$100,000 போனாலும் பரவாயில்லை.. அமெரிக்கர்களை வேலையில் இருந்து தூக்கிவிட்டு H-1B விசா வைத்திருக்கும் இந்தியர்களை வேலைக்கு எடுக்கிறதா டிசிஎஸ்? அமெரிக்கர்கள் அதிர்ச்சி.. செனட்டர்களின் அதிர்ச்சி குற்றச்சாட்டு..

இந்தியாவின் மிக பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டி.சி.எஸ். அமெரிக்காவில் H-1B விசா விவகாரம் தொடர்பாக அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. உலக அளவில் 12,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில்…

tcs

இந்தியாவின் மிக பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டி.சி.எஸ். அமெரிக்காவில் H-1B விசா விவகாரம் தொடர்பாக அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. உலக அளவில் 12,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் வேலைநீக்கம் செய்யப்படுபவர்கள் பெரும்பாலும் அமெரிக்கர்கள் என்ற குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் ஏற்கனவே வேலைவாய்ப்பு குறைந்து வரும் நிலையில் தற்போது நிலவும் வேலைவாய்ப்பு நெருக்கடிக்கு டி.சி.எஸ். போன்ற நிறுவனங்களின் செயல்பாடுகளே காரணம் என்று செனட்டர்கள் சார்லஸ் கிராஸ்லி மற்றும் ரிச்சர்ட் டர்பன் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

டி.சி.எஸ். நிறுவனம் உலக அளவில், குறிப்பாக அமெரிக்க ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அதே நேரத்தில், ஆயிரக்கணக்கான H-1B விசா வைத்திருப்பவர்களை பணியமர்த்துவதாகவும், புதிய விசாக்களுக்கு விண்ணப்பிப்பதாகவும் செனட்டர்கள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்களின் தங்கள் கடிதத்தில் “தொழில்நுட்ப துறையில் சில கவலைக்குரிய வேலைவாய்ப்பு போக்குகள் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். அமெரிக்காவில் தொழில்நுட்பத் துறை வேலையின்மை விகிதம் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதத்தை விட அதிகமாக உள்ளது. அத்துடன், STEM (அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினீயரிங், கணிதம்) துறையில் பட்டம் பெற்ற அமெரிக்க மாணவர்களின் வேலையின்மை விகிதமும் அதிகமாக உள்ளது.”

இந்த நேரத்தில் டி.சி.எஸ். சமீபத்தில் அமெரிக்க ஊழியர்கள் உட்பட உலகளவில் 12,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்தது. அதே நேரத்தில், நீங்கள் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்களுக்காக H-1B விசாக்களுக்கு விண்ணப்பித்து வருகிறீர்கள். 2025 நிதி ஆண்டில், டி.சி.எஸ். நிறுவனம் 5,550 H-1B ஊழியர்களை பணியமர்த்த ஒப்புதல் பெற்றுள்ளது. புதிய H-1B விசாக்களை பெறுவதில் இது இரண்டாவது பெரிய நிறுவனமாகும்.”

“இந்த இடங்களை நிரப்ப தகுதிவாய்ந்த அமெரிக்கத் தொழில்நுட்ப ஊழியர்களை டி.சி.எஸ். நிறுவனத்தால் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை எங்களால் நம்ப முடியவில்லை.”

மூத்த அமெரிக்க ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டு, புதிதாக பணியமர்த்தப்பட்ட தெற்காசிய H-1B ஊழியர்களுக்கு சாதகமாக செயல்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, டி.சி.எஸ். நிறுவனம் ஏற்கனவே சம வேலைவாய்ப்புக் கமிஷனின் விசாரணையில் உள்ளது. இந்த விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே அமெரிக்கர்களுக்குப் பதிலாக H-1B விசா வைத்திருப்பவர்களை பணியமர்த்துவது நிறுவனத்திற்கு சாதகமாக இருக்காது என்றும் செனட்டர்கள் எச்சரித்துள்ளனர்.

செனட்டர்கள் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க டி.சி.எஸ். நிறுவனத்திற்கு வாய்ப்பு அளித்துள்ளனர். வரும் அக்டோபர் 10-ஆம் தேதிக்குள் பதிலளிக்க கோரி, அவர்கள் ஒன்பது கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். அவற்றில் சில:

H-1B விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் முன், காலியாக உள்ள இடங்களை அமெரிக்க ஊழியர்களை கொண்டு நிரப்ப டி.சி.எஸ். முயற்சிக்கிறதா?

H-1B ஊழியர்களைக் கொண்டு ஏதேனும் அமெரிக்க ஊழியர்களை பணிநீக்கம் செய்திருக்கிறதா?

ஒரே தகுதியுடைய அமெரிக்க ஊழியர்கள் மற்றும் H-1B ஊழியர்கள் பெறும் சம்பளம் மற்றும் சலுகைகள் என்ன?

இந்த குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ள நிலையில், டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் சமீபத்தில் H-1B விசா விண்ணப்பங்களுக்கான கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தியிருப்பது இந்திய மற்றும் அமெரிக்கத் தொழில்நுட்பத் துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கர்களுக்குப் போதுமான வேலைகள் இருப்பதை உறுதி செய்வதற்காக H-1B ஊழியர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைக் கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம் என்று அமெரிக்க அரசாங்கம் கூறியது.

இந்த நிலையில் செனட்டர்களின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு டிசிஎஸ் என்ன பதில் சொல்ல போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.