அமெரிக்காவின் வாகன துறையின் எதிர்காலம் தற்போது மறுபடியும் எழுதப்பட்டு வருகிறது. அமெரிக்க தொழிலாளர்களை பாதுகாக்கும் கவசம் என்று ஒரு காலத்தில் வர்ணிக்கப்பட்ட வாகனத்துறை, இப்போது கூடுதல் வரிவிதிப்பால் ஒவ்வொரு தொழிற்சாலையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஃபோர்டு, ஜி.எம்., நிசான், சுபாரு மற்றும் ஸ்டெலாண்டிஸ் போன்ற முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கடுமையான நிதி இழப்புகளை சந்தித்து வருகின்றன. அதே சமயம், நுகர்வோர் கார் விலைகள் மிகப்பெரிய அளவில் உயர்ந்ததால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க வாகனத் துறையின் வீழ்ச்சி
ஃபோர்டு (Ford): சுமார் $1.5 பில்லியன் அளவுக்கு இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி.எம் (GM): மிச்சிகன், டெக்சாஸ் மற்றும் மிசௌரி ஆகிய மாநிலங்களில் உள்ள பல பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆலைகளை மூடி, பெரும் வேலை இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிசான் (Nissan): $4.5 பில்லியன் நிகர இழப்பைச் சந்தித்துள்ளதுடன், அமெரிக்காவில் 25,000 வேலைகளை இழந்துள்ளது.
சுபாரு மற்றும் ஸ்டெலாண்டிஸ் நிறுவனங்களும் தொடர்ச்சியான செலவு அதிகரிப்பால் திணறி வருகின்றன. இந்த நிகழ்வுகள், ஒரு தனிப்பட்ட பிரச்சனையாக இல்லாமல், அமெரிக்க வாகனத்துறையின் அமைப்பிலேயே ஏற்பட்டிருக்கும் ஒரு பெரிய சரிவை உணர்த்துகின்றன.
அமெரிக்க வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வீழ்ச்சியை சந்திக்கும் அதே வேளையில், கனடா இந்த சூழலை பயன்படுத்திக்கொள்ள தயாராக உள்ளது. அமெரிக்க வாகனங்கள் நிறுவனங்களை ஈர்க்கும் வகையில், கனடா அரசு சுமார் $590 மில்லியன் மதிப்பிலான ஊக்கத் தொகைகளை அறிவித்துள்ளது. கனடாவின் இந்த முயற்சி, அமெரிக்காவில் இருந்து தொழில்களை கனடாவுக்கு மாற்றுவதற்கான ஒரு பெரிய உந்துதலாக உள்ளது.
அமெரிக்க சந்தையை விட்டு முக்கிய நிறுவனங்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற முடிவெடுத்துள்ளன. பல நிறுவனங்கள் அமெரிக்க வாகன சந்தையை ஒரு போர்க்களம் போல கருதி, அங்கிருந்து பின்வாங்க தொடங்கின.
வோல்க்ஸ்வாகன் நிறுவனம் அமெரிக்காவிற்கான தங்கள் வாகனங்களின் இறக்குமதியை திடீரென நிறுத்தியது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம், ஒரு மாதத்திற்கு அமெரிக்காவிற்கு எஸ்.யூ.வி. வாகனங்களை அனுப்புவதை நிறுத்தி வைத்தது.
நிசான் நிறுவனத்தின் இன்ஃபினிட்டி பிரிவு, மெக்சிகோவில் அமெரிக்காவிற்காகத் தயாரித்து வந்த இரண்டு எஸ்.யூ.வி. மாடல்களின் உற்பத்தியை நிறுத்தியது.
வோல்வோ நிறுவனம், சீனாவில் தயாரிக்கப்பட்ட ‘S90’ செடான் காரை அதன் அமெரிக்க பட்டியலில் இருந்து முழுவதுமாக நீக்கியது. ஏனெனில், அந்த காருக்கு 125% வரி விதிக்கப்பட்டது.
இந்தத் தாக்கம் அமெரிக்கத் துறைமுகங்கள் மற்றும் கார் விற்பனை நிலையங்களிலும் எதிரொலித்தது. இறக்குமதி கார்களின் இருப்பு குறைந்து, வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் விநியோகங்களை வேறு சந்தைகளுக்கு திருப்பிவிட்டன.
இறக்குமதி வரிகளின் நேரடி விளைவாக, புதிய வாகனங்களின் விலைகள் $5,000 முதல் $8,600 வரை அதிகரித்துள்ளன. இது நுகர்வோர் மத்தியில் வாகனங்களை வாங்கும் சக்தியை பெரிதும் பாதித்துள்ளது. கார் கடன், காப்பீடு மற்றும் கார் விற்பனையாளர்களின் எதிர்காலம் என அனைத்திலும் இந்த விலை உயர்வு ஒரு நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
“ஏன் கார் விலைகள் இவ்வளவு அதிகமாக உள்ளன? என்பதற்கு ஒரே காரணம் தான். டிரம்ப் பிறநாடுகள் மீது விதித்த அதிக வரிவிதிப்பு தான். இந்தப் பிரச்சனை வெறும் கார்களைப் பற்றியது மட்டுமல்ல. இது வேலைகள், குடும்பங்கள் மற்றும் அமெரிக்க கனவின் எதிர்காலத்தை பற்றியது. இந்த நிலைமை டெட்ராய்ட் முதல் டொராண்டோ வரை அனைத்து இடங்களிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வர்த்தக போரின் மிக மோசமான விளைவு, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலை இழப்புதான். ஸ்டெலாண்டிஸ் நிறுவனத்தில் 900-க்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் பணிநீக்கம் செய்யப்பட்டனர். நிசான் நிறுவனம் உலகம் முழுவதும் 20,000 வேலைகளை குறைப்பதாக அறிவித்தது. இதில், ஆயிரக்கணக்கானோர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.
இந்த வேலை இழப்புகள், தொழிற்சாலைகளை நம்பி வாழும் பல சமூகங்களுக்கு பெரும் துயரத்தை கொண்டு வந்துள்ளன. வெளிநாட்டு போட்டியாலோ அல்லது பொருளாதார மந்தநிலையாலோ அல்லாமல், தங்கள் சொந்த நாட்டின் வர்த்தக கொள்கைகளால் ஏற்பட்ட இந்த வலி, பல குடும்பங்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
