விஜய் ஒன்றும் அண்ணாமலை இல்லை என்றும், அண்ணாமலையை விட விஜய் பாப்புலர் என்றும், அண்ணாமலை அரசியலுக்கு வருவதற்கு முன்பே விஜய் அரசியலுக்கு அடித்தளம் இட்டவர் என்றும், எனவே அண்ணாமலையை எதிர்த்து அரசியல் செய்வதுபோல் விஜய்யை எதிர்த்து அவ்வளவு எளிதாக அரசியல் செய்ய முடியாது என்றும் பத்திரிகையாளர் டி.என்.ரகு சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை திமுகவுக்கு சவாலாகவும் சிம்ம சொப்பனமாகவும் இருந்தவர் அண்ணாமலை மட்டுமே. திமுக எதிர்ப்பை பட்டிதட்டி எங்கும் சேர்த்தவர் அண்ணாமலைதான் என்பதும், அதுமட்டுமின்றி பாஜக என்ற ஒரு கட்சியே இருப்பது தெரியாமல் இருந்த மக்களுக்கு அப்படி ஒரு கட்சி இருக்கிறது என்று மக்கள் மத்தியில் அறிமுகம் செய்து வைத்தவர் அண்ணாமலைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்தவிதமான சினிமா வெளிச்சமும் இன்றி, அரசியல் பின்புலமும் இல்லாமல் திடீரென அரசியலுக்கு வந்து தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியவர் அண்ணாமலை. தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலையை தூக்கி எறிந்ததும், பாஜகவின் மூத்த தலைவர்களை விட அதிகமாக சந்தோஷப்பட்டது திமுகவினர் தான். ஒரு வழியாக இனி அண்ணாமலையின் தொல்லை முடிந்துவிட்டது என்றுதான் நினைத்தார்கள். அது கிட்டத்தட்ட உண்மையும் கூட என்பது அண்ணாமலை அமைதியாக இருப்பதிலிருந்து தெரிந்துவிட்டது.
ஆனால் அண்ணாமலையை மிக எளிதாக பதவியில் இருந்து தூக்கியது போல் விஜய்யை அவ்வளவு சீக்கிரமாக திமுக ஒதுக்கிவிட முடியாது. ஏனென்றால் விஜய் 5 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வரப்போவதைத் திட்டமிட்டு, நற்பணி இயக்கம் என்ற பெயரில் மக்கள் சேவை செய்து, புத்தகம் முதல் மருத்துவமனை வரை மக்கள் சேவை செய்து, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு தன்னுடைய அரசியல் இருப்பை வெளிப்படுத்தி கொண்டே இருந்தார்.
இந்த நிலையில், தற்போது அரசியல் கட்சியும் ஆரம்பித்து அவருக்கு கிட்டத்தட்ட 20% வாக்குகள் இருப்பதாகவும் கூறப்படும் நிலையில், அண்ணாமலையை விட பல மடங்கு திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக விஜய் இருப்பார் என்றுதான் கூறப்பட்டு வருகிறது. விஜய் ஒன்றும் அண்ணாமலை இல்லை. அண்ணாமலையை கிட்டத்தட்ட அரசியலிலிருந்து ஒதுக்கியது போல் விஜய்யை அவ்வளவு சீக்கிரமாக ஒதுக்க முடியாது. திமுக தலைவர்கள் அண்ணாமலையின் பெயரை சொல்லி அவருக்கு புகழை தேடி தரக்கூட விரும்பாமல் இருந்தார்கள். ஆனால் விஜய்யின் பெயரை அவ்வாறு சொல்லாமல் இருக்க முடியாது?
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது எப்படி மோடி எதிர்ப்பு என்ற ஒரே புள்ளியில் திமுக வெற்றி பெற்றது போல், இப்போதைக்கு திமுகவின் எதிர்ப்பாக தமிழக வெற்றிக்கழகம், அதிமுக கூட்டணி மற்றும் சீமான் கூட்டணி என மூன்று கூட்டணிகள் உள்ளன. இந்த மூன்று கூட்டணிகளில் யாரை தன்னுடைய முதல் எதிரியாக பார்க்க வேண்டும் என்பதை திமுக தான் முடிவு செய்ய வேண்டும். அந்த தகுதி விஜய்க்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது.
எனவே, திமுகவினர் வரும் நாட்களில் விஜய்யைதான் அதிகம் விமர்சனம் செய்ய முயற்சி செய்வார்கள். அதுமட்டுமின்றி, இதுவரை பாஜக எதிர்ப்பு ஓட்டுக்களை மொத்தமாக திமுக அள்ளி வந்தது. கிட்டத்தட்ட 10 முதல் 15 சதவீதம் வரை அந்த கூட்டணிக்கு எளிதாக இந்த வாக்குகள் கிடைத்தது. ஆனால் தான் பாஜகவுக்கு எதிரி என்று விஜய் பிரகடனப்படுத்தி வருவதால், அந்த வாக்குகள் தற்போது பிரிகிறது. எனவே, பாஜகவுடன் விஜய்யை தொடர்புபடுத்தி வைக்க திமுக முயற்சி செய்யும் என்றும், பாஜகவின் பி டீம் தான் விஜய் என்று மக்களை நம்ப வைக்கும் அளவுக்குப் பிரச்சாரம் இருக்கும் என்றும் பத்திரிகையாளர் டி.என்.ரகு தெரிவித்துள்ளார்
எனவே, வரும் தேர்தலில் திமுகவுக்கு சவாலாக இருப்பது விஜய்யா? அல்லது எடப்பாடி பழனிசாமியா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
