பெங்களூரு: விசா கேட்டு இனி சென்னை, ஐதராபாத் அலைய தேவையில்லை… அமெரிக்க துணை தூதரக அலுவலகம் பெங்களூருவில் அமைகிறது..ஜனவரி மாதம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று போற்றப்படும் பெங்களூருவில் இருந்து அமெரிக்க செல்ல விரும்புவோர் விசா பெற ஐதராபாத் அல்லது சென்னைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. எனவே பெங்களூருவிலேயே அமெரிக்க துணை தூதரக அலுவலகத்தை அமைக்க வேண்டும் என்பது பெங்களூரு மக்கள், தொழில்நுட்ப நிறுவனத்தினரின் பல வருட கோரிக்கையாக இருந்து வந்தது.
இந்த நிலையில் இதே கோரிக்கையை பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜனதா எம்.பி. தேஜஸ்வி சூர்யா மத்திய அரசிடம் வைத்தார். இதன் பலனாக அமெரிக்க துணை தூதரக அலுவலகத்தை பெங்களூருவில் அமைக்க மத்திய அரசும், அமெரிக்காவும் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் பெங்களூருவில் அமெரிக்க தூதரக அலுவலகம் அமைக்கப்பட இருப்பதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
இதனால் பெங்களூருவாசிகள் இனி அமெரிக்க செல்ல வேண்டும் என்றால், விசா எடுக்க சென்னை மற்றும் ஐதராபாத்துக்கு அலைய வேண்டிய அவசியம் ஏற்படாது. இனி பெங்களூருவில் அமைய உள்ள அமெரிக்க துணை தூதரக அலுவலகத்திலேயே விசா பெற்றுக்கொள்ளலாம். இந்த தகவலை தேஜஸ்வி சூர்யா எம்.பி. தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளார்.
முன்னதாக தென்னிந்தியாவிற்கே அமெரிக்க விசா பெற வேண்டும் என்றால் சென்னைக்குத்தான் வர வேண்டும் என்று பல காலம் இருந்தது. ஏனெனில் அமெரிக்க துணை தூதரகம் பல ஆண்டுகளாக சென்னையில் இருக்கிறது. அமெரிக்க துணை தூதரகம் மட்டுமின்றி, இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் சென்னையில் இருக்கிறது. சென்னையைவிட்டால் அந்த பக்கம் மும்பை, டெல்லி, கொல்கத்தாவிற்குத்தான் போக வேண்டும் என்கிற நிலை இருந்தது. படிப்படியாக ஹைதரபாத்திலும் தூதரகங்கள் வந்தன. இப்போது பெங்களூருவில் வரப்போகிறது.