தமிழக அரசியலில் தற்போது நிலவும் சூழலில், நடிகர் விஜய் ஒரு மர்மமான மற்றும் கணிக்க முடியாத அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளார். தமிழக வெற்றி கழகத்தை தொடங்கி அதன் கொள்கைகளை அறிவித்திருந்தாலும், அவர் இன்னும் ஒரு முழுநேர அரசியல்வாதியாக மக்கள் மத்தியில் உரையாட தொடங்கவில்லை என்பது விமர்சகர்களின் பிரதான கருத்தாக உள்ளது. அவர் எப்போது பேசுவார், என்ன பேசுவார் என்று அனைவரும் காத்திருக்கும் வேளையில், அவரது மௌனம் ஒரு வகை அரசியல் யுக்தியாகவே பார்க்கப்படுகிறது. அவர் பேசினால் மட்டுமே அவரது அரசியல் முதிர்ச்சியையும், அவர் யாருக்கு எதிராக களம் காண்கிறார் என்பதையும் ஓரளவாவது கணிக்க முடியும். ஆனால், “பேசவும் மாட்டேன், எதையும் இப்போதே வெளிப்படுத்தவும் மாட்டேன்” என்ற அவரது பிடிவாதம் எதிர்க்கட்சிகளுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் முடிவுகள், இதுவரை தமிழகம் கண்டிராத பல ஆச்சரியங்களையும் அதிர்ச்சிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் அடித்து சொல்கிறார்கள். பொதுவாக ஒரு புதிய கட்சி களம் இறங்கும்போது அது ஆளுங்கட்சியின் ஓட்டுகளை பிரிக்குமா அல்லது எதிர்க்கட்சியின் வாக்கு வங்கியை சிதைக்குமா என்ற கணக்கீடுகள் இருக்கும். ஆனால் விஜய்யை பொறுத்தவரை, அவர் யாருடைய ஓட்டுகளை பிரிக்கப் போகிறார் என்பதை யாராலும் துல்லியமாக ஊகிக்க முடியவில்லை. திராவிட கட்சிகளுக்கு மாற்றாக அவர் முன்வைக்கும் ‘மதச்சார்பற்ற சமூக நீதி’ மற்றும் ‘தமிழ் தேசியம்’ கலந்த கொள்கைகள் இரு துருவ அரசியலிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக, முதல்முறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகள் விஜய்யின் பக்கம் பெருமளவில் சாய வாய்ப்புள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த தேர்தல்களில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி பெற்று வந்த இந்த இளைஞர்களின் வாக்குகள், இப்போது ஒரு மூன்றாவது மாற்றத்தை தேட தொடங்கியுள்ளன. விஜய் இந்த இளைஞர் பட்டாளத்தை இலக்காக கொண்டே தனது காய்நகர்த்தல்களை செய்து வருகிறார். அவர் அமைதியாக இருப்பது என்பது செயலின்மை அல்ல, அது ஒரு மிகப்பெரிய புயலுக்கு முன்னால் நிலவும் அமைதி போன்றது என்று அவரது ஆதரவாளர்கள் நம்புகிறார்கள்.
அரசியல் களத்தில் அமைதியாக இருப்பது சில நேரங்களில் பலவீனமாக கருதப்பட்டாலும், விஜய்யை பொறுத்தவரை அதுவே அவரது மிகப்பெரிய பலமாக மாறியிருக்கிறது. அவர் பேச தொடங்கினால் விமர்சனங்கள் எழும், அந்த விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும், இது தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கும் என்பதை அவர் நன்கு உணர்ந்துள்ளார். அதற்கு பதிலாக, நேரடியாக தேர்தல் களத்தில் தனது பலத்தை காட்ட அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் மற்ற அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் யுக்திகளை வகுப்பதில் பெரும் குழப்பத்தை சந்தித்து வருகின்றன. எதிராளி யார் என்று தெரிந்தால் வியூகம் அமைக்கலாம், ஆனால் எதிராளியின் வேகம் என்னவென்று தெரியாதபோது தற்காப்பு ஆட்டமே ஆபத்தானது.
விமர்சகர்கள் கணிப்புப்படி, 2026 தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தலாக மட்டும் இருக்காது, அது தமிழக அரசியலின் அடுத்த 25 ஆண்டுகால போக்கை தீர்மானிக்கும் ஒரு தேர்தலாக அமையும். விஜய்யின் வருகை என்பது சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கும், பாமக போன்ற சாதி ரீதியிலான வாக்கு வங்கி கொண்ட கட்சிகளுக்கும் கூட சவாலாக அமையலாம். ஓட்டு பிரிப்பு என்பது ஒருபுறம் இருந்தாலும், ஒட்டுமொத்த வாக்கு சதவீதத்தில் விஜய் ஒரு கணிசமான இடத்தை பிடித்தால், அது கூட்டணி ஆட்சிக்கோ அல்லது ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்திற்கோ வழிவகுக்கும்.
இறுதியாக, விஜய் எனும் பிம்பம் திரையில் காட்டும் மாயையை தாண்டி, தேர்தல் களத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இன்னும் விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது. 2026 தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் அன்று, பல அரசியல் ஜாம்பவான்களின் கணிப்புகள் தவிடுபொடியாக்கப்படலாம். அமைதியாக இருந்து காய்நகர்த்தும் விஜய்யின் இந்த ‘சைலண்ட்’ அரசியல், வாக்கு எண்ணிக்கையின் போது ‘வயலண்ட்’ ஆக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழக மக்கள் ஒரு பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதும், அந்த மாற்றத்தின் முகமாக விஜய் இருப்பாரா என்பதும் அந்தத் தேர்தல் திருவிழாவில் தெரிந்துவிடும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
