நீண்ட விடுமுறை கிடைத்தும் இந்தியாவுக்கு திரும்ப மறுக்கும் எச்1-பி விசா வைத்திருப்பவர்கள்.. இந்தியாவுக்கு சென்றால் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்ப முடியுமா என்ற சந்தேகமா? கிரீன் கார்டு பெற்றவர்கள் கூட பயணத்தை தவிர்க்கும் அதிர்ச்சி டேட்டா.. அமெரிக்காவுக்கு சென்ற இந்தியர்கள் இனி தாய்நாடு திரும்ப மாட்டார்களா? டிரம்ப் ஆட்சியில் இருக்கும் வரை சிக்கல் தான்..!

அமெரிக்காவில் 2026-ஆம் ஆண்டின் தொடக்கம் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பதிலாக, அங்கு வசிக்கும் மில்லியன் கணக்கான குடியேற்றவாசிகளுக்கு மிகுந்த அச்சத்தையும் பதற்றத்தையும் அளிக்கும் ஒன்றாக மாறியுள்ளது. குறிப்பாக, சட்டபூர்வமாக அந்நாட்டில் தங்கி பணியாற்றும் எச்1-பி விசா…

indians

அமெரிக்காவில் 2026-ஆம் ஆண்டின் தொடக்கம் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பதிலாக, அங்கு வசிக்கும் மில்லியன் கணக்கான குடியேற்றவாசிகளுக்கு மிகுந்த அச்சத்தையும் பதற்றத்தையும் அளிக்கும் ஒன்றாக மாறியுள்ளது. குறிப்பாக, சட்டபூர்வமாக அந்நாட்டில் தங்கி பணியாற்றும் எச்1-பி விசா வைத்திருப்பவர்கள் மற்றும் கிரீன் கார்டு பெற்றவர்கள் கூட, குடியேற்ற அதிகாரிகளின் கண்காணிப்பில் சிக்கிவிடுவோமோ என்ற பயத்தில் தங்கள் பயணங்களை தவிர்த்து வருகின்றனர்.

கைசர் ஃபேமிலி ஃபவுண்டேஷன் மற்றும் நியூயார்க் டைம்ஸ் இணைந்து நடத்திய 2025-ஆம் ஆண்டிற்கான ஆய்வில், அமெரிக்காவில் உள்ள குடியேற்றவாசிகளில் சுமார் 27 சதவீதம் பேர் கடந்த சில மாதங்களாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களை வேண்டுமென்றே தவிர்த்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த தரவுகள் அந்நாட்டில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுகின்றன.

இந்த அச்சத்தின் பின்னணியில் அமெரிக்காவின் போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் மற்றும் குடியேற்ற அமலாக்கத்துறை ஆகியவற்றுக்கு இடையே ஏற்பட்டுள்ள புதிய தரவு பகிர்வு ஒப்பந்தம் மிக முக்கிய காரணமாக உள்ளது. வழக்கமாக பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட பயணிகளின் தகவல்கள், தற்போது குடியேற்ற விதிகளை மீறுபவர்களை கண்டறிய குடியேற்றத்துறையிடம் பகிரப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, அமெரிக்காவிற்குள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு விமானத்தில் செல்வது கூட ஆபத்தானதாக கருதப்படுகிறது. குறிப்பாக, சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களில் 63 சதவீதம் பேரும், சட்டபூர்வமாக பணியாற்றும் எச்1-பி விசா வைத்திருப்பவர்களில் 32 சதவீதம் பேரும் இத்தகைய பயணங்களை தவிர்த்து ஏதேனும் பிரச்சனையில் சிக்கி கொள்ள கூடாது என்பதில் கவனமாக உள்ளனர்.

அமெரிக்கத் தொழில்நுட்பத் துறை மற்றும் சுகாதாரத்துறையின் முதுகெலும்பாக விளங்கும் எச்1-பி விசா வைத்திருப்பவர்களுக்கு 2025-ஆம் ஆண்டு பல சவால்களை கொண்டு வந்தது. புதிய எச்1-பி மனுக்களுக்கு சுமார் 1,00,000 டாலர் கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டதும், விசா லாட்டரி முறை மாற்றப்பட்டு அதிக ஊதியம் பெறுபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்ற விதியும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், சமூக வலைதள கணக்குகளை தீவிரமாக ஆய்வு செய்யும் முறை மற்றும் தொலைதூர இடங்களிலிருந்து விசா புதுப்பிக்கும் வசதி ரத்து செய்யப்பட்டது போன்றவை சட்டபூர்வ பணியாளர்களைக் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளன. இதனால், ஒருமுறை அமெரிக்காவை விட்டு வெளியேறினால் மீண்டும் உள்ளே வர முடியுமா என்ற சந்தேகம் பலருக்கு எழுந்துள்ளது.

இந்தியாவை போன்ற அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களை கொண்ட நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் விசா நேர்காணலுக்கான காத்திருப்பு காலம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. டிசம்பர் 2025-ல் நடைபெற வேண்டிய நேர்காணல்கள் திடீரென 2026-ன் பிற்பகுதிக்கும், சில நேரங்களில் 2027-ஆம் ஆண்டிற்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இது அவசர தேவைகளுக்காக தாய்நாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்த ஆயிரக்கணக்கான இந்தியப் பொறியாளர்கள் மற்றும் மருத்துவர்களை திகைக்க வைத்துள்ளது. விசா முத்திரை பெறுவதற்காக இந்தியா சென்றுவிட்டு, அங்கு பல மாதங்கள் சிக்கிக்கொண்டால் அமெரிக்காவில் இருக்கும் வேலை மற்றும் வாழ்வாதாரம் பறிபோய்விடும் என்ற அச்சமே இவர்களை முடக்கி போட்டுள்ளது.

வெறும் தற்காலிக விசா வைத்திருப்பவர்கள் மட்டுமல்லாமல், அமெரிக்க குடியுரிமை பெற்ற குடியேற்றவாசிகளில் கூட 15 சதவீதம் பேர் இத்தகைய கெடுபிடிகளால் தங்கள் பயண திட்டங்களை மாற்றியுள்ளனர். குடியுரிமை பெற்றவர்களின் பழைய ஆவணங்களை மீண்டும் சரிபார்ப்பது மற்றும் குடியுரிமையை ரத்து செய்யும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது போன்ற அரசின் நகர்வுகள், பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வசிப்பவர்களையும் நிம்மதியற்றவர்களாக மாற்றியுள்ளது. மொத்தத்தில் அமெரிக்காவின் உற்சாகமான விடுமுறை காலம், 2026-ல் பல குடும்பங்களுக்கு பிரிவையும் கவலையையும் மட்டுமே பரிசாக அளித்துள்ளது.

இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியிலும், அமெரிக்காவில் வசிக்கும் பெரும்பாலான குடியேற்றவாசிகள் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் அமெரிக்காவையே தேர்ந்தெடுப்போம் என்று கூறுவது ஒரு முரண்பாடான உண்மையாக உள்ளது. பொருளாதார வாய்ப்புகள் மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றுக்காக பல தியாகங்களை செய்த இவர்கள், தற்போது நிலவும் கொள்கை மாற்றங்களையும் ஒரு தற்காலிக தடையாகவே பார்க்கின்றனர். இருப்பினும், 2026-ஆம் ஆண்டு என்பது அமெரிக்க குடியேற்ற வரலாற்றில் சட்டபூர்வ குடியேற்றவாசிகளுக்கும் குடியேற்ற அதிகாரிகளுக்கும் இடையிலான நம்பிக்கை மிக குறைவாக உள்ள ஒரு காலப்பகுதியாக பதிவாகியுள்ளது. இந்த தீவிரக் கண்காணிப்பு மற்றும் கெடுபிடிகள் அமெரிக்காவின் பன்முகத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.