தற்போது தமிழக அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது விஜய் மட்டுமே என்றும், இதுவரை திமுகவை ஆவேசமாக எதிர்த்து வந்த அண்ணாமலைக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்த நிலையில், தற்போது விஜய் வந்தவுடன் அதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அண்ணாமலை பின்னுக்கு தள்ளப்பட்டு விஜய் தான் திமுகவை உண்மையாகவே எதிர்ப்பவர் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் தோன்றியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
திமுக பல சிக்கல்களில் மாட்டும்போதெல்லாம் அண்ணாமலையே அந்த சிக்கலை மடை மாற்றி திமுகவை காப்பாற்றி வருகிறார் என மூத்த பத்திரிகையாளர் மணி அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, திமுக மற்றும் பாஜக மறைமுக கூட்டணியாக இருக்கலாம் என்றும், வெளிப்படையாக இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்து விமர்சனம் செய்தாலும், உள்ளுக்குள் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருக்கிறது என்பதும் தற்போது மக்களுக்கு புரிய ஆரம்பித்துள்ளது.
இதை தான் விஜய் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறார். “நீங்கள் அடிப்பது போல் அடித்துக் கொள்வீர்கள், விமர்சனம் செய்வது போல் செய்து கொள்வீர்கள், அதையெல்லாம் கேட்டு நாங்கள் ஏமாற வேண்டுமா?” என்று விஜய் நேரடியாகவே சொன்னதன் கருத்து இப்போதுதான் மக்களுக்கு புரிய ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில், விஜய்யுடன் எந்த கட்சியும் கூட்டணி வைக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக திமுக தரப்பில் பல உள்ளடி வேலைகள் செய்யப்படுவதாகவும், விஜய்க்கு மறைமுகமாக சிக்கல்கள் தர பாஜகவுடன் திமுக மறைமுக கூட்டணி ஏற்படுத்தியிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் கூறப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், திமுகவினர் இது குறித்து கூறிய போது “இன்னும் ஒரு தேர்தல்கூட சந்திக்காத விஜய்யை நாங்கள் எதிரியாகவே கருதவில்லை, போட்டியாளராகவும் பார்க்கவில்லை. எங்களுக்கு உண்மையான போட்டி அதிமுக மட்டுமே. விஜய்யின் அரசியல் அவருடைய விஷயம், அவர் பற்றி எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என்று கூறி வருகின்றனர்.
உண்மையில், விஜய்யை பார்த்து திமுக பயப்படுகிறதா? பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைத்து விஜய்க்கு தொல்லை கொடுக்க முயற்சிக்கிறதா? என்பதெல்லாம் யூகமாக இருந்தாலும், அரசியலில் எதுவும் நடக்கலாம் என்றும் சிலர் கூறி வருகின்றனர். ஆனால், ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. விஜய்யின் அரசியல் வருகை, திமுக உட்பட மற்ற அனைத்து கட்சிகளுக்கும் ஒரு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.