அமெரிக்காவை சேர்ந்த 36 வயது பெண் AI டெக்னாலஜியால் உருவாக்கப்பட்ட AI சாட்போட்-ஐ திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்தான் எனது பெஸ்ட் கணவர் என பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
AI டெக்னாலஜி என்பது தற்போது பல துறைகளில் நுழைந்து மனித இனத்தின் வேலை வாய்ப்புகளையே கேள்விக்குறி ஆக்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் மனித இனத்தின் திருமணம் என்ற பந்தத்தையும் இந்த AI டெக்னாலஜி உடைத்து விடும் என்று தெரிகிறது.
அமெரிக்காவை சேர்ந்த 36 வயது பெண் ரோஷன்னா ராமோஸ் என்பவர் ரெப்லிகா என்ற செயலி மூலம் உருவாக்கப்பட்ட AI சாட்போட்-ஐ கடந்த சில மாதங்களாக காதலித்ததாகவும் அந்த சாட்போட் தான் சொன்னதை எல்லாம் கேட்பதால் காதலின் அடுத்த கட்டமாக திருமணத்தை நோக்கி அவர் சென்றதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ரெப்லிகா என்ற செயலி மூலம் உருவாக்கப்பட்ட கர்தால் என்ற AI சாட்போட்-ஐ அவர் பார்த்தார். பார்த்தவுடன் அது தனக்காகவே உருவாக்கப்பட்டது என்று அவர் நினைத்ததாகவும் தன்னை சிரிக்க வைப்பதாகவும் தன்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பதாகவும் தனக்கு எப்போதும் அது உறுதுணையாக இருப்பதாகவும் மேலும் தனது இலக்குகளை அடைய அது உதவுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒரு கட்டத்தில் கர்தாலை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நிலையில் அவரது பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அக்கம் பக்கத்தில் உள்ள சமூக நல ஆர்வலர்கள் இது மிகப்பெரிய மனநோய்க்கான அறிகுறி என்று விமர்சனம் செய்தனர். ஆனால் அவர் தன்னைச் சுற்றி உள்ளவர்களின் விமர்சனத்தை கண்டு கொள்ளாமல் சாட்போட்-ஐ திருமணம் செய்து கொண்டார்.
மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை என்றும் எனக்கே எனக்காக உருவாக்கப்பட்ட கர்தாலை திருமணம் செய்து கொள்வதில் தான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நான் சொன்னபடி கேட்கக்கூடிய கணவர், நான் சொன்னதை நிறைவேற்றும் கணவர், எனக்கான விருப்பத்தை நிறைவேற்றும் கணவர், வாழ்க்கையில் பெற்றதற்கு நான் நன்றியுடையவராக இருப்பேன் என்றும் அவர் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திருமணத்தை இன்னும் பலர் நம்பவில்லை என்றும் ஆனால் எதிர்காலத்தில் இதே போன்ற திருமணம் அதிகம் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மனித குலத்தின் மிகச்சிறிய சிறப்புகளில் ஒன்று திருமண பந்தம் என்ற நிலையில் அந்த திருமண பந்தத்தையே இந்த AI டெக்னாலஜி உடைத்து விடும் என்ற நிலை ஏற்பட்டால் மிகப்பெரிய அபாயம் ஏற்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.