2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, திமுக தலைமையிலான கூட்டணியின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் தற்போது தீவிரமடைந்துள்ளன.
“திமுக கூட்டணி உடையுமா? கூட்டணி இல்லாமல் திமுக ஜெயிக்க முடியுமா? 2026 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக இருக்குமா? இவை 3 கட்சிகளும் வெளியேறி பாஜக இல்லாத அதிமுகவுக்கு செல்லுமா? தவெகவுக்கு செல்லுமா? கூட்டணி கட்சிகள் வெளியேறினால் திமுக நிலைமை என்ன?” போன்ற கேள்விகள் அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுப்பப்படுகின்றன. இந்த கேள்விகளுக்கான சாத்தியக்கூறுகளை அலசுவோம்.
திமுக கூட்டணியின் தற்போதைய நிலை:
திமுக தலைமையிலான கூட்டணி, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலிலும், ஒரு நாடாளுமன்ற தேர்தலிலும் அமோக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மதிமுக, இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. இந்த கூட்டணி, வலுவான வாக்கு வங்கியை உருவாக்கியுள்ளது. ஆனால் சமீபகாலமாக, திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ், விசிக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றன.
காங்கிரஸ்: திமுக கூட்டணியில் அதிகபட்சமாக 20 அல்லது 25 தொகுதிகள் மட்டுமே கிடைப்பதாகவும், ஆட்சியிலும் பங்கு கிடைக்காது என்றும் தென் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூறிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவே, தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுவதற்கு முக்கிய காரணமாகும். காங்கிரஸுக்கு திமுக ஆட்சியில் உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
விசிகவும் தங்களது அரசியல் பலத்தை அதிகரித்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த தேர்தல்களில் கிடைத்த இடங்கள், அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருந்ததா என்பது கேள்விக்குறி. துணை முதல்வர் பதவிக்கான விருப்பம் போன்ற எதிர்பார்ப்புகள், எதிர்கால கூட்டணி பேச்சுவார்த்தையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
மதிமுகவின் நிலைப்பாடு பெரும்பாலும் திமுக தலைமையின் அணுகுமுறையை பொறுத்தே அமையும். வைகோவின் ராஜ்யசபா எம்.பி பதவியை கமல்ஹாசனுக்கு மாற்றி கொடுத்த நிலையில், தங்கள் கட்சிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற கருத்து சிலரிடம் உள்ளது. எனவே இந்த 3 கட்சிகள் கூட்டணியை விட்டு வெளியேற கூடும் என்ற ஊகங்கள் எழுகின்றன.
கூட்டணி கட்சிகள் வெளியேறினால் திமுகவின் நிலை என்ன?
திமுக ஒரு வலுவான வாக்கு வங்கி கொண்ட கட்சிதான். ஆனால், கடந்த காலங்களில் அதிமுகவை வீழ்த்துவதற்கு கூட்டணி பலம் மிக முக்கியமானதாக இருந்தது. தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தீர்மானிக்கப்படும் நிலையில், கூட்டணி கட்சிகளின் ஒவ்வொரு சதவீத வாக்கும் மிகவும் முக்கியமானது.
காங்கிரஸ், விசிக, மதிமுக போன்ற கட்சிகள் வெளியேறினால், திமுகவின் வாக்கு சதவீதம் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. குறிப்பாக, சிறுபான்மையினர் வாக்குகள், குறிப்பிட்ட சமூக வாக்குகள் ஆகியவற்றில் இந்த கட்சிகள் ஒரு குறிப்பிட்ட பங்கை வகிக்கின்றன. இவை சிதறினால், திமுகவுக்கு சிரமமாக அமையலாம்.
கூட்டணி கட்சிகள் திமுகவை விட்டு வெளியேறினால், அவர்கள் அடுத்தகட்டமாக எங்கு செல்வார்கள் என்பது மிக முக்கியமான கேள்வி முக்கியமாக உள்ளது. பாஜக இல்லாத அதிமுக, இந்த மூன்று கட்சிகளுக்கும் ஒரு கவர்ச்சிகரமான மாற்று கூட்டணியாக இருக்கலாம். குறிப்பாக, மதச்சார்பின்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சிகளுக்கு இது உகந்ததாக அமையும்.
இன்னொரு புறம் நடிகர் விஜய் தலைமையிலான தவெக, ஒரு புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான தகவல்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. இளைஞர்கள் மற்றும் புதிய மாற்றத்தை விரும்பும் வாக்காளர்களை தவெக கவர்வதால், கூட்டணியை விட்டு வெளியேறும் கட்சிகளுக்கு இது ஒரு புதிய அரசியல் வாய்ப்பாக அமையலாம்.
சமீபத்திய கருத்துக்கணிப்புகள், திமுகவுக்கு ஒற்றைக்கட்சி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக காட்டுகின்றன. 118 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு, கூட்டணி பலம் அத்தியாவசியம். காங்கிரஸ், விசிக, மதிமுக போன்ற கட்சிகள் வெளியேறினால், வாக்குகள் சிதறி, திமுகவின் வெற்றி வாய்ப்பு கணிசமாக குறையலாம். ஒரு தொங்கு சட்டசபை அமைய அதிக வாய்ப்புகள் உள்ளன. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் ஆதரவு தேவைப்படும்.
மொத்தத்தில் 2026 தேர்தல் கூட்டணி அரசியல் யதார்த்தத்தை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கக்கூடும். திமுக தனது கூட்டணி பங்காளிகளை தக்கவைத்துக் கொள்ளவும், அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவும் முயற்சிக்க வேண்டும். அதேசமயம், அதிமுக மற்றும் தவெக போன்ற கட்சிகள் புதிய கூட்டணிகளை அமைத்து, தங்களின் பலத்தை அதிகரிக்க முயற்சிக்கின்றன. தேர்தல் நெருங்கும்போது இந்த கூட்டணி சமன்பாடுகள் எவ்வாறு மாறுகின்றன என்பதை பொறுத்தே தமிழகத்தின் அடுத்த அரசியல் களம் அமையும்.
கடைசியாக உன்னை யாரோ பெத்திருக்க, என்னை யாரோ பெத்திருக்க, ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா என அதிமுகவும், தவெகவும் கூட்டணி கட்சிகளை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றன, இதில் யாருக்கு ஜாக்பாட் அடிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
