தமிழக அரசியல் களத்தில் இப்போது ஒரே ஒரு பெயர் தான் ரிக்டர் அளவுகோலில் அதிர்வுகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது, அது தமிழக வெற்றி கழக தலைவர் விஜய். இதுவரை பொதுக்கூட்ட மேடைகளிலும், சமூக வலைதள அறிக்கைகளிலும் மட்டுமே தன் அரசியல் நிலைப்பாடுகளை பகிர்ந்து வந்த விஜய், இப்போது முதல்முறையாக ஒரு முன்னணி செய்தி நிறுவனத்திற்கு நேரலையில் பிரத்யேக பேட்டி அளிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல், கோட்டையை நோக்கி நகரும் அவரது அரசியல் பாதையில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக கருதப்படுகிறது. வரும் ஏப்ரல் 14-ம் தேதி, தமிழ் புத்தாண்டு தினத்தில் ஒளிபரப்பாக போகும் இந்த பேட்டி, வெறும் ஊடக உரையாடல் மட்டுமல்ல, அது 100 தேர்தல் பிரச்சாரங்களுக்கு சமமான வீச்சை கொண்டிருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.
சினிமா வாழ்வின் உச்சத்தில் இருக்கும்போதே அதையெல்லாம் துறந்துவிட்டு, முழுநேர அரசியலில் இறங்கிய விஜய்யின் ஒவ்வொரு நகர்வும் மற்ற அரசியல் கட்சிகளால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக விஜய் எப்போதுமே ஒரு ‘மிஸ்டரி’ மனிதராகவே பார்க்கப்படுபவர்; அவர் என்ன நினைக்கிறார், அவரது அடுத்த மூவ் என்ன என்பது அவரது நெருங்கிய வட்டாரத்திற்கே சில சமயம் தெரியாது. அப்படிப்பட்டவர், தேர்தல் களம் சூடுபிடித்துள்ள இந்த சூழலில், நேரலையில் தோன்றி மக்களின் கேள்விகளுக்கும், அரசியல் விமர்சகர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்க முன்வந்திருப்பது ஒரு துணிச்சலான முடிவாக பார்க்கப்படுகிறது. இந்த பேட்டிக்காக ஒரு பிரபல செய்தி நிறுவனம் ஒப்பந்தத்தை செய்திருப்பதாகவும், இதற்கான படப்பிடிப்பு மற்றும் நேரலை ஏற்பாடுகள் மிகவும் ரகசியமாகவும், பிரம்மாண்டமாகவும் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏப்ரல் 14 அன்று நடக்கப்போகும் இந்த ‘மெகா’ நேர்காணலில், தமிழகத்தின் தற்போதைய ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து விஜய் தனது அதிரடியான விமர்சனங்களை முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, திராவிட மாடல் ஆட்சிக்கும், தேசிய கட்சிகளின் செயல்பாடுகளுக்கும் இடையே தனது ‘தமிழக வெற்றி கழகம்’ எப்படி ஒரு மாற்றாக இருக்கும் என்பதை அவர் விளக்கவுள்ளார். களத்தில் இறங்கி 234 தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரம் செய்வதை விட, ஒரே ஒரு ஒருமணி நேர நேரலை பேட்டியின் மூலம் ஒட்டுமொத்த தமிழக மக்களையும், குறிப்பாக நடுநிலை வாக்காளர்களையும், இளைஞர்களையும் சென்றடைய முடியும் என்பது விஜய்யின் கணக்கு.
இந்த செய்தி பரவியது முதலே சமூக வலைதளங்களில் “தெறிக்கப் போகுது வியூஸ்” என்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன. டிஜிட்டல் யுகத்தில் ஒரு தலைவரின் நேரடி பேச்சு எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த பேட்டி ஒரு சான்றாக அமையும். பாரம்பரியமாக ஒரு கட்சியின் வாக்கு வங்கியை சிதைப்பது என்பது கடினமான காரியம், ஆனால் விஜய்யின் இந்த நேரலை உரையாடல், மற்ற கட்சிகளின் வாக்கு வங்கியில் ஒரு பெரிய ஓட்டையை போடும் என்று அஞ்சப்படுகிறது. இதனாலேயே, ஏப்ரல் 14-ம் தேதி விஜய்யின் பேட்டிக்கு பிறகு தமிழக அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் வியூகங்களை மொத்தமாக மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் என்பதில் சந்தேகமில்லை. அன்றைய தினம் தமிழ்நாட்டின் அரசியல் திசையே மாறப்போகிறது என்பதற்கான அறிகுறிகள் இப்போதே தென்பட தொடங்கிவிட்டன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
