தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்ற தேர்தல் ஒரு மிகப்பெரிய அதிகார போட்டிக்கான களமாக மாறியுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ மற்றும் பாஜக இடையிலான உறவு குறித்த புதிய யூகங்கள் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. “நான் என்.டி.ஏ கூட்டணிக்கு வந்தால், சிறுபான்மையினரின் வாக்குகள் நமக்கு கிடைக்காது; அது உங்களுக்கும் லாபமல்ல, எனக்கும் தோல்வியையே தரும்” என்று விஜய் அமித்ஷாவிடம் ஒரு மறைமுக தூது ஒப்பந்தம் செய்ததாக அரசியல் விமர்சகர்கள் ஒரு புதிய தகவலை கசியவிட்டுள்ளனர். இந்த வியூகத்தின்படி, விஜய் தனியாக போட்டியிட்டு திமுகவின் சிறுபான்மையினர் மற்றும் தலித் வாக்கு வங்கியில் ஒரு மிகப்பெரிய பிளவை ஏற்படுத்துவார் என்பதே அமித்ஷாவின் ‘மெகா பிளான்’ ஆக பார்க்கப்படுகிறது.
பாஜக மற்றும் விஜய் இடையே ஒரு ‘நிழல் ஒப்பந்தம்’ நிலவுவதாக சொல்லப்படும் இந்த கோட்பாடு, தமிழகத்தில் திமுகவின் பலத்தை குறைப்பதையே முதல் இலக்காக கொண்டுள்ளது. விஜய் நேரடியாக பாஜகவுடன் கைகோர்த்தால், அவர் மீது ‘பாஜகவின் பி-டீம்’ என்ற முத்திரை குத்தப்படும்; இது நடுநிலை மற்றும் சிறுபான்மையினர் வாக்குகளை அவரிடமிருந்து அந்நியப்படுத்தும். ஆனால், அவர் தனியாக நின்று ‘மதச்சார்பற்ற’ முழக்கங்களை முன்வைக்கும்போது, திமுகவிற்கு செல்லும் சுமார் 13% சிறுபான்மையினர் வாக்குகள் மற்றும் 20% இளைஞர் வாக்குகளில் ஒரு பகுதியை அவரால் சுலபமாக ஈர்க்க முடியும். இது திமுகவின் வெற்றியை தீர்மானிக்கும் அந்த ‘கோர்’ வாக்கு வங்கியை சிதைக்கும் ஒரு தந்திரமாகவே பார்க்கப்படுகிறது. இதே டெக்னிக்கில் தான் மக்கள் நல கூட்டணி அமைந்ததாக கூறப்படுவதுண்டு.
அமித்ஷாவின் கணக்குப்படி, 2026-ல் திமுகவை ஆட்சி கட்டிலில் இருந்து இறக்க வேண்டுமானால், அக்கட்சியின் கூட்டணி வாக்குகளை சிதறடிக்க வேண்டியது அவசியம். விஜய் தனியாக போட்டியிடுவது என்பது பாஜகவிற்கு எதிரானதல்ல, மாறாக திமுகவின் வாக்கு சரிவிற்கு வழிவகுக்கும் ஒரு ‘இயற்கை காரணமாகவே டெல்லி மேலிடம் கருதுகிறது. “நீங்கள் உங்கள் கூட்டணி கட்சிகளை வலுப்படுத்துங்கள், நான் என் வழியில் திமுகவின் வாக்குகளை பிரிக்கிறேன்; தேர்தலுக்கு பிறகு நாம் ஒரு சுமுகமான முடிவை எடுப்போம்” என்பது போன்ற ஒரு புரிந்துணர்வு இவர்களுக்குள் இருப்பதாக விமர்சகர் தரப்பு அடித்து கூறுகிறது.
இந்த சூழலில், விஜய் காங்கிரஸை தனது பக்கம் இழுக்காமல் இருப்பதே அமித்ஷாவின் முக்கிய நிபந்தனையாக இருப்பதாக தெரிகிறது. ஒருவேளை விஜய் காங்கிரஸுடன் கைகோர்த்தால், அது மீண்டும் ஒரு மெகா மதச்சார்பற்ற கூட்டணியாக மாறி பாஜகவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டுவிடும். எனவேதான், விஜய் ‘தனி ஒருவனாக’ நின்று களம் காண்பதை பாஜக விரும்புவதாக தெரிகிறது. இதன் மூலம் வாக்குகளை சிதறவிட்டு, முடிவில் ஒரு ‘தொங்கு சட்டமன்றம்’ உருவானால், விஜய்யின் ஆதரவுடன் தமிழகத்தில் தனது செல்வாக்கை நிலைநாட்ட பாஜக திட்டமிடுகிறது.
திமுக தரப்போ, விஜய்யின் ஒவ்வொரு நகர்வையும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. “விஜய் பாஜகவின் கத்தி” என்று உதயநிதி ஸ்டாலின் மற்றும் பிற அமைச்சர்கள் விமர்சிப்பது, விஜய்க்கு வரும் சிறுபான்மையினர் வாக்குகளை தடுக்கவே ஆகும். ஆனால், அண்ணாமலை மற்றும் அமித்ஷா போன்றவர்களின் சமீபத்திய பேச்சுகளில் விஜய் மீதான மென்மையான அணுகுமுறை, இந்த ‘மறைமுக ஒப்பந்தம்’ உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. விஜய் ஒருவேளை திமுகவின் வாக்குகளை பிரித்து, பாஜக ஒரு குறிப்பிடத்தக்க இடங்களைக் கைப்பற்றினால், அது தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கும்.
இறுதியாக, 2026 தேர்தல் என்பது ‘ஸ்டாலினா அல்லது விஜய்யா?’ என்ற மோதலை தாண்டி, ‘அமித்ஷாவின் வியூகமா அல்லது திராவிடத்தின் பலமா?’ என்ற போட்டியாக உருவெடுத்துள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை இப்போதே முடித்துவிட்டு, களத்தில் எதிரெதிரே நிற்பது போல காட்சியளிப்பது ஒரு தேர்ந்த அரசியல் தந்திரமாகும். இந்த நிழல் யுத்தத்தில் விஜய் தனது சிறுபான்மையினர் ஆதரவை தக்கவைத்துக்கொண்டு, திமுகவை வீழ்த்த அமித்ஷாவுக்கு உதவுவாரா என்பதை இன்னும் சில மாதங்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
