தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய தலைமை உருவாகும்போதெல்லாம், அவர்களை “பாஜக-வின் பி டீம்” அல்லது “திமுக-வின் பி டீம்” என்று முத்திரை குத்தி, அந்த தலைவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறுவதை தடுக்கும் ஒரு திட்டமிட்ட அரசியல் சதி சில ஆண்டுகளாக நடைபெறுவதாக பொதுமக்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் ஒரு பரவலான கருத்து எழுந்துள்ளது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் குறித்த சமீபத்திய விவாதங்களில் இந்த குற்றச்சாட்டு வலுப்பெற்றுள்ளது.
விஜய்யின் அரசியல் நகர்வுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ‘மீண்டும் அதே வலையில் மக்கள் விழுந்துவிடக் கூடாது’ என்றும், ‘இதுவே தமிழக மக்களுக்கு கிடைத்த கடைசி வாய்ப்பு’ என்றும் சமூக ஊடகங்களிலும், பொது விவாதங்களிலும் மக்கள் கொந்தளிப்புடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த ‘பி டீம்’ முத்திரைக் குத்தும் அரசியலின் மிகப்பெரிய மற்றும் துயரமான உதாரணம், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவர் விஜயகாந்த் தான் என்று பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
2006 மற்றும் 2011 சட்டமன்ற தேர்தல்களில், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய இரு திராவிட கட்சிகளுக்கும் ஒரு வலுவான மாற்றாக விஜயகாந்த் உருவெடுத்தார். வலிமையான தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்வது அவ்வளவு சுலபம் அல்ல, ஆனால் அந்த கடினமான அரசியலை செய்த விஜயகாந்த், கணிசமான வாக்குகளை பெற்று, 2011-ல் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற நிலையை அடைந்தார்.
இந்தக் காலகட்டத்தில்தான், விஜயகாந்த் “யாருடைய ஏஜென்ட்” அல்லது “யாருடைய பி டீம்” என்ற விவாதம் திட்டமிட்டு எழுப்பப்பட்டது. ஒரு பக்கம் அவர் அ.தி.மு.க-வுக்கு சாதகமானவர் என்றும், மறுபுறம் தி.மு.க-வுக்கு சாதகமானவர் என்றும் தொடர்ச்சியாக முத்திரைகள் குத்தப்பட்டன. அரசியல் ரீதியாக அவரை பலவீனப்படுத்திய இந்த தொடர்ச்சியான முத்திரை குத்துதல்கள் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்களால், மக்கள் மத்தியில் இருந்த அவரது நம்பகத்தன்மை மெல்ல மெல்ல குறைந்தது. அந்த நேரத்தில் விஜயகாந்துக்கு உடல்நிலையும் சரியில்லாமல் போய்விட்டால் தமிழகத்தின் ஒரு மாற்று அரசியல் சக்தியாக அவர் நிலைபெற முடியாமல் போனது.
விஜயகாந்துக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட அதே “பி டீம்” அஸ்திரம், தற்போது விஜய்க்கு எதிராக பயன்படுத்தப்படுவதாக பொதுமக்கள் உணர்கின்றனர். விஜய், பாஜக-வின் கைப்பாவை என்றும், தி.மு.க. வாக்குகளை பிரிக்க பாஜக-வால் அனுப்பப்பட்டவர் என்றும் ஒரு தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர். இன்னொருபுறம், அ.தி.மு.க. மற்றும் பாஜக கூட்டணியை உடைக்க தி.மு.க-வால் அனுப்பப்பட்டவர் விஜய் என்றும், அவர் தி.மு.க-வின் ‘பி டீம்’ என்றும் சிலர் முத்திரை குத்துகின்றனர்.
கரூர் கூட்டத்தில் நடந்த நெரிசல் சம்பவத்தின்போதுகூட, விஜய்யின் அரசியல் நோக்கத்தை மொத்தமாக சோலி முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த குற்றச்சாட்டுகள் மிக வேகமாக பரப்பப்பட்டதாக பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலவுகிறது.
தமிழக அரசியல் களத்தில் இரண்டு பிரதான திராவிட கட்சிகளுக்கு ஒரு உண்மையான மாற்று தலைமை தேவை என்ற ஏக்கம் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது. இந்த சூழலில், ஒரு புதிய தலைமை உருவெடுக்கும்போதெல்லாம், பழைய அரசியல் சக்திகள் மக்களை திசைதிருப்பி, அந்த புதிய தலைமையை நம்பகத்தன்மையற்றதாக மாற்றி விடுகின்றன என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
“புதிதாக வருபவர் நல்லவரா, கெட்டவரா என்பதை அவரது செயல்பாடுகளை வைத்து மட்டுமே மக்கள் தீர்மானிக்க வேண்டும். அவர் எந்த கட்சியின் ‘பி டீம்’ என்று முத்திரை குத்தி, அவரை தவறாக மக்கள் புரிந்துகொள்ளக் கூடாது.”
“விஜயகாந்துக்கு உரிய அங்கீகாரம் கொடுக்காமல் ஏமாந்தோம். இப்போது விஜய் மூலம் ஒரு மாற்றம் வர வாய்ப்பு உள்ளது. இந்த வாய்ப்பை மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல், மீண்டும் இரு திராவிடக் கட்சிகளுக்குள் மாட்டிக்கொள்வது நிரந்தரமாகும். இதுவே தமிழக அரசியலில் மாற்றத்துக்கான கடைசி வாய்ப்பு.”
“விஜய்யும் தனது அரசியல் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையுடனும், துணிச்சலுடனும் செயல்பட வேண்டும். தன்னை பற்றிய தவறான முத்திரைகளை உடைத்தெறிந்து, தனக்கான அரசியல் பாதையை தெளிவாக நிறுவ வேண்டும்.”
மொத்தத்தில், ஒரு புதிய தலைமை உருவாகும்போதெல்லாம், அதை அழிக்கும் நோக்கில் திட்டமிட்டு பரப்பப்படும் இந்த ‘பி டீம் அரசியல்’ குறித்து மக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதே பெரும்பான்மையான தமிழக மக்களின் கருத்தாக உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
