வெர்ஸே இன்னோவேஷனின் சி.பி.டி.ஓ-வாக பிரசன்னா பிரசாத் நியமனம்.. ஏஐ தொழில்நுட்பத்தில் புது பாய்ச்சல்!

டெய்லிஹண்ட், ஜோஷ் மற்றும் ஒன்இந்தியா போன்ற முன்னணி டிஜிட்டல் தளங்களை உள்ளடக்கிய வெர்ஸே இன்னோவேஷன் நிறுவனம், தனது நிர்வாக கட்டமைப்பை அதிரடியாக மேம்படுத்தும் வகையில் பிரசன்னா பிரசாத்தை தலைமை தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப அதிகாரியாக…

verse

டெய்லிஹண்ட், ஜோஷ் மற்றும் ஒன்இந்தியா போன்ற முன்னணி டிஜிட்டல் தளங்களை உள்ளடக்கிய வெர்ஸே இன்னோவேஷன் நிறுவனம், தனது நிர்வாக கட்டமைப்பை அதிரடியாக மேம்படுத்தும் வகையில் பிரசன்னா பிரசாத்தை தலைமை தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப அதிகாரியாக நியமித்துள்ளது.

சர்வதேச அளவில் தொழில்நுட்பத் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட பிரசன்னா பிரசாத், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முன்னணி தொழில்நுட்ப குழுக்களை வழிநடத்திய பெருமைக்குரியவர். இதற்கு முன்பு ‘வெர்வ் குரூப்’ நிறுவனத்தில் சி.டி.ஓ-வாக பணியாற்றி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் அந்த நிறுவனத்தின் வர்த்தகத்தை வெற்றிகரமாக உயர்த்தி காட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இனிவரும் காலங்களில் வெர்ஸே நிறுவனத்தின் பொறியியல், தரவு அறிவியல் மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு பிரிவுகளை பிரசன்னா பிரசாத் முழுமையாக வழிநடத்துவார். நிறுவனத்தின் அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வதே இவரது முதன்மை இலக்காகும். குறிப்பாக, பயனர்களுக்கு அவர்கள் விரும்பும் உள்ளடக்கங்களை ஏஐ மூலம் மிக துல்லியமாகப் பரிந்துரைப்பதிலும், டிஜிட்டல் விளம்பரத் துறையில் அதிநவீன தொழில்நுட்ப மாற்றங்களை புகுத்துவதிலும் அவர் கவனம் செலுத்துவார்.

டிஜிட்டல் உலகில் உள்ளடக்க உருவாக்கம் மற்றும் விளம்பரங்களின் எதிர்காலத்தை ஏஐ தொழில்நுட்பமே தீர்மானிக்கிறது என்பதால், பிரசன்னாவின் வருகை தங்களது தொழில்நுட்ப கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என வெர்ஸே இன்னோவேஷன் நிறுவனத்தின் இணை நிறுவனர் உமங் பேடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தனது புதிய பொறுப்பு குறித்து பேசிய பிரசன்னா பிரசாத், ஒரு தளம் பிரம்மாண்டமாக வளரும்போது அதன் தனித்துவமான தொழில்நுட்பமே பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் என்றும், வெர்ஸே நிறுவனத்தின் இந்த முக்கியமான வளர்ச்சி கட்டத்தில் இணைவதை மகிழ்ச்சியாக கருதுவதாகவும் தெரிவித்தார்.

கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற உலகளாவிய ஜாம்பவான்களின் முதலீட்டை பெற்ற வெர்ஸே இன்னோவேஷன் நிறுவனம், தற்போது பிரசன்னா பிரசாத்தின் தலைமையின் கீழ் ஏஐ தொழில்நுட்பத்தில் புதிய மைல்கற்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.