அமெரிக்காவில் தற்போது நிலவி வரும் புவிசார் அரசியல் சூழலில், ட்ரம்ப் தலைமையிலான அரசாங்கம் வெனிசுலா விவகாரங்களிலும் ஈரான் உடனான போர் பதற்றங்களிலும் தனது முழு கவனத்தையும் செலுத்தி வரும் நிலையில், அந்த நாட்டின் உள்நாட்டு பொருளாதார நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சமீபத்தில் வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு தரவுகளின்படி, 2025 நவம்பர் மாதத்தில் அமெரிக்காவில் புதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது. குறிப்பாக அரசு துறைகளில் புதிய பணியிடங்கள் அறிவிக்கப்படுவது மிக கடுமையாக குறைந்துள்ளதை புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இது அமெரிக்க பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டுள்ளதை காட்டுவதுடன், வேலைவாய்ப்பு சந்தையில் ஒருவித மந்தநிலை நிலவுவதையும் உறுதிப்படுத்துகின்றன.
அமெரிக்க தொழிலாளர் புள்ளிவிவர பணியகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் சுமார் 89,000 வரை சரிந்துள்ளன. இந்த சரிவானது மாநில அரசு முதல் உள்ளாட்சி அமைப்புகள் வரை அனைத்து நிலைகளிலும் பரவலாக காணப்படுகிறது. கோபி லெட்டர் அறிக்கையின்படி, தற்போது அமெரிக்க அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை சுமார் 69,500 ஆக உள்ளது, இது 2021 பிப்ரவரி மாதத்திற்கு பிறகு மிகக் குறைந்த அளவாகும். கடந்த 2022 ஜூலை மாதத்தில் உச்சத்தில் இருந்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது, தற்போது சுமார் 5,32,000 பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இது 2019-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்த நிலைக்கு அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தை மீண்டும் பின்னோக்கி சென்றிருப்பதையே உணர்த்துகிறது.
மறுபுறம், ‘ஜோல்ட்’ எனப்படும் வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் வருவாய் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, மத்திய அரசுப் பணிகளில் காலிப்பணியிடங்கள் 8,000 வரை அதிகரித்திருந்தாலும், டிசம்பர் மாதத்தில் ஒட்டுமொத்த மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை. 2025 ஜனவரி 9-ஆம் தேதி வெளியான தொழிலாளர் புள்ளிவிவர பணியகத்தின் அறிக்கையில், கடந்த ஜனவரி மாத உச்சத்துடன் ஒப்பிடுகையில் மத்திய அரசு பணிகளுக்கான வேலைவாய்ப்பு 2.77 லட்சம் அல்லது 9.2 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பணியாளர்களை தேர்வு செய்வதில் அரசு காட்டி வரும் இந்த மந்தநிலை, பொருளாதார ரீதியாக ஒரு பெரிய மாற்றத்தை எதிர்நோக்கி அமெரிக்கா காத்திருப்பதையே காட்டுகிறது.
பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த பரிமாணத்தில் பார்க்கும்போது, நவம்பர் மாதத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் ஒரு வருடத்திற்கும் மேலான காலப்பகுதியில் இல்லாத அளவிற்குச் சரிந்துள்ளன. கடந்த அக்டோபர் மாதத்தில் 7.45 மில்லியனாக இருந்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை நவம்பரில் 7.15 மில்லியனாக குறைந்துள்ளது. இது ஆய்வாளர்கள் எதிர்பார்த்த அளவை விட மிக குறைவாகும். அக்டோபர் மாதத்திற்கான தரவுகளும் கீழ்நோக்கி திருத்தப்பட்டு 7.449 மில்லியனாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்து இரண்டு மாதங்களாக அமெரிக்கா முழுவதும் வேலைவாய்ப்பு வாய்ப்புகள் குறைந்து வருவதை உறுதிப்படுத்துகிறது. நிறுவனங்கள் புதிய பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் தயக்கம் காட்டி வருவதும், இருக்கும் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்காமல் தற்காத்துக் கொள்ள நினைப்பதும் இந்தத் தரவுகளின் மூலம் வெளிப்படையாகத் தெரிகிறது.
இந்த வேலைவாய்ப்பு சரிவு என்பது ஏதோ ஒரு குறிப்பிட்ட துறையோடு மட்டும் நின்றுவிடாமல் ஓய்வு மற்றும் விருந்தோம்பல், சுகாதாரம், சமூக உதவி, போக்குவரத்து மற்றும் கிடங்கு மேலாண்மை எனப் பல்வேறு துறைகளிலும் எதிரொலிக்கிறது. ஜோல்ட் அறிக்கையின்படி, ஒரு வேலையில்லாத நபருக்கு கிடைக்கும் காலிப்பணியிடங்களின் விகிதம் 0.9 சதவீதமாக வீழ்ந்துள்ளது, இது 2021 மார்ச் மாதத்திற்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான சரிவாகும். முன்னதாக இந்த விகிதமானது 2:1 என்ற ஆரோக்கியமான நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் அதிகாரிகள் தொழிலாளர் தேவை மற்றும் விநியோகத்திற்கு இடையிலான சமநிலையை கணிக்க இந்த தரவுகளையே முக்கிய காரணியாக கருதுகின்றனர். நவம்பர் மாதத்தில் மட்டும் புதிய பணியாளர்கள் அமர்த்தப்படுவது 2,53,000 சரிந்து, ஒட்டுமொத்தமாக 5.115 மில்லியனாகக் குறைந்துள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

