SIR விஷயத்தில் விஜய் எடுக்கப்போகும் அணுகுமுறை என்ன? திமுகவை நேரடியாக தாக்குவதை தவிர்ப்பது ஏன்? டிஜிட்டல் பிரச்சாரம் மட்டும் போதுமா? விஜய் மீண்டும் களத்தில் இறங்க வேண்டும்.. அரசியல் விமர்சகர் பிஸ்மி

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறையான SIR குறித்த நிலைப்பாடு, வாக்காளர்களின் பாதுகாப்பை மையப்படுத்தியுள்ளது. மேலும் இந்த SIR நடவடிக்கைகளால் புதிதாக வாக்களிப்பவர்கள்…

vijay 5

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறையான SIR குறித்த நிலைப்பாடு, வாக்காளர்களின் பாதுகாப்பை மையப்படுத்தியுள்ளது. மேலும் இந்த SIR நடவடிக்கைகளால் புதிதாக வாக்களிப்பவர்கள் அதாவது விஜய்க்கு ஓட்டு போடுபவர்கள் தான் பாதிப்பு அடைவார்கள் என்பதால் இந்த விஷயத்தை விஜய் சீரியஸாக எடுத்து கொள்வார் என்று அரசியல் விமர்சகர் பிஸ்மி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

SIR என்பது ஒரு குழப்பமான விஷயம் என்றும், பல ஆண்டுகளாக வாக்காளர்களாக இருப்பவர்கள் இந்த குழப்பமான படிவங்களை தவறாக நிரப்புவதன் மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் தவெக கருதுகிறது.

தமிழ்நாட்டின் தற்போதைய வாக்காளர் எண்ணிக்கை 6 கோடியே 36 லட்சம். இந்த SIR நடைமுறையால் குறைந்தது ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்று தவெக தரப்பில் கணிக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்துவிட்டால், அதை எதிர்த்து போராடி வாபஸ் பெற செய்வது கடினம். எனவே, இந்த SIR படிவத்தை சரியாகப் பூர்த்தி செய்வது எப்படி என்பது குறித்து தவெக தனது தொண்டர்கள் மூலமாக மக்களுக்கு புரிதலை ஏற்படுத்தி உதவிகளை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரூர் சம்பவத்திற்குப் பிறகு, விஜய் களத்திற்கு ஏன் உடனடியாக வரவில்லை என்று எழுந்த விமர்சனங்களுக்கு பின்வரும் காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன:

கரூர் நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலால்தான் 41 பேர் உயிரிழந்தனர். உச்சத்தில் இருக்கும் சினிமா நடிகரான விஜய் மீண்டும் களத்திற்கு சென்றால், மீண்டும் அதே போன்ற கூட்டம் கூடி, அதே துயரம் நடக்கக்கூடாது என்று அவர் கரூருக்கு செல்வதைத்தவிர்த்தார்.

சம்பவம் நடந்த பிறகு, உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க விஜய் விரும்பியபோதும், காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் உரிய அனுமதி கொடுக்கவில்லை என்றும், இதனால் அவர் காத்திருக்க நேர்ந்தது என்றும் கூறப்படுகிறது.

அனுமதி மறுக்கப்பட்டதால், விஜய் முதலில் வீடியோ கால் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் பேசி ஆறுதல் கூறினார். அதன் பின்னரே, பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து, அவர்களை சந்தித்துப் பேசி, மன்னிப்பு கேட்டார். நிவாரணத் தொகையும் வழங்கியுள்ளார்.

இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் பொதுக்கூட்டத்தில் இத்தனை பெரிய உயிரிழப்பு ஏற்பட்டது இதுவே முதல் முறை. இதனால், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், ஒரு உளவியல் ரீதியான முடக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், இதை ஒரு மனித தன்மையுடன் பார்க்க வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் களத்தில் இறங்கி மக்களை சந்திப்பதற்குப் பதிலாக, சமூக ஊடகங்கள் வழியாகவே அதிக அரசியல் செய்வது அவருக்குப் பலவீனமாக மாறலாம் என விமர்சனம் உள்ளது. இளைஞர்களை சென்றடைய டிஜிட்டல் தளங்கள் போதுமானது என்று விஜய் கருதினால், அது அவருக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். களத்தில் களமாடுவதுதான் உண்மையான அரசியல். விஜய் இதை சீக்கிரம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

தி.மு.க. மற்றும் அதன் தலைவர்களை நேரடியாக விமர்சிப்பதற்கு பதிலாக, விஜய் மறைமுகமாக பேசுவது குறித்து எழுந்த கேள்விகளுக்கு விஜய்க்கு தி.மு.க. மீது பயம் எதுவும் இல்லை. அவர் தி.மு.க.வை “கபட நாடகம் ஆடுபவர்கள்,” “பா.ஜ.க.வோடு கள்ள உறவு வைத்திருப்பவர்கள்” என மற்ற கட்சிகள் பயன்படுத்தாத கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்.

தி.மு.க. தலைவர்கள் விஜய்யை நேரடியாக பெயரிட்டு குறிப்பிடாமல், “இன்றைக்கு வந்த எதிரிகள்” என்று மறைமுகமாக பேசுவதன் மூலம், “நீயெல்லாம் எங்களுக்கு ஒரு ஆளா?” என்ற தொனியை காட்டுகிறார்கள். அதற்கு பதிலடியாக, “நானும் உங்கள் பெயரை உச்சரிக்க மாட்டேன், ஆனால் உங்களைத்தான் தாக்குவேன்” என்ற பாணியை விஜய் பயன்படுத்துகிறார்.

தி.மு.க. விஜய்யின் அரசியல் எழுச்சியை கண்டு பயங்கரமான கலக்கத்திலும் பதட்டத்திலும்தான் இருக்கிறது. “அறிவுத் திருவிழா” என்ற பெயரில் தவெக-வை விமர்சிப்பதே இதற்கு சாட்சி. தி.மு.க. என்பது கல்யாண வீட்டிற்கு சென்றாலும் எதிராளியை விமர்சிக்கும் கட்சி என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும்.

தவெக கொள்கைகளை பேசுவதற்குப் பதிலாக, ஆளும் கட்சிகளை மட்டும் விமர்சிப்பதாக எழும் கேள்விக்கு தவெக-வுக்கு தனிக் கொள்கைகள் உள்ளன. அவற்றை முதல் இரண்டு மாநாடுகளிலேயே தலைவர் விஜய் தெளிவுபடுத்திவிட்டார். ஒவ்வொரு கூட்டத்திலும் கொள்கைகளை பேசிக்கொண்டே இருந்தால் மக்கள் சலிப்படைந்து விடுவார்கள். 2026 தேர்தலின் இலக்கு, இன்றைய ஆளுங்கட்சியான தி.மு.க.வை அதிகாரத்தில் இருந்து இறக்குவது மற்றும் அந்த இடத்தில் தவெக அமர்வது. எனவே, ஆளும் அரசின் தவறுகளை விமர்சிப்பதுதான் இந்த நேரத்தில் செய்ய வேண்டிய சரியான அரசியல்.

கட்சி தொடங்கும்போதே, தி.மு.க. அரசியல் எதிரி என்றும், பா.ஜ.க. கொள்கை எதிரி என்றும் விஜய் தெளிவாக அறிவித்துவிட்டார். எனவே, இந்த இரண்டு எதிரிகளையும் தாக்குவது சரியான அணுகுமுறையே ஆகும்.