அமெரிக்க பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பு வளர்ச்சி எதிர்பார்த்ததை விட மிகவும் மோசமாக உள்ளது என்று சமீபத்திய அரசு அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக, கடந்த 12 மாதங்களில் (ஏப்ரல் 2024 முதல் மார்ச் 2025 வரை) உருவாக்கப்பட்ட வேலைகளின் எண்ணிக்கை 9,11,000 குறைவு என்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரையிலான வரலாற்றில் இதுவே மிக குறைவான எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக கொள்கைகள், குறிப்பாக பிற நாடுகளின் மீது விதிக்கப்பட்ட வரிகள், இந்த பின்னடைவுக்கு ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகின்றன.
கடந்த மாதத்தில் வெறும் 22,000 புதிய வேலைகளே உருவாக்கப்பட்டன, மேலும் வேலையின்மை விகிதம் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. உற்பத்தி, சுரங்கம், கட்டுமானம் போன்ற வர்த்தக வரிகளால் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகள், வேலைகளை உருவாக்குவதற்கு பதிலாக, ஆயிரக்கணக்கான வேலைகளை இழந்துள்ளன.
பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, வர்த்தக வரிகள் நிறுவனங்களிடையே நிச்சயமற்ற சூழலை உருவாக்கியுள்ளன. இதனால், புதிய பணியாளர்களை நியமிக்க நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன. மேலும், எஃகு, அலுமினியம் போன்ற மூலப்பொருட்கள் மீதான வரிகள் உற்பத்தி செலவுகளை அதிகரித்துள்ளன.
சமீபத்திய கணக்கெடுப்பில், வேலையை இழந்தால் புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு 45% மட்டுமே இருப்பதாக அமெரிக்கர்கள் கருதுகின்றனர். இது, டிரம்ப் ஆட்சிக்காலம் உட்பட, பல ஆண்டுகளாக இல்லாத அளவுக்குக் குறைவான விகிதம் ஆகும்.
இந்த வேலைவாய்ப்புத் தரவுகள், அமெரிக்க அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஜூலை மாதம், வேலைவாய்ப்பு தரவுகள் திருத்தப்பட்டபோது, அப்போதைய தொழிலாளர் புள்ளியியல் ஆணையரை ஜனாதிபதி டிரம்ப் பணிநீக்கம் செய்தார். இப்போது, அதைவிட மிகப்பெரிய திருத்தம் வெளிவந்துள்ள நிலையில், டிரம்ப் நிர்வாகத்தின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
டிரம்ப் தனது வர்த்தக கொள்கைகள் மூலம் அமெரிக்க உற்பத்தித் துறையை வலுப்படுத்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக கூறி வந்தாலும், தற்போது வெளியாகியுள்ள தரவுகள் இதற்கு நேர்மாறாக உள்ளன. இது, அமெரிக்க பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையை குறைத்துள்ளது என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
