இன்று காலை தமிழக சட்டசபை கூடிய நிலையில் ஆளுநர் உரை வாசிக்கும் முன்பாகவே கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கீதத்தை இசைக்கச் சொல்ல அதற்கு முதலமைச்சரும், சபாநாயகரும் உடன்படாத நிலையில் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்தார் ஆர்.என்.ரவி. ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த செயலை பல்வேறு கட்சித் தலைவர்களும் விமர்சித்துள்ளனர். மேலும் இதுகுறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும் சட்டமன்றத்தில் துரைமுருகனும் விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆளுநர் வெளிநடப்பு குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் தனது கருத்தினை முன்வைத்துள்ளார். அதில்,
”தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தமிழகச் சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால மரபு. பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.
ஆளுநர் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்..? முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும் பொழுதும், மரபு சார்ந்த செயல்பாடுகளில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவாவது தொடர்கதையாகி வருகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, இந்தப் போக்கு கைவிடப்பட வேண்டும். மக்கள் பிரச்சனைகள் குறித்தான விவாதங்களே இடம் பெற வேண்டும்.
ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், அதன் நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நேரலை ஒளிபரப்பை நிறுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
சட்டமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஜனநாயக முறையில் நடைபெறும் விவாதங்களை, வெளிப்படையாகத் தமிழக மக்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும்.
எனவே சட்டமன்ற நிகழ்ச்சிகள் முழுவதையுமே எந்தவித இடையூறும் இல்லாமல் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.”
இவ்வாறு அந்தப் பதிவில் விஜய் தெரிவித்திருக்கிறார்.