27 வயது இளைஞர் ஒருவர், தனது நெருங்கிய நண்பருடன் சேர்ந்து, காய்கறி மற்றும் பழங்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்கி, ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கிய நிலையில், மிகப்பெரிய அளவில் அவரது நிறுவனம் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும், அவர் ரூ.4000 கோடி மதிப்புள்ள வீட்டில் வசித்து வருகிறார் என்பதும், மத்திய விமானத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவின் மகன் மஹார்யமன் சிந்தியா செல்வந்த குடும்பத்தில் பிறந்தாலும், தனது சொந்த முயற்சி மற்றும் கடின உழைப்பின் மூலம் தனக்கு சம்பாதிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அவரது வணிக முயற்சிக்கு குடும்பத்தினரும் ஊக்கமளித்தனர். தனது நெருங்கிய நண்பர் சூர்யாவுடன் இணைந்து, 2022 ஆம் ஆண்டு MYMandi என்ற விவசாய ஸ்டார்ட்அப்பை தொடங்கினார்.
இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி, ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் நிறுவனமாக மாறியது. இரண்டு ஆண்டுகளுக்குள், இந்த நிறுவனம் சுமார் ரூ.20 கோடி வருவாய் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமின்றி, மறைந்த ரத்தன் டாடா இந்த நிறுவனத்தை பற்றி அறிந்து, ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர் மற்றும் மத்திய அமைச்சரின் மகனாக இருந்தாலும், சிந்தியா தனது பரம்பரை சொத்தான ரூ.4000 கோடி மதிப்புள்ள ஜெய் விலாஸ் அரண்மனையில் வாழ்ந்து வருகிறார். இருப்பினும், அவர் தனது ராஜபோக வாழ்க்கையை வெளியில் காட்டிக் கொள்வதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமின்றி, தனது தந்தையைப் போல் அரசியலுக்கு வர வேண்டுமென்ற எண்ணம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக, ஐபிஎல் கிரிக்கெட் அணி வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் அது நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.
“ஒரு மனிதன் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் திறன் பெற்றிருக்க வேண்டும்; அதற்கு அரசியலுக்கு வரவேண்டிய அவசியம் இல்லை,” என்றும் “மகாத்மா காந்தி போல தேர்தல், அரசியலில் ஈடுபடாமல் சமூக சேவை செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம்,” என்றும் மஹார்யமன் சிந்தியா தெரிவித்துள்ளார்.