவாக ஆராயலாம்.
தி.மு.க. மற்றும் பா.ஜ.க. ஆகிய இரு கட்சிளையும் எதிர்கும் மனநிலையில் தான் விஜய் ஆரம்பத்தில் இருந்தார். விஜய், பா.ஜ.க.வை தனது “கொள்கை எதிரி” என கடுமையாக விமர்சித்துள்ளார். மதச்சார்பின்மை, சமூக நீதி போன்ற கொள்கைகளுக்கு எதிரான பா.ஜ.க.வின் நிலைப்பாட்டை காரணம் காட்டி, அந்த கட்சியுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்பதை அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மேலும், அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியை “பொருந்தாத கூட்டணி” என்றும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உண்மையான தொண்டர்கள் இதை கேள்வி கேட்பதாகவும் சாடியுள்ளார்.
ஆளும் தி.மு.க.வை “அரசியல் எதிரி” என்று குறிப்பிட்டுள்ள விஜய், குடும்ப அரசியல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை மையமாக கொண்டு தி.மு.க.வை எதிர்த்து போட்டியிடுவதே தனது முதன்மை நோக்கம் என தெளிவுபடுத்தியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் தன் கட்சி தனித்து போட்டியிடும் அல்லது தன்னை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டும் கூட்டணி என்றும் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஆனால் கரூர் சம்பவத்திற்கு பின் விஜய்யின் மனநிலை மாறியிருப்பதாக கூறப்படுகிறது. தமிழக முதல்வர் பதவியை பிடிப்பதை 2031ல் பார்த்து கொள்ளலாம்… இப்போதைக்கு களத்தில் இருக்க ஒரே வழி அதிமுக – பாஜக கூட்டணி தான்” என்ற கோணம், விஜய்யின் மனதில் தோன்றி உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
2026 தேர்தலில் விஜய் தனித்து போட்டியிடும்போது, அது பிரதானமாக தி.மு.க. எதிர்ப்பு கூட்டணிக்கான வாக்குகளை பிரிக்கக்கூடும். இது மறைமுகமாக தி.மு.க.வுக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது. இந்த கணிதத்தை தவிர்க்க, வலுவான ஒரு கூட்டணியில் இணைந்து சட்டமன்றத்திற்குள் நுழைவதே விரைவான வழி என்ற ஆலோசனை விஜய்க்கு வழங்கப்பட்டு இருக்கலாம்.
புதிய கட்சியான ‘தமிழக வெற்றிக் கழகம்’ உடனடியாக பெரிய எண்ணிக்கையிலான இடங்களை பிடிப்பது சவாலானது. அ.தி.மு.க. போன்ற வலுவான கட்சியுடன் கூட்டணி அமைப்பது, குறைந்தபட்சம் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று, ஆட்சி நிர்வாகம் மற்றும் கள அரசியல் குறித்த அனுபவத்தை பெற உதவும் என்ற பார்வை இருக்கலாம்.
தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் வாக்கு சதவீதம் குறைவாக இருந்தாலும், தேசிய அளவில் அதன் பலம் காரணமாக, மத்திய அரசின் ஆதரவை பெறுவது மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு அவசியம் என்று கருதப்படலாம். மேலும், 2031-ஐ இலக்காக கொள்ளும் பட்சத்தில், தேசிய அரசியல் சக்தியுடன் இணக்கமான உறவு அவசியமாகலாம்.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து விஜய்யின் கட்சிக்கு ஆரம்ப காலங்களில் பேச்சுவார்த்தை நடந்ததாக செய்திகள் வந்தன. ஆனால், அந்த பேச்சுவார்த்தைகள் முறிந்துவிட்டதாக கூறப்பட்டது. அக்கூட்டணி பேச்சுவார்த்தையின்போது, விஜய்யே முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட வேண்டும், ஆட்சி அமைந்தால் முதல் பாதியில் அவர் முதலமைச்சராக இருக்க வேண்டும், மேலும், மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 50% இடங்கள் ‘தமிழக வெற்றிக் கழகத்திற்கு’ ஒதுக்கப்பட வேண்டும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாகவும், இதை அ.தி.மு.க. ஏற்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்தச் செய்திகள், விஜய் கூட்டணியில் இணைய விரும்பினால் கூட, அவர் ஒரு ஜூனியர் பார்ட்னராக இருக்க தயாராக இல்லை என்பதையும், தனது தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்பதையும் காட்டுகிறது. ஆனால் இப்போதைக்கு அவரது மனம் மாறியுள்ளதாகவும், ஒரு குறிப்பிட்ட அளவு தொகுதிகளை பெற்று அதிமுக கூட்டணியில் இணைய அவர் முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் காங்கிரஸின் 5% ஓட்டை வச்சுகிட்டு ஒன்னும் செய்ய முடியாது” மற்றும் “தனியாக நின்றாலும் கஷ்டம் தான்” என்று விஜய்க்கு அரசியல் ஆலோசகர்கள் அறிவுறுத்தியிருப்பதாகவும் தெரிகிறது. ஆரம்ப காலத்தில் வலுவான நட்சத்திர செல்வாக்குடன் அரசியல் கட்சி தொடங்கிய விஜயகாந்தின் தே.மு.தி.க., 2006 தேர்தலில் 8% வாக்குகளை பெற்றாலும் ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. 2011-ல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தபோது 28 இடங்களில் வென்றது. இது, புதிய கட்சிகள் தனித்து நின்று கணிசமான இடங்களை பிடிப்பது எவ்வளவு கடினம் என்பதை காட்டுகிறது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. கமல்ஹாசனே கோவையில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் தோல்வி அடைந்தார்.
விஜய்யின் தனிப்பட்ட செல்வாக்கு அவருக்கு கணிசமான வாக்கு சதவீதத்தை பெற்று தரக்கூடும். ஆனால், அந்த வாக்குகள் தொகுதி வாரியாக சிதறுண்டு போகும்போது, அது தேர்தல் வெற்றியாக மாறுவது கடினம். காங்கிரஸ் கட்சி 2014ல் தனித்து போட்ட்யிட்டபோது அதன் வாக்கு சதவீதம் சுமார் 4-5% இருந்ததை பார்த்தோம். அப்படி இருக்கும் நிலையில், 5% வாக்கை வைத்து கொண்டு பெரிய அளவில் சாதிக்க முடியாது. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து போவதால் திமுகவுக்கும் பெரிய பாதிப்பு இருக்காது.
எனவே தான் முதல்வர் பதவி ஆசையை 2031-ல் பார்த்துக் கொள்ளலாம்” என்ற கோணம், விஜய்யின் நீண்ட கால அரசியலையும், அதன் வியூகத்தையும் குறிப்பதாக இருக்கலாம்.
மொத்தத்தில் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தற்போதைக்கு எந்த கூட்டணியிலும் இணையாமல், குறிப்பாக அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணியை நிராகரித்து, தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வை ஒரே நேரத்தில் எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்தால் அதன்பின் அரசியல் செய்ய முடியாது. எனவே இப்போதைக்கு இப்போதைக்கு கூட்டணி, அடுத்த தேர்தலில் தனித்து போட்டி என்பது தான் விஜய்யின் இறுதி முடிவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
