சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரு புதிய வழித்தடங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயாராக உள்ளது. லைட் ஹவுஸ் முதல் உயர் நீதிமன்றம் வரையிலும், தாம்பரம் – கிண்டி – வேளச்சேரி வரையிலான புதிய வழித்தடங்களுக்கும் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தங்களை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சமீபத்தில் வழங்கியுள்ளது.
விரிவாக்கப் பணிகள்:
தடம் 4 விரிவாக்கம் – லைட் ஹவுஸ் முதல் உயர் நீதிமன்றம் வரை: மெரினா கடற்கரை மற்றும் தலைமைச் செயலகம் வரை சுமார் 7 கி.மீ. தொலைவுக்கு இந்த புதிய தடம் அமையவுள்ளது. இது தினசரி பயணிகளுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் நகர்ப்புற பயணத்தை எளிதாக்கும்.
தாம்பரம் – கிண்டி – வேளச்சேரி தடம்: சுமார் 21 கி.மீ. நீளம் கொண்ட இந்த தடம், புறநகர் பகுதிகளான தாம்பரம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி ஆகியவற்றை கிண்டி மெட்ரோ நிலையத்துடன் இணைக்கும். தாம்பரம், மேடவாக்கம், வேளச்சேரி மற்றும் கிண்டி ஆகிய இடங்களில் பலவழி போக்குவரத்து ஒருங்கிணைப்பை இது எளிதாக்கும்.
திட்ட அறிக்கை மற்றும் ஒப்பந்தங்கள்:
மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த இரு வழித்தடங்களுக்கான திட்ட அறிக்கையை தயாரிக்கும் ஆலோசகராக, மெஸ்ஸர்ஸ் சிஸ்ட்ரா எம்.வி.ஏ. கன்சல்டிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான ஒப்பந்த மதிப்பு முறையே ரூ.38.20 லட்சம் மற்றும் ரூ.96.19 லட்சம் ஆகும். இந்த ஆய்வுகள் 120 நாட்களில் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
