தமிழக அரசியல் களத்தில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதன் இரண்டாவது மாநில மாநாட்டை மதுரையில் நடத்தவுள்ளது. 120 ஏக்கர் பரப்பளவில், 15 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்புடன் பிரம்மாண்டமாக நடத்த அக்கட்சி தயாராகி வருகிறது. முதல் மாநாட்டை விட இந்த மாநாடு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இது தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன.
கூட்டணியில் குழப்பங்கள்: திமுகவுக்கு சவால்:
தற்போது தமிழகத்தில் கூட்டணி அரசியல் பல்வேறு குழப்பங்களை சந்தித்து வருகிறது. அதிமுக ஒருபுறம் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மிகப்பெரிய தவறை செய்துவிட்டது என்று ஒரு சாரார் கருதுகின்றனர். இந்த கூட்டணிக்குள்ளேயே உரசல்கள் நீடிக்கின்றன. பாட்டாளி மக்கள் கட்சி இன்னும் தனது கூட்டணி முடிவை எடுக்கவில்லை. நாம் தமிழர் கட்சியின் சீமான் தனித்து நிற்பதில் உறுதியாக இருக்கிறார். இவையெல்லாம் ஆளும் திமுகவுக்கு சாதகமாக அமையும் என்று பொதுவாக கருதப்பட்டாலும், விஜய்யின் அரசியல் நகர்வுகள் திமுகவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக மதுரை தவெக மாநாடு திமுகவின் வயிற்றில் புளியை கரைக்கும். இந்த மாநாட்டில் தவெகவின் பலம், மக்கள் ஆதரவு, தொண்டர்களின் எழுச்சி என அனைத்தையும் பிரதிபலிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.
விஜய்யின் வருகை: திராவிடக் கட்சிகளுக்கு புதிய சவால்:
விஜய்யின் அரசியல் வருகை திமுகவுக்கு மட்டுமின்றி, அதிமுகவுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. தமிழக வரலாற்றில், இரண்டு திராவிடக் கட்சிகளையும் ஒரே நபர் பாதிப்பிற்கு உள்ளாக்குவது இதுவே முதல் முறை என்றும் அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர். விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ இரண்டு பிரதான திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கிகளிலும் கணிசமான அளவில் பிளவை ஏற்படுத்தி, புதிய அரசியல் அலைகளை உருவாக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
விஜய்யின் வெற்றி வியூகம்: கூட்டணி அவசியமா?
விஜய் முதல் தேர்தலிலேயே வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், தனித்து போட்டியிடும் ரிஸ்க்கைக் கைவிட்டுவிட்டு, அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சில அரசியல் விமர்சகர்கள் ஆலோசனை கூறுகின்றனர். முதல் தேர்தலை சந்திக்கும் ஒரு புதிய கட்சிக்கு, ஒரு பெரிய கட்சியின் ஆதரவு புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும் என்பது அவர்களின் கருத்து.
ஒருவேளை அதிமுக, பாஜகவை கழட்டிவிட்டு, தமிழக வெற்றி கழகம், பாமக, தேமுதிக மற்றும் பிற கட்சிகளை இணைத்து ஒரு மெகா கூட்டணியை உருவாக்கினால், அது திமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். அத்தகைய ஒரு கூட்டணி திமுகவை அரசியலில் தனிமைப்படுத்தக்கூடிய சூழலை உருவாக்கும் என்றும் அரசியல் கணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
விஜய்யின் அரசியல் எதிர்காலம், தமிழகத்தின் அரசியலை எந்த அளவுக்கு மாற்றியமைக்கும் என்பதை இந்த இரண்டாவது மாநில மாநாடும், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலும் தீர்மானிக்கும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
