விஜய் – சீமான் கூட்டணியா? ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆதரவா? 3வது அணியால் பரபரப்பு..!

  அதிமுக மற்றும் திமுக கூட்டணி வலுவாக அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், இரண்டு கூட்டணிகளிலும் சேர முடியாத நிலை விஜய் மற்றும் சீமான் ஆகிய இருவருக்குமே ஏற்பட்டுள்ளது. எனவே, தங்களுடைய கருத்து வேறுபாடுகளை மறந்து,  விஜய்…

 

அதிமுக மற்றும் திமுக கூட்டணி வலுவாக அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், இரண்டு கூட்டணிகளிலும் சேர முடியாத நிலை விஜய் மற்றும் சீமான் ஆகிய இருவருக்குமே ஏற்பட்டுள்ளது. எனவே, தங்களுடைய கருத்து வேறுபாடுகளை மறந்து,  விஜய் மற்றும் சீமான் இருவரும் இணைந்து, 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்று விஜய் கனவு கண்டிருந்த நிலையில், அதிமுக திடீரென பாஜகவை கூட்டணியில் இணைத்துக் கொண்டதால், விஜய்க்கு தர்ம சங்கடமான நிலைமை ஏற்பட்டது. அதேபோல், அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் மாறி மாறி விமர்சனம் செய்த சீமான், அதிமுக கூட்டணியில் இணைவதிலும் நெருடல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சீமான் விஜய்யை சில முறை விமர்சனம் செய்திருந்தாலும், அந்த விமர்சனத்தை மறந்து விஜயுடன் கைகோர்த்து, தேர்தலை சந்திக்க சீமான் திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், அதிமுக – பாஜக கூட்டணியிலும் இடம் கிடைக்காத ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர், விஜய்-சீமான் கூட்டணிகள் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது மட்டும் இன்றி, கடைசி நேரத்தில் அதிமுக மற்றும் திமுகவிலிருந்து பிரிந்து வரும் கட்சிகள் அல்லது பிரிந்து வரும் அரசியல் பிரமுகர்கள், விஜய் கட்சியில் இணையலாம் என்றும், அதிமுக திமுக இல்லாத மூன்றாவது ஒரு கூட்டணி அமைக்க இருவருமே திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை, இதுவரை மூன்றாவது கூட்டணியை சில முறை முயற்சித்து பார்த்து தோல்வி அடைந்தது என்பதும், குறிப்பாக விஜயகாந்த், வைகோ  உள்ளிட்டோர் ஆரம்பித்த மக்கள் நல கூட்டணி படுதோல்வி அடைந்தது என்பது தெரிந்தது. ஆனால், விஜய்-சீமான் அமைக்க இருக்கும் மூன்றாவது கூட்டணி, தேர்தலில் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.