ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம், தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத திருப்புமுனையாக அமைந்துள்ளது. சுமார் 31 நிமிடங்கள் விஜய் ஆற்றிய அந்த அனல் பறக்கும் உரை, வெறும் அரசியல் பேச்சு மட்டுமல்ல; அது ஒரு புதிய தலைமுறைக்கான போர் முழக்கமாகவே பார்க்கப்படுகிறது.
விக்கிரவாண்டி மாநாடு, கரூர் சம்பவங்களுக்கு பிறகு விஜய் எப்போது பேசுவார், என்ன பேசுவார் என்று காத்திருந்த லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு, ஈரோடு மண் ஒரு மிகப்பெரிய அரசியல் விருந்தை அளித்துள்ளது. பேச்சின் ஒவ்வொரு நொடியிலும் தெறித்த அந்த வேகம், சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப் தளங்களில் அடுத்த சில நிமிடங்களிலேயே காட்டுத்தீயாய் பரவி, ஒட்டுமொத்த இந்தியாவையே தமிழகத்தின் பக்கம் திரும்ப வைத்துள்ளது.
விஜய்யின் இந்த உரையை அவர் மீது விமர்சனம் வைப்பவர்கள் கூட உன்னிப்பாக கவனித்தனர் என்பதே அதன் மிகப்பெரிய வெற்றி. பொதுவாக அரசியல் பேச்சுகள் ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பை ஏற்படுத்தும், ஆனால் விஜய்யின் பேச்சு ஒரு திரைப்படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை போல, மக்கள் மனதோடு நேரடியாக உரையாடியது. “நான் எவ்வளவு நேரம் பேசுகிறேன் என்பதை விட, என்ன பேசுகிறேன் என்பதை பாருங்கள்” என்று அவர் சொன்னபோது, அங்கிருந்த 35,000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் எழுப்பிய கரவொலி விண்ணை பிளந்தது. இதுவரை அவரை ஒரு நடிகராக மட்டுமே பார்த்தவர்கள் கூட, ஈரோடு மேடையில் ஒரு முதிர்ச்சியான, அதேசமயம் ஆக்ரோஷமான அரசியல் தலைவராக ரசித்தனர்.
இந்த கூட்டத்தில் விஜய் கையில் எடுத்த “தீய சக்தி – தூய சக்தி” என்ற நரேட்டிவ், திராவிட கட்சிகளை நிலைகுலைய செய்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் திமுகவை வீழ்த்த பயன்படுத்திய அதே அஸ்திரத்தை, இன்று விஜய் மிக லாவகமாக தன் கையில் எடுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி கூட திமுகவை இவ்வளவு ஆக்ரோஷமாக விமர்சனம் செய்ததில்லை.
“திமுக ஒரு தீய சக்தி; தவெக ஒரு தூய சக்தி” என்று அவர் மூன்று முறை முழங்கியபோது, அது திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் பல இடங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவை விமர்சிக்காமல் தவிர்த்ததன் மூலம், அக்கட்சியின் தொண்டர்களை தன் பக்கம் ஈர்க்கும் ஒரு தந்திரமான மற்றும் புத்திசாலித்தனமான நகர்வையும் விஜய் மேற்கொண்டுள்ளார். மேலும் தேர்தலுக்கு பின் கூட்டணிக்கும் விஜய் மனதில் ஒரு திட்டம் இருக்கலாம் என கூறப்படுகிறது.
தமிழக அரசியலில் ஜாதி ரீதியாகவும், மதம் ரீதியாகவும் மக்களைப் பிரித்து அரசியல் செய்யும் சிறிய கட்சிகளுக்கும், ஜாதி அமைப்புகளுக்கும் இந்த கூட்டம் ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. “நாங்கள் யாரையும் சார்ந்து இல்லை; எங்களை மக்கள் சார்ந்து இருக்கிறார்கள்” என்ற தொனியில் விஜய் பேசியது, இனி வரும் காலங்களில் ஜாதி அரசியல் தமிழகத்தில் எடுபடாது என்பதற்கான சமிக்ஞையாகவே பார்க்கப்படுகிறது. கொள்கை ரீதியாக தந்தை பெரியாரையும், அண்ணாவையும் முன்னிறுத்தி, அதேசமயம் ஆன்மீகத்தையும் மதிக்க தெரிந்த ஒரு புதிய அரசியல் பாதையை விஜய் வகுத்துள்ள விதம், சிறிய கட்சிகளை தங்களது அரசியல் எதிர்காலம் குறித்து யோசிக்க வைத்துள்ளது.
என்ன ஒரு கூட்டம்டா சாமி! 19 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட திடல் மனித கடலாக காட்சியளித்தது. முந்தைய கூட்டங்களில் ஏற்பட்ட குளறுபடிகளை கருத்தில் கொண்டு, இம்முறை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் மேற்பார்வையில் செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பிரமிக்க வைத்தன. பாஸ், க்யூஆர் கோடு போன்ற எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி மக்கள் தன்னிச்சையாக திரண்டு வந்த அந்த அன்பு, விஜய்யின் 33 ஆண்டு கால உழைப்பிற்கு மக்கள் கொடுத்த அங்கீகாரமாகவே தெரிகிறது. கூட்டத்தில் இருந்த பெண்கள் மற்றும் இளைஞர்களின் கண்களில் தெரிந்த அந்த வெறித்தனமான நம்பிக்கை, 2026 தேர்தல் களம் மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
முடிவாக, ஈரோடு பொதுக்கூட்டம் என்பது வெறும் தேர்தல் பிரச்சார தொடக்கமல்ல; அது ஒரு பெரும் அரசியல் எழுச்சியின் அடையாளம். விஜய் பேசிய 31 நிமிடங்களும் தமிழகத்தின் அடுத்த 30 ஆண்டுகால அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளன. திமுக, அதிமுக என பாரம்பரிய கட்சிகளின் பிடியில் இருந்த தமிழக அரசியல் களம், இன்று “தவெக” என்ற ஒற்றை புள்ளியை நோக்கி நகர தொடங்கியுள்ளது. இந்த எழுச்சியும், மக்கள் காட்டிய வெறித்தனமான அன்பும் 2026ல் ஒரு புதிய சரித்திரத்தை படைக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
