விஜய்க்கு அதிமுக தேவை.. அதிமுகவுக்கும் விஜய் தேவை.. ஒருவர் தேவையை ஒருவர் பூர்த்தி செய்தால் ஆட்சி நிச்சயம்.. திமுகவை வீட்டுக்கு அனுப்பலாம்.. வீம்பு பிடித்தால் திமுகவுக்கு தான் லாபம்.. தனித்து ஆட்சி என்பது திமுக, அதிமுகவால் கூட முடியாது. விஜய் யதார்த்தத்தை புரிந்து கொள்வாரா?

நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தமிழக அரசியலில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் பிரதான கட்சிகளுக்கும் விஜய்க்கும் இடையே ஒரு தவிர்க்க முடியாத தேவை உருவாகியுள்ளது.…

vijay eps

நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தமிழக அரசியலில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் பிரதான கட்சிகளுக்கும் விஜய்க்கும் இடையே ஒரு தவிர்க்க முடியாத தேவை உருவாகியுள்ளது. தி.மு.க.வை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்ற இலக்கு நிறைவேற, அ.தி.மு.க.வுக்கு விஜய்யின் வாக்குகளும், விஜய்க்கு அ.தி.மு.க.வின் வலுவான கட்டமைப்பும் இன்றியமையாதவை. இருவரும் தங்களின் தேவையை பூர்த்தி செய்து ஒரு கூட்டு சக்தியாக மாறினால், தி.மு.க. ஆட்சியை அகற்றுவது நிச்சயம் சாத்தியமாகும்.

தமிழ்நாட்டில் இன்றுள்ள அரசியல் சூழலில், திராவிட கட்சிகளைத் தாண்டி எந்த ஒரு சக்தியாலும், ஏன் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வாலும்கூட, தனித்து சென்று அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது என்பது எளிதான காரியம் அல்ல.

2011ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் வாக்கு சதவீதத்தில் ஏற்பட்டுள்ள சரிவு, சிறு கட்சிகள் மற்றும் புதிய முகங்களின் எழுச்சி ஆகியவை, ஒற்றை கட்சி ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்கின்றன.

தி.மு.க.கூட்டணி மற்றும் அ.தி.மு.க.க்கூட்டணி ஆகிய இரண்டு பிரதான அணிகளே தமிழக அரசியலை தீர்மானிக்கும். இந்த இரு அணிகளிலும் சேராமல், மூன்றாவது அணியாகவோ அல்லது தனித்தோ நிற்கும் எந்த ஒரு புதிய கட்சியும், முதல் இரண்டு இடங்களை பிடிப்பது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்ற யதார்த்தம்.

அரசியல் அனுபவம் இல்லாத விஜய், தனது ரசிகர் பட்டாளத்தை மட்டும் வைத்துக்கொண்டு, தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடிக்க முடியும் என்று நம்புவது, தேர்தல் அரசியலில் பலியான பல முன்னாள் நடிகர்களின் வரலாற்றை மீண்டும் எழுதுவதாகவே அமையும்.

அ.தி.மு.க., எடப்பாடி பழனிசாமி தலைமையில் வலுவான அடித்தளத்தை கொண்டிருந்தாலும், தி.மு.க.வை வீழ்த்துவதற்கு புதிய மற்றும் உற்சாகமான சக்தியின் தேவை இருக்கிறது. அ.தி.மு.க.வின் பாரம்பரிய வாக்கு வங்கி வலுவாக இருக்கிறது. ஆனால், 2026ஆம் ஆண்டு தேர்தலில் புதிதாக வாக்களிக்க வரும் இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற இளைஞர்கள் மத்தியில் தி.மு.க.வுக்கு சவால் கொடுக்க ஒரு கவர்ச்சிகரமான முகம் அ.தி.மு.க.வுக்கு இல்லை. விஜய்க்கு உள்ள இளைஞர்கள் மத்தியில் இருக்கும் அதீத கவர்ச்சி மற்றும் அவரது ரசிகர் மன்றங்களின் கட்டுக் கோப்பு அ.தி.மு.க.வின் தேர்தல் இயந்திரத்திற்கு புதிய ரத்தத்தைக் கொடுக்கும். சுமார் 6 முதல் 8% வரையிலான புதிய மற்றும் நடுநிலை வாக்குகளை விஜய் அணி திரட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் தனித்து போட்டியிட்டால், அவர் தி.மு.க.வின் வாக்குகளை பிரிப்பதை போலவே, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுக்கு செல்லக்கூடிய வாக்குகளையும் பிரிப்பார். இதனால் அ.தி.மு.க.வுக்கு பின்னடைவு ஏற்படும். எனவே, அந்த வாக்குகளை தன்னோடு இணைத்து கொள்வது அ.தி.மு.க.வுக்கு அவசியம்.

விஜய் கட்சிக்கு இன்னும் போதுமான கட்டமைப்போ, ஆழமான அரசியல் அனுபவமோ இல்லை. ஒரு பெரிய கட்சியை நம்பியே அவர் தனது முதல் தேர்தலை அணுக வேண்டும். தேர்தல் அரசியலில் வெற்றிபெற, தேர்தல் பணிகளுக்கு அ.தி.மு.க.வின் மாவட்ட ரீதியிலான வலுவான கட்டமைப்பு, நிதி பலம் மற்றும் தேர்தல் சாமர்த்தியம் விஜய்க்கு அவசியம். வெறும் ரசிகர் மன்றங்களை மட்டும் வைத்துக்கொண்டு, தேர்தல் செலவுகள் மற்றும் பூத் ஏஜெண்ட் போன்ற முக்கிய பணிகளைச் சமாளிப்பது விஜய்க்கு சாத்தியமில்லை.

கரூர் விவகாரம் போன்ற நெருக்கடிகளின்போது, சட்டப்பூர்வமான மற்றும் அரசியல் ரீதியான சவால்களை எதிர்கொள்ள, அ.தி.மு.க. போன்ற அனுபவம் வாய்ந்த கட்சியின் சட்ட பலம் மற்றும் ஆலோசனைகள் விஜய்க்குத் தேவை.

விஜய் உடனடியாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற விரும்பினால், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மூலம் வெற்றிபெற்று, துணை முதல்வர் அல்லது முக்கிய அமைச்சர் பதவியை பெறுவதே நடைமுறையில் சாத்தியமான ஒரே வழி. முதலமைச்சர் பதவியை உடனடியாக கோரினால், அதிமுக – தவெக கூட்டணி அமையாது. அது தி.மு.க.வுக்கே லாபமாக அமையும்.

விஜய் அல்லது அ.தி.மு.க. தலைவர்கள் இருவரும் தங்களின் வீம்பு அரசியலை கைவிடாவிட்டால், அது தி.மு.க.வின் வெற்றிக்கு மறைமுகமாக வழிவகுக்கும். “நான் தனித்து நிற்கிறேன், முதலமைச்சராவேன்” என்று விஜய் வீம்பு பிடித்தால், அது எதிர்க்கட்சி வாக்குகளை பிரித்து, தி.மு.க.வின் வெற்றியை உறுதி செய்யும். அதேபோல் அ.தி.மு.க. “எங்களுக்கு விஜய் தேவையில்லை” என்று நிராகரித்தால், இளையோர் வாக்குகள் சிதறும். மேலும், தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற லட்சியம் நிறைவேறாமல் போகும்.

ஒருவர் தேவையை ஒருவர் பூர்த்தி செய்யும் கூட்டணியே, ஆட்சி மாற்றத்தை நோக்கி செல்லும் சரியான வழி. அ.தி.மு.க.வின் தேர்தல் யுக்தியும், விஜய்யின் இளைஞர் எழுச்சியும் இணைந்தால், 2026ல் தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்பும் லட்சியம் சாத்தியப்படும். இந்த யதார்த்தமான அரசியல் தேவையை விஜய்யும் எடப்பாடி பழனிசாமியும் புரிந்துகொண்டு நிதானமாக செயல்பட வேண்டும் என்பதே அரசியல் நோக்கர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.