சர்வதேச அரசியலில் 2026-ன் தொடக்கமே ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியுடன் அரங்கேறியுள்ளது. வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ அமெரிக்க சிறப்புப் படைகளால் ‘ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்’ மூலம் அதிரடியாக சிறைபிடிக்கப்பட்டு, நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் உலக நாடுகளின் கவனம் தற்போது சீனா மற்றும் இந்தியாவின் எதிர்வினைகள் மீது திரும்பியுள்ளது.
வெனிசுலாவில் கடந்த பத்தாண்டுகளில் சுமார் 60 பில்லியன் டாலர் வரை கடனாகவும், முதலீடாகவும் கொட்டியுள்ள சீனா, மதுரோவின் கைதுக்கு கண்டனம் தெரிவிக்க 24 மணி நேரத்திற்கும் மேலாக எடுத்துக்கொண்டது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் இந்த மௌனம், அமெரிக்காவுடன் ஏதோ ஒரு ரகசிய எண்ணெய் ஒப்பந்தத்தை சீனா செய்துகொண்டதோ என்ற ஐயப்பாட்டை உலக நாடுகளிடையே விதைத்துள்ளது.
மறுபுறம், வெனிசுலாவில் சொல்லிக்கொள்ளும்படி பெரிய முதலீடுகள் எதையும் செய்யாத இந்தியா, இந்த சம்பவத்திற்கு உடனடியாகவும் மிக நிதானமாகவும் எதிர்வினையாற்றியுள்ளது உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகம் “வெனிசுலா நிலவரம் ஆழமான கவலையளிக்கிறது” என்று கூறியதோடு, அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து உடனே பயண ஆலோசனைகளை வழங்கியது. முதலீடுகள் அதிகம் கொண்ட சீனா அமைதியாக இருக்க, மனிதாபிமான அடிப்படையில் இந்தியா காட்டிய இந்த துரித நடவடிக்கை, சர்வதேச அளவில் இந்தியாவின் வளர்ந்து வரும் ராஜதந்திரப் பொறுப்பினை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
சீனாவின் இந்த தாமதத்திற்கு பின்னால் ஒரு மிகப்பெரிய பொருளாதார கணக்கு இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வெனிசுலாவின் மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 70-80 சதவீதம் சீனாவிற்குத்தான் சென்று கொண்டிருந்தது. தற்போது டொனால்ட் டிரம்ப், “சீனாவிற்கு எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படாது; நாங்கள் அதை முறைப்படுத்துவோம்” என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. இதன் மூலம், மதுரோவை அமெரிக்கா அப்புறப்படுத்தினாலும், தனது பழைய கடன்களை திரும்ப பெறுவதற்கும் தடையற்ற எண்ணெய் விநியோகத்திற்கும் அமெரிக்காவிடம் இருந்து சீனா ஏதோ ஒரு ரகசிய வாக்குறுதியை பெற்றிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. எதிரியான அமெரிக்காவின் அத்துமீறலை சீனா கடுமையாக கண்டிக்க தவறியதற்கு இதுவே முக்கிய காரணமாக இருக்கலாம்.
வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை பொறுத்தவரை, உலகிலேயே மிகப்பெரிய இருப்பை கொண்ட அந்த நாடு, தற்போது அமெரிக்காவின் நேரடி பார்வையில் வந்துள்ளது. டிரம்ப் தனது உரையில், “வெனிசுலாவின் எண்ணெய் வளம் எங்களுடையது, அதை எங்களிடமிருந்து அவர்கள் திருடினர்” என்று கூறியிருப்பது, அமெரிக்காவின் உண்மையான நோக்கம் எண்ணெய் வளத்தை சுரண்டுவதுதான் என்பதை உறுதிப்படுத்துகிறது. இந்தியாவிற்கும் இதில் ஒரு முக்கியமான நலன் உள்ளது. வெனிசுலாவில் இந்தியாவின் ONGC Videsh நிறுவனம் சுமார் 1 பில்லியன் டாலர் வரை ஈவுத்தொகையாக நிலுவை வைத்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் அந்த நிலுவை தொகை கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளதால், இந்தியாவின் ரியாக்சன் ஒரு நுணுக்கமான ராஜதந்திர நகர்வாக பார்க்கப்படுகிறது.
இந்த ‘எண்ணெய் போர்’ சர்வதேச சந்தையில் பெரும் மாற்றங்களை உருவாக்கும். சீனா தனது முதலீடுகளை காப்பாற்றிக்கொள்ளவும், அமெரிக்கா தனது எரிசக்தி மேலாதிக்கத்தை நிலைநாட்டவும் வெனிசுலாவை ஒரு பகடைக்காயாக பயன்படுத்துகின்றன. ரஷ்யாவும் ஈரானும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஆசியாவின் இரு பெரும் சக்திகளான இந்தியாவும் சீனாவும் காட்டும் இந்த முரண்பாடான அணுகுமுறைகள், தென் அமெரிக்க பிராந்தியத்தில் ஒரு புதிய பனிப்போரை உருவாக்கியுள்ளன. அமெரிக்காவின் பிடியில் வெனிசுலா செல்வது சீனாவுக்கு பின்னடைவா அல்லது இரு நாடுகளும் சேர்ந்து எண்ணெய் வளத்தை பங்கு போடப்போகின்றனவா என்பது வரும் வாரங்களில் தெரியவரும்.
இறுதியாக, 2026-ன் இந்த அரசியல் மாற்றம் ஐக்கிய நாடுகள் சபையின் பலத்தை மீண்டும் ஒருமுறை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் அதிபரை மற்றொரு நாடு அத்துமீறி சிறைபிடிப்பது “காட்டுச் சட்டம்” என விமர்சிக்கப்படும் வேளையில், வல்லரசுகளின் ரகசிய திட்டங்கள் நாடுகளின் எல்லைகளை தாண்டி செயல்படுகின்றன. வெனிசுலாவின் எண்ணெய் கிணறுகள் மீண்டும் அமெரிக்க நிறுவனங்களின் வசம் செல்வது உறுதியாகிவிட்ட நிலையில், இதற்காக சீனா பெற்றுக்கொண்ட விலை என்ன என்பதுதான் இப்போதைய மர்மம். எதுவாக இருந்தாலும், எண்ணெய் அரசியலில் இந்தியா தனது காய்களை மிக கவனமாக நகர்த்தி வருகிறது என்பது மட்டும் திண்ணம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
