நகரங்களில் மட்டுமல்லாமல், கிராமங்களிலும் பரவலாக பயன்பாட்டில் இருந்த UPI பண பரிவர்த்தனை, திடீரென பல வியாபாரிகளால் நிராகரிக்கப்படுவது பொதுமமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. UPI மூலம் பணப் பரிவர்த்தனைகள் அதிகமாக நடப்பதால், ஜிஎஸ்டி அலுவலகத்திலிருந்து நோட்டீஸ் வருவதாகவும், வருமான வரி கட்ட வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் கூறி, பல சிறு மற்றும் குறு வியாபாரிகள் UPI பரிவர்த்தனையை நிறுத்திவிட்டனர். ‘நோ யுபிஐ, ஒன்லி கேஷ்’ என்ற பெயர் பலகைகள் கூட பல கடைகளில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 10 ரூபாய்க்கு வாழைப்பழம் வாங்கினால் கூட UPI பயன்படுத்திய வாடிக்கையாளர்கள், தற்போது திடீரென ‘கேஷ்’தான் வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் பூதாகரமான சர்ச்சை;
இந்த யுபிஐ விவகாரம் பெங்களூருவில் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. சமீபத்தில், பெங்களூருவில் ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம், சவாரி செய்த பயணி UPI மூலம் பணம் செலுத்துவதாக கூறியுள்ளார். அதற்கு ஆட்டோ ஓட்டுநர், தன்னிடம் UPI இல்லை என்று கூறியபோது, “அப்படி என்றால் நான் பணம் செலுத்த மாட்டேன்” என்று கூறிவிட்டு அந்த பயணி அசால்ட்டாக சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“நான் UPI மூலம் பணம் செலுத்துவேன் அல்லது பணம் தர மாட்டேன்” என்று கூறிவிட்டு சென்றவரிடம் நியாயம் கேட்க, அந்த பகுதியில் உள்ளவர்களிடம் ஆட்டோ ஓட்டுநர் கோரிக்கை விடுத்தபோது எல்லோரும் தங்களுக்கு தெரியாது என்று கைவிரித்துவிட்டனர். அந்த அப்பாவி ஆட்டோ ஓட்டுநர் சவாரி செய்ததற்கான பணம் கிடைக்காமல் அதிர்ச்சியுடன் நின்றிருந்ததை பார்த்துப் பலரும் பரிதாபப்பட்டனர்.
மக்களின் மனநிலை மற்றும் வணிகர்களின் புலம்பல்:
UPI பரிவர்த்தனையை எல்லோரும் பழகிவிட்ட நிலையில், தற்போது திடீரென அதை ஏற்க முடியாது என்று கூறினால், இது போன்ற நடைமுறை சிக்கல்கள் வரும் என்றும், இன்னும் அதிக விளைவுகள் ஏற்படும் என்றும் பலரும் புலம்புவதை கேட்க முடிகிறது. ஒரு வசதியை அறிமுகப்படுத்தி, மக்கள் மத்தியில் நன்றாக பிரபலமடைந்த பிறகு, திடீரென அதை நிறுத்துவது என்பது சாத்தியமற்றது என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஜிஎஸ்டி விதிமுறைகளும் பொதுமக்களின் கோரிக்கையும்
சிறு மற்றும் குறு வணிகர்கள் தங்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டுகொள்ள வேண்டுமே தவிர, அதற்காக UPI பரிவர்த்தனையை நிறுத்துவது என்பது தீர்வாகாது என்று பலர் கூறி வருகின்றனர். பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் வருடத்திற்கு ரூ.40 லட்சமும், சேவை செய்பவர்கள் வருடத்திற்கு ரூ.20 லட்சமும் வருமானம் ஈட்டினால் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்பது விதியாகும். “அந்த விதிப்படி வருமானம் வந்தால் ஜிஎஸ்டி செலுத்த வேண்டியதுதானே, அதற்காக ஏன் எங்களை தொல்லைப்படுத்துகிறார்கள்?” என்பதுதான் பொதுமக்களின் பொதுவான கருத்தாக உள்ளது.
மொத்தத்தில், UPI விவகாரம் பெங்களூரை மட்டுமின்றி, அனைத்து நகரங்களிலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்திற்கு அரசு தரப்பிலிருந்தோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்தோ ஒரு தெளிவான தீர்வு எட்டப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
